திருவிழா என்றாலே பொதுவாக கிராமங்களில் அதிகபட்சமாக 10 நாட்கள் நடைபெறும் கோவில் திருவிழாக்கள் தான் நினைவுக்கு வரும். அந்த நேரத்தில் அந்த ஊரே களைகட்டிவிடும். பலவிதமான கேளிக்கை விளையாட்டுக்கள், திரைப்படங்கள், இன்னிசைக் கச்சேரிகள் மற்றும் ஆடல் பாடல்கள் என 10 நாளுக்கும் கொண்டாட்டம் தான். ஊர்மக்கள் யாரும் ஊரைவிட்டு வெளியே செல்லாமல் அனைத்து வைபவங்களிலும் கலந்து கொள்வார்கள். ஸ்பெசலாக பலவிதமான கடைகள் முளைத்திருக்கும் பகுதிகளைச் சுற்றி அந்த ஊர் இளம் காடையர்கள், கன்னியர்கள் கலக்கல் உடைகளில் கூட்டம் கூட்டமாக சுற்றிவந்து லந்து கொடுப்பார்கள்.
அடுத்து முக்கியமான திருவிழா தேர்தல் திருவிழா. இதுவும் அதிகபட்சம் 10 நாட்கள் நடைபெறும். தேர்தலுக்கு முந்தைய நாட்களில், கடந்த 5 வருடங்களாக தொகுதிப் பக்கமே கால் வைத்திராத சமஉ'க்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவேன் என்ற குரலோடு தங்கள் ஜால்ராக்களுடன் விதவிதமான வாகன அணிவகுப்பில் வருவார்கள்.10 ரூபாயைக் கண்டே பல நாளான விவசாயி மடியில் கனமான காந்தி காட்சி தருவார். அதிகபட்சம் அனைத்துக்கட்சி தலைவர்களின் தரிசணத்தையும் காணமுடியும். தேர்தல் முடியும் வரை ஊர் முழுவதும் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு ஊரே ஜொலிக்கும். டாஸ்மாக் கடைகளில் வியாபாரம் களைகட்டும். ஒளிபெருக்கியுடன் வாகனங்கள் உங்கள் வீட்டுப் பிள்ளைக்கு ஓட்டுப்போடுங்க என கதறியபடி வலம் வரும். சினிமா நட்சத்திரங்கள் ஊர் ஊராய் வலம் வந்து தங்கள் அபிமான தலைவருக்கு வாக்கு சேகரிப்பார்கள்.தினம் தினம் விடிய விடிய அடாது மழை தான். எல்லாக் கட்சிக்கூட்டங்களிலும் கலந்து கொண்டு எல்லாத்தலைவர்களுக்கும் கை அசைத்து, எல்லா கட்சியினரிடமிருந்தும் காசு வாங்கிக்கொண்டு அவர்களில் குலுக்கல் முறையில் யாரையாவது தேர்வு செய்து வாக்களிப்பது தான் தேர்தல் திருவிழா.

அது என்னய்யா பதிவுத்திருவிழா எனக் கேட்போருக்கு தமிழ்மணத்தால் இரண்டு மாதங்கள் நடத்தப்பட இருக்கும் பதிவுப் போர்க்களத்தின் சிறந்த இடுகைகளுக்கான கடும் வாக்கெடுப்பு தான் இந்தப்பதிவுத் திருவிழா. திசம்பர் மற்றும் சனவரி மாதங்களில் நடத்தப்பட்டு கடந்த வருடத்தின் 32 சிறந்த இடுகைகளைத் தேடும் இந்தத் திருவிழாவிற்கான அறிவிப்பு நோட்டீஸ் வெளியானதுமே பதிவர்களிடம் மகிழ்ச்சி இப்பவே களைகட்ட ஆரம்பித்து விட்டது.
பொதுவாக ஒரு போட்டி என அறிவிக்கப்பட்டால் அதற்கென மெனக்கெட்டு விடியவிடிய தூக்கமில்லாமல் விட்டத்தைப் பார்த்து சிந்தித்து சிற்பம் செதுக்குவது போல பார்த்துப் பார்த்து செதுக்கி ஸ்பெசலாகத் தயாரித்து வெளியிடலாம். ஆனால் போட்டிக்கென எழுதிய இடுகையாக இல்லாமல் இயல்பான சூழ்நிலைகளில் இயல்பான மனநிலையுடன் எழுதிய இயல்பான இடுகைகள் மொத்தத்தையும் அலசி ஆராய்ந்து அதிலே ஒன்றைத் தேர்ந்தெடுத்து போட்டிக்காக அனுப்பவதென்பது உண்மையிலே பாராட்டத் தக்க தமிழ்மணத்தின் ஏற்பாடாகும். இதன் மூலம் போட்டிக்கென எழுதப்பட்ட சிறப்புபதிவாக இல்லாமல் நாம் கடந்த வருடத்தில் எழுதிய ஒரு பதிவு சிறப்பிக்கப்படுகிறது என மகிழ்ச்சியடையலாம்.
அந்த வகையில் தமிழ்மணம் மொத்தம் 16 தலைப்புகளின் கீழ் இந்தப் போட்டியை அறிவித்திருக்கிறார்கள். இந்த தலைப்புகளை மூன்று பிரிவுகளாக கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.

1)கடும் போட்டி நிலவக்கூடிய தலைப்புகள்:
1. படைப்பிலக்கியம் (கதை, கவிதை, போன்றவை)
3. நூல், திரைப்படம் அறிமுகம்/விமர்சனம்/திறனாய்வுகள்
5. பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள்
6. செய்திகள்/நிகழ்வுகளின் அலசல்கள்
7. அரசியல், சமூக விமர்சனங்கள்
9. தலித் மக்களின் பிரச்சனைகள், மனித உரிமை, நிறவெறி தொடர்பான கட்டுரைகள்
13. சுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம்
12. நகைச்சுவை, கார்ட்டூன்
15. தமிழ்க்கணிமை, தமிழ் விக்கிப்பீடியா, தமிழ் இணையம் தொடர்பான கட்டுரைகள்
இந்தப் பிரிவிலே உள்ள தலைப்புகளின் கீழ் அனைத்துப் பதிவர்களும் அதிகதிமாக எழுதிக் குவித்திருக்கின்றனர் என்பது தெரிந்த விசயமே. ஆனால் தனித்தனியாக இருந்திருந்தால் நன்றாயிருக்குமே என்ற தலைப்புகள் ஒன்றோடு ஒன்று பிணைந்திருக்கின்றன. உதாரணமாக ஒரு நல்ல கதை, ஒரு நல்ல கவிதையை விழுங்கிவிடும். அதேபோல சினிமா விமர்சனம், நல்ல புத்தக விமர்சனத்தை விழுங்கிவிடும். பகுத்தறிவு ஆன்மீகத்தை விழுங்கிவிடும். இவையெல்லாம் தனித்தனியாய் இருந்தால் ஒவ்வொன்றிலிருந்தும் சிறந்தவை முதன்மைபடுத்தப் படலாம். ஆனால் அதையும் மீறி தெளிவான படைப்புகள் எவ்வளவு தடைகள் போட்டாலும் உடைத்துக்கொண்டு வெளியேறிவிடும் என்பதை மறுக்கமுடியாது.
2) ஓரளவு போட்டி நிலவும் தலைப்புகள்:
4. அறிவியல், விவசாயம், சுற்றுச்சூழல், மருத்துவம், தொழில்நுட்பக் கட்டுரைகள்
8. பெண்கள் பிரச்னைகள், திருநங்கைகள் வாழ்வியற் சிக்கல்கள்
16. விளையாட்டு, உடல் ஆரோக்கியம், உடல்நலம் மற்றும் சமையல் தொடர்பான கட்டுரைகள்
அறிவியல், விவசாயம், சுற்றுச்சூழல், மருத்துவம்,பெண்கள் பிரச்னைகள், திருநங்கைகள் வாழ்வியற் சிக்கல்கள் போன்றவை மிகக்குறைவே! விளையாட்டு, உடல் ஆரோக்கியம், உடல்நலம் மற்றும் சமையல் தொடர்பான கட்டுரைகள் ஓரளவிற்கு எதிர்பார்க்கலாம். மருத்துவம் என்றாலே வலைப்பூக்களில் இன்று வலம்வருவது பாலியல் சம்பந்தமாகத் தான். செக்ஸ், கற்பழிப்பு, உடலுறவு, முதலிரவு, கள்ளத்தொடர்ப்பு, காமம் போன்ற வார்த்தைகளை தலைப்புகளில் பயன்படுத்தி வரும் இடுகைகள் அதிகமாகப் படிக்கப்படுகிறது அல்லது பார்க்கப்படுகிறது. இதனால் சாதாரண மருத்துவ இடுகைகளை எழுதி ஓய்ந்த கைகள் இன்று பலான மருத்துவ இடுகை லேகியங்களை விற்பனை செய்ய ஆரம்பித்து விட்டன. ஆக மருத்துவம் என்ற தலைப்பிலே இதுவும் சேருமா?
3) அதிகம் போட்டியில்லாத தலைப்புகள்:
2. காட்சிப் படைப்புகள் (ஓவியம், ஒளிப்படம், குறும்படங்கள்)
10. ஈழ மக்களின் வாழ்வியல், மனித உரிமை, சமூக, பொருளாதாரச் சிக்கல்கள்
11. தமிழ் மொழி, கலாச்சாரம், வரலாறு, தொல்லியல்
14. பொருளாதாரம், வணிகம் தொடர்பான கட்டுரைகள்
வாக்குகளைப் பொருத்தவரை தமிழகத்தின் பெரிய கட்சிகளைப் போல தங்களுக்கென சொந்தமாக நிலையான வாக்குவங்கியை வைத்திருக்கும் மூத்தபதிவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். ஆனால் மக்களின் ரசனை வாக்குகளை மட்டுமே நம்பி சுயேட்சையாக போட்டியிடும் என்போன்ற புதிய பதிவர்களுக்கு வாக்குகள் கிடைப்பது கொஞ்சம் கடினம் தான். பார்க்கலாம் தமிழ்மணம் போட்டிகளில் பரிசுகளை வெல்வதை விட நம் சிறந்த பதிவுகளை அதிலே பதிப்பதே கொஞ்சம் பெருமை தான்.
ஒவ்வொரு பதிவரும் இரண்டு பிரிவுகளில் மட்டுமே போட்டியிட முடியும் என்பது வரவேற்கத்தக்கதே. இதன் மூலம் அனைத்துத் தலைப்புகளிலும் ஒரே பதிவரின் முற்றுரிமை தவிர்க்கப்படலாம். முதல்பரிசு ரூ1000, இரண்டாம் பரிசு ரூ500 என பரிசுகளை புத்தகமாக வழங்கி சிறப்பிக்க இருக்கிறது தமிழ்மணம். ஒருவேளை ஈழத்தைச் சார்ந்த ஆஸ்திரேலியா வாழ் பதிவர் முதல்பரிசை வென்று விட்டால் அவர் எப்படி சென்னை நியூ புக்லேண்டில் புத்தகத்தை வாங்கிக்கொள்வார் என்ற கேள்விகள் ஒருபக்கம் எழுந்தாலும் நல்லது நடக்கட்டும், நன்மை பிறக்கட்டும், உண்மை வெல்லட்டும், தமிழே உயரட்டும் என தமிழையும் தமிழ்மணத்தையும் வாழ்த்தி போட்டிகளை எதிர்கொள்வோம் வாருங்கள் நண்பர்களே.
திருவிழா அட்டவனை:
இடுகைகள் பரிந்துரை - திசம்பர் 5 முதல் திசம்பர் 12 வரை
முதல் கட்ட வாக்கெடுப்பு - திசம்பர் 16 முதல் திசம்பர் 30 வரை
இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு - சனவரி 2 முதல் சனவரி 12 வரை
விருதுகள் முடிவுகள் அறிவிப்பு - சனவரி 16


போட்டி குறித்த தகவல்கள் முழுதும் பகிர்ந்தமைக்கு நன்றி நிஜாம்.
கண்டிப்பா என் வாக்கு உண்டு
போட்டியில கலந்துகொள்ளதான் தகுதியில்லை ஓட்டுப்போடவாவது உரிமை இருக்குன்றது பெருமையா இருக்கு எனக்கு...
போட்டியில் கலந்து கொள்ளபோகும் அனைத்து பதிவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்....
தங்களின் இந்த கட்டுரை அழகாகவும்,அருமையாகவும் ,தெளிவாகவும்,இருந்தது.போட்டி குறித்த தகவல்களை முழுமையாக அறிய முடிந்ததது.
அன்புடன்
அபுல்பசர்.
விரிவான பகிர்வுக்கு நன்றி நிஜாம்
//வானம்பாடிகள் said...
போட்டி குறித்த தகவல்கள் முழுதும் பகிர்ந்தமைக்கு நன்றி நிஜாம்.//
அண்ணே! கலந்துகிட்டு கலக்குங்க
//
பிரியமுடன்...வசந்த் said...
கண்டிப்பா என் வாக்கு உண்டு
போட்டியில கலந்துகொள்ளதான் தகுதியில்லை ஓட்டுப்போடவாவது உரிமை இருக்குன்றது பெருமையா இருக்கு எனக்கு...//
என்னங்க வசந்த் சார் இப்படி சொல்லிட்டீங்க. தகுதியில்லை என்றெல்லாம் யாரும் இல்லை.
//அபுல் பசர் said...
தங்களின் இந்த கட்டுரை அழகாகவும்,அருமையாகவும் ,தெளிவாகவும்,இருந்தது.போட்டி குறித்த தகவல்களை முழுமையாக அறிய முடிந்ததது.
அன்புடன்
அபுல்பசர்.//
நன்றி அண்ணே! நீங்களும் போட்டியில் கலந்துக்குங்க.
// S.A. நவாஸுதீன் said...
விரிவான பகிர்வுக்கு நன்றி நிஜாம்//
நன்றி நவாஸ். மறக்காம கலந்துக்குங்க.