தொலைக்காட்சி சேனல்களில் பெரியவை,சிறியவை,நடுத்தரமானவை என மூன்று வகைகள் இருக்கின்றன. இதிலே பெரிய சேனல்களுக்கும் நடுத்தர சேனல்களுக்கும் எவ்விதமாத கவலையும் இல்லை. நல்ல விளம்பரங்களும் கிடைக்கும். அதே நேரம் பே சேனலும் ஆக்கிவிடலாம். ஆனால் சிறிய சேனல்களின் நிலையோ பெரிய போராட்டம். இவர்களிடம் திரைப்படங்களும் இருக்காது, நாடகங்களும் இருக்காது, விளம்பரங்களும் இருக்காது. அதனால் மக்கள் மத்தியில் இவர்களுக்கு ரேட்டிங் குறைவு தான். அதன் காரணமாக இவர்களை விளம்பரதாரர்களும் கண்டுகொள்வதில்லை. ஒரு தொலைகாட்சி சேனல் நடத்துவதென்பது சாதாரண விசயம் அல்ல. தொகுப்பாளர்களின் ஊதியம்,சாட்டிலைட் வாடகை என எக்கச்சக்கமான செலவுகள் இருக்கின்றன.இந்த செலவினங்களை சமாளிக்க இவர்கள் என்ன தான் செய்யமுடியும்? லண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் ஜீடிவி கூட இந்த நிதிநெருக்கடி நிலையை சந்தித்து கரம் கொடுப்போம் வடம்பிடிப்போம் என நிதிகேட்டு அழைப்பு விடுத்ததை யாரால் மறக்கமுடியும்?

பசியாய் இருப்பவனுக்கு பழையசோறு பிரியாணி என்பதைப் போல விளம்பரங்களே இல்லாத இந்தச் சேனல்களுக்கு முட்டுக்கொடுத்து தூக்கி நிறுத்த வந்தவர்கள் தான் நமது தெய்வீக மருத்துவர்கள். மேற்படி சேனல்களில் மிகக்குறைந்த கட்டணத்தில் பிரைம் டயத்தை கூட வாங்கி விடுகின்றனர். இந்த சேனல்களில் இவர்களின் அலப்பறை அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இவர்கள் முக்கியமாக குறிவைக்கும் பிரச்சனை ஆண்மைக்குறைவு, நரம்புத்தளர்ச்சி, குழந்தைப்பேறின்மை தான். இதற்காக இவர்கள் விதவிதமான நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.
இரவு பகல் என நேரம்காலம் இல்லாமல் என்னேரமும் திரையில் வந்து இவர்கள் கொடுக்கும் இம்சைக்கு அளவேயில்லை. ஒரு நேரத்தில் குடும்பப் பத்திரிக்கைகள் என்ற பெயரில் வெளியான சில மஞ்சல் பத்திரிக்கைகளில் பக்கத்திற்குப் பக்கம் நடிகைகளின் அரை நிர்வாணப் படங்களோடு இவர்களின் விளம்பரங்களும் இடம்பெற்றிருக்கும். அது ஏன் என்று அப்போது எனக்குப் புரியவில்லை. இப்போது புரிகிறது. ஹோண்டா கம்பெனி காருக்கு எம்ஆர்எஃப் டயரை இணைத்தது போல அந்த பலான போஸ்டர்களால் வரும் விளைவிற்கு பரிகாரமாக அந்த மேற்படி விளம்பரங்கள் இடம்பெற்றிருக்குமோ என எண்ணத்தோன்றுகிறது. காலங்காலமாய் பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்துவந்த இவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துவிட்டது இந்த சேனல்கள்.

பின்வரும் நிகழ்ச்சியில் வரும் அல்டாப்பு மருத்துவர் அள்ளிவிடும் அண்டப்புளுகு, ஆகாசப்புளுகுகள் அனைத்தும் அவரின் சொந்தக் கற்பனையே! எக்காரணம் கொண்டும் அதற்கு எங்கள் சேனல் பொறுப்பேற்காது என்ற டைட்டில் கார்டுடன் நிகழ்ச்சி துவங்குகிறது.எல்லா நேரங்களிலும் இவர்களது நிகழ்ச்சிகளில் இவர்களிடம் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் (குணமடைந்தவர்கள் என அவர்களால் கூறப்படுபவர்களின்) பேட்டி ஒளிபரப்பாகிறது. அதிலே பேசும் குணமடைந்த பயணாளிகள் எவ்விதமான தங்கு தடங்களும் இன்றி மிகமிக எளிமையாக மனப்பாடம் செய்ததைப் போல ஒப்பிக்கின்றனர். அது மட்டுமின்றி தங்களுக்கு குழந்தைப் பேறின்மை என்பதை வெட்கமில்லாமல் தொலைக்காட்சியில் சொல்ல யாருக்குத்தான் மனம் வரும்? ஆனால் இவர்கள் பகிரங்கமாக அறிவிக்கின்றனர்.
எப்படியும் 3 மணி நேரமாவது செலவிட்டால் தான் அரைமணி நேரம் நிகழ்ச்சி கிடைக்கும். அப்படியென்றால் பேட்டி கொடுப்பவர்கள் எல்லாம் வேலையற்றவர்களா? முக்கியமாக மேற்படி வைத்தியர்கள் அனைவரும் என்னேரமும் பிசியாக இருக்கக் கூடியவர்கள். எப்படி இவர்களால் ஒவ்வொரு தொலைக்காட்சிக்கும் நிகழ்ச்சி தயாரிக்க முடிகிறது? எனக்குத் தெரிந்தவரை டிவி சூட்டிங்கள் அதிகபட்சம் நள்ளிரவில் தான் எடுக்கப்படுகின்றன. அப்படியானால் குடும்பப் பெண்கள் நள்ளிரவில் வந்து நடித்துக்கொடுக்கிறார்களா? ஆக இவர்களின் விளம்பரங்களில் நடிப்பவர்கள் எல்லாம் நிச்சயமாக ஜூனியர் ஆர்டிஸ்டாகத் தான் இருப்பார்கள் என்பது என்னுடைய கருத்து.

அப்படியானால் இவர்களிடம் செல்பவர்களுக்கெல்லாம் நோய் குணமாவது இல்லையா என்ற கேள்வி எழலாம். நூறு பேர் சிகிச்சை எடுத்துக்கொண்டால் 2 பேருக்கு குணமாக வாய்ப்பிருக்கிறது. அந்த இரண்டு பேர் சொல்லி இரண்டாயிரம் பேர் வருவார்கள். இதுவும் ஒரு மல்டி லெவல் மார்க்கெட்டிங்கைப் போலத்தான்.ஆக இவர்கள் செய்வது அவர்களின் வியாபார விளம்பரமேயன்றி வேறில்லை.
இன்னும் சிலர் கோயில்களில் பிச்சையெடுக்கும் சாமியார்களைப் பயன்படுத்தி அவர்கள் தான் சித்தர்கள் என்றும், தான் சித்தர்களின் அவதாரம் என்றும் பெரிய பெரிய புருடாக்களை விடுகின்றனர். காசு இருந்தால் கழுதை கூட கதாநாயகனாக நடிக்கும் இன்றைய நிலையில் இவர்களுக்கு கேமிரா கிடைத்தால் சும்மா விடுவார்களா என்ன?
கொஞ்ச நாட்களுக்கு முன்பு இவர்களின் ஆதிக்கம் வலைப்பூக்களிலும் உலாவர ஆரம்பித்தது. தமிழ்மணம்,தமிழிஷ், தமிழ்10 மற்றும் தமிழ்வெளி திரட்டிகளில் இணைத்து இவர்களின் வீடியோக்களை வெளியிட ஆரம்பித்தனர். இவர்களின் இம்சை இங்கும் ஆரம்பித்ததால் திரட்டிகள் இவர்களைக் கழற்றிவிட்டன.நல்லவேளை டிவி சேனல்களோடு இவர்களின் தொல்லை ஒளிந்தது. வலையுலகம் தப்பியது. நன்றி சொல்வோம் திரட்டிகளுக்கு!


இத உக்காந்து பார்க்கவும் ஒரு கூட்டம் இருக்குதானேங்க. அதானே அந்த சானல் ஓடுது. வைத்தியனும் சானலும் நல்லாருக்கும். பார்க்குற பரதேசி பரலோகம் போய்ச்சேரும். போலீசு கம்ப்ளெயிண்ட் வரும்னு காத்திருக்கும் கல்லா தேத்த. என்னமோ போங்க.
//போலீசு கம்ப்ளெயிண்ட் வரும்னு காத்திருக்கும் கல்லா தேத்த//
சார் சொன்னதைத்தான் நானும் நினைச்சேன.
//வைத்தியனும் சானலும் நல்லாருக்கும். பார்க்குற பரதேசி பரலோகம் போய்ச்சேரும். //
அண்ணே! ரசிகன ஏன்னே திட்டுறீங்க.பாவம் அவன் இல்லைன எதுவுமே ஓடாது. கருத்துக்கு நன்றிண்ணே!
அகல் விளக்கு
//சார் சொன்னதைத்தான் நானும் நினைச்சேன்.//
உண்மைதான் சார்.இணைவுக்கு நன்றி!