ஆனந்தம்:
தமிழகத்தில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழ்மக்களின் நலனுக்காக ரூ12 கோடி ஒதுக்கிய முதல்வர் கலைஞர் அதே சூட்டோடு தமிழகத்தின் அனைத்து முகாம்களையும் பார்வையிட்டு அறிக்கை தர அமைச்சர்களை அனுப்பிவைத்தார். ஒவ்வொரு குழுவாக ஒவ்வொரு முகாமையும் பார்வையிட்ட அமைச்சர்கள் குழு அங்கு நிலவும் அவல நிலைகளை பட்டியலிட, அதிர்ச்சியடைந்த முதல்வர் நிவாரண தொகையாக ரூ100 கோடியை ஒதுக்கினார். இது அம்மக்களின் நலனிலே அக்கறை கொண்ட அனைவருக்கும் ஆனந்தத்தை அளித்தது. அதுமட்டுமின்றி முகாம் மக்கள் அனைவருக்கும் இலவச கலர் டிவி மற்றும் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் பயனாளிகளாக இணைத்து அறிவிப்பு வெளியிட்டிருப்பதும் இனிப்பான செய்தி.
இதற்கு நன்றி தெரிவித்த அம்மக்கள் தங்களுக்கும் இலங்கைக்கும் இனி யாதொரு சம்பந்தமும் இல்லையென்றும் தங்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்க பரிசீலிக்க வேண்டும் எனவும் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சோகம்:
தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக மலைகளின் அரசி நகரமான நீலகிரி மாவட்டம் முழுவதும் துண்டிக்கப்பட்டு அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் திண்டாடியது மட்டுமின்றி அங்கு ஏற்பட்ட மண்சரிவால் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது பரிதாபமான செய்தி. வடகிழக்குப் பருவமழை இம்முறை அதிகம் கொட்டித்தீர்த்தது நீலகிரியில் தான். இம்மழையால் அம்மாவட்டத்தில் ஏற்பட்ட இழப்பு சுமார் 400 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. கொஞ்ச நாள் ஓய்வெடுத்த மழை இப்போது மறுபடியும் நீலகிரியை பதம்பார்க்க துவங்கிவிட்டது. மரங்களை வெட்டியதும், கல்குவாரி குடைசலும் தான் இந்த சரிவுக்கு காரணம் என மா.கம்னியூஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

ஆர்ப்பாட்டம்:
நிவாரண உதவிகள் சரியாக வழங்கவில்லை என கண்டித்து நீலகிரி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த தெய்வத்தாய் உத்தரவிட்டதைத் தொடர்ந்து ரத்தத்தின் ரத்தங்கள் இன்றைக்கு ஊட்டியில் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு பதிலாக அந்தக் கூட்டத்தினர் ஆளுக்கு ஒரு கல்லை நகர்த்திப்போட்டு நிவாரணப் பணிகளை மேற்கொண்டாலே ஒரே நாளில் நீலகிரி சீராகிவிடும். அதையும் வைத்து அரசியல் பண்ண அம்மாவே உத்தவிட்டபோது பாவம் அப்+பாவி பிள்ளைகள் என்ன செய்வார்கள்?

அதிர்ச்சி:
இவ்வளவு சின்ன வயசில் 4000 கோடி ரூபாய் ஆட்டயப் போட்டு உலகசாதனை புரிந்த மதுகோடாவைப் பார்த்து அகில இந்திய அரசியல் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாமெல்லாம் நூற்றுக்கணக்கில் போய் கொண்டிருக்கும் போது இந்த தம்பி எப்படித்தான் ஆயிரக்கணக்கில் போட்டுத்தள்ளியதோ எனப் புரியாமல் தங்கள் உதவியாளர்களை கடித்து வருகின்றனர். வழக்கத்துக்கு மாறாக ஊழல் செய்த அந்த உத்தமத் தம்பி, கைது நடவடிக்கை என்றதும் வழக்கமான நெஞ்சுவலி மேட்டரைப் போடாமல் புதுசாக வயித்துவலி மேட்டரைப் போட்டது பாராட்டத்தக்க விசயமாக மேற்படி அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதிலும் முதலீடு செய்துள்ள இந்தத் தம்பி தேர்தல் நேரத்தில் ஒரே நாளில் 600 மோட்டார் பைக்குகளையும்,16 ஸ்கார்பியோ கார்களையும் வாங்கிய விவகாரம் அனைத்து சீனியர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நான் ஊழல் செய்ததை நிறுபித்தால் அரசியலைவிட்டே விலகிவிடுவதாக அறிக்கையும் விட்டு அசத்திவிட்டார் மதுகோடா. நமக்கு பக்கோடா வாங்கவே துப்பில்ல..

விவகாரம்:
டாஸ்மாக்கில் பணிபுரியும் தங்களை நிரந்தர பணியாளர்களாக மாற்றவேண்டும், அதுமட்டுமின்றி நாங்கள் பட்டதாரிகளாக இருப்பதால் ஊத்திக்கொடுக்கும் பணியை விடுத்து எங்களுக்கு இதே துறையில் உயர்பதவிகளை வழங்க வேண்டும் என டாஸ்மாக் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது.ஆனால் அவர்கள் நினைத்தது எதுவுமே வேலைக்காவாது எனவும் அந்த மேற்படி பணிகளுக்கு புதியதாக பதிவுமூப்பு அடிப்படையில் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என உயர்மட்டத்தில் இருந்து ஒரு தகவல் கசிகிறது.. அதுமட்டுமின்றி அடுத்த அமைச்சரவை விரிவாக்கத்தில் டாஸ்மாக்குக்கு என ஒரு புதியத்துறையை உண்டாக்கி அதற்கென தனி அமைச்சர் பொருப்பு தரலாமா என விவாதிக்கப் படுவதாகவும் ஜார்ஜ்கோட்டை பட்சிகள் காதைக்கடிக்கின்றன.

நெகிழ்ச்சி:
கிரிக்கெட் உலகத்திற்கு வந்து நேற்றோடு 20 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார் சச்சின். மாராட்டியராக இருப்பதில் பெருமிதம் கொண்டாலும் இந்தியராக இருப்பதிலேயே பெருமையடைகிறேன் எனவும் போட்டுத்தாக்கிவிட்டார். நல்லவேளை அவர் இங்கிலிபீசுல பேட்டி கொடுத்தத ராஜ்'தாக்குரே ஆளுங்க பாக்கல. இல்லைன்னா அவருக்கும் ஒரு பஞ்ச் கொடுத்திருப்பாங்க.

கண்டனம்:
கொத்துக்கொத்தாக கொலை செய்த பாவத்தை புத்தர் மன்னிக்கவில்லையோ என்னவோ, ராஜபக்சே வெங்கடாசலபதியை நோக்கி படையெடுத்து வேண்டுதலை முடித்தார்.ஆனால் தமிழர்களை கொலை செய்த குற்றத்திற்கு மன்னிப்பு வழங்க வெங்கட்டுக்கு அதிகாரம் இல்லையோ என்னவோ கொலைப்பாவம் குடும்ப உறவுகளையும் பாதிக்கக் கூடாது அதனால் தமிழ்சாமிகளை சந்தியுங்கள் என தனது தங்கையையும் மச்சானையும் அனுப்பிவைத்தார் ராஜபக்சே. முதலில் ராமேஸ்வரம் சென்று வேன்டுதலை முடித்த நிருபமாவுக்கு அங்கேயிருந்த நாம்தமிழர் இயக்கத்தினர் கருப்புக்கொடி காட்டினார்கள். ஆனால் அதைக்கண்டு கொள்ளாத நிருபமா திருச்சி வந்து தங்கியிருந்து அங்கிருந்து திருவரங்கம் செல்வதாக பிளான் போடப்பட்டது. இந்த மேட்டர் நிருபமா தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து லீக் ஆக திருச்சியில் நாம்தமிழர் மற்றும் ஏனைய இயக்கங்கள் திரள, திணறிய நிருபமா, ரங்கநாதரை தரிசிக்காமலேயே விமான நிலையத்தில் வந்து தங்கள் குடும்ப ஏர்லைன்ஸ் மூலமாக லங்காவிற்கு பறந்துவிட்டார். அடுத்து மன்னிப்பு கேட்க யார் வருவார்களோ தெரியவில்லை.

பூரி(ஆ)ப்பு :
ரெட்டி சகோதரர்கள் செய்த இம்சையை எவ்வளவோ எதிர்க்க முயன்றும் தோற்றுப்போன எடையூரப்பா ஒருவழியாக அவர்களிடம் சரணடைந்து விட்டார். அவர்கள் என்ன சொன்னாலும் தலையாட்ட வேண்டும், அவர்கள் காட்டும் கோப்பில் கைநாட்டு வைக்கவேண்டும் அதுமட்டுமின்றி இன்னும் ஆறுமாதத்தில் தாங்கள் காட்டும் நபரை முதல்வர் நாற்காலியில் அமரவைத்து விட்டு வீட்டுல போயி படுத்திட வேண்டும் என்ற கண்டிசன்களுடன் அவர்களோடு கைகோர்த்து பூரிப்பு அடைந்தார் எடையூரப்பா. அத்தோடு மட்டுமில்லாமல் தன் நாற்காலிக்காக மக்கள் பணியை மறந்துவிட்டதாக கண்ணீர் மல்க பேட்டியும் கொடுத்து கலீஜ் பண்ணிவிட்ட இவர் வாழ்க்கையில் எத்தனை இடையூரப்பா!

நகைச்சுவை:
காங்கிரஸில் ஐக்கியமாகிய திருநாவுக்கரசர் மறுபடியும் தன்பெயரை திருநாவுக்கரசு என மாற்றிக்கொள்ளலாமா என தனது ஆஸ்தான நியூமரலாஜிஸ்டைக் கேட்டுள்ளார். ஒவ்வொரு கட்சியில் இணையும் போதும் அவர் எடுக்கும் உறுதிமொழியான “இனிமேல் அடுத்த கட்சிக்குத் தாவக்கூடாது” என வழக்கமாக எடுக்கும் உறுதிமொழியையும் எடுத்துக் கொண்டு சத்தியமூர்த்தி பவனுக்குள் விஜயம் செய்தார். சத்தியமூர்த்தி பவனுக்குள் நுழைந்தால் ஓடிவந்து வேட்டியைக் கிழித்துவிடுவார்கள் என யாரோ அவரிடம் காதைக் கடிக்க உசாரான திருநா மறக்காமல் பச்சை பெல்ட்டும் பட்டாபட்டியும் போட்டுச் சென்றிருக்கிறார்.அகில இந்திய காங்கிரஸில் இணைந்துவிட்டாலும் தமிழ்நாட்டில் எந்த கோஷ்டியில் இணையலாம் என இன்னும் முடிவெடுக்காத அவர், ஓரளவுக்கு ஆள்பலம் உள்ள வாசன் கோஷ்டியில் விரைவில் சேருவார் என அவரது நெருங்கிய ஜால்ராக்கள் தெரிவிக்கின்றனர்.

இங்க பார்ரா:
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மெகாடிவியில் குழந்தைகள் மட்டுமே நடித்த ராமாயணம் திரைப்படம் ஒளிபரப்பாகும் என விளம்பரம் செய்திருந்தார்கள். ஆனால் மெகா டிவியில் மட்டுமின்றி வசந்த் டிவியிலும் அதே ராமாயாணம், அதே நேரத்தில் ஒளிபரப்பினார்கள் .இதிலே நாம் பாராட்ட வேண்டிய விசயம் இரண்டு ஒளிபரப்புகளும் ஒரே சீராக இருந்தது. சரியாக ஒரே நேரத்தில் முடித்தார்கள். காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி சண்டை என சொல்லித்திரிபவர்களுக்களின் முகத்தில் தங்கபாலுவும், வசந்தகுமாரும் கரியைப் பூசிவிட்டார்கள் என சத்தியமூர்த்தி பவனில் கிசுகிசுத்துக் கொண்டார்களாம். என்ன வில்லத்தனம்?

காரணமாகு பெயர்:
நடிகர் திலகம் சிவாஜியின் இயற்பெயர் கணேசன். சத்ரபதி என்னும் நாடகத்தில் மராட்டிய மன்னன் வீர சிவாஜி பாத்திரத்தில் நடித்ததால் இவர் சிவாஜி கணேசன் என அழைக்கப்பட்டார்.இவரை சிவாஜி கணேசன் என்று முதலில் அழைத்தவர் தந்தை பெரியார்.
குறலும் வெளக்கமும்:
வழங்குபவர்: ராயபுரம் மணி
"காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது"
அத்து இன்னானா நம்ம மவுண்டு ரோடாண்ட பைக்ல போக சொல்லோ லைசன்ஸ் இல்லாது டிராபிக்கு போலீசில மாட்டிக்கிட்டா அவரு ஸ்பாட் பைன் 500, கோர்டுக்கு போனா 1000ம்னு நம்ம கையிலயே உதார் உட்டுட்டு கட்சியா ஜேப்புல உள்ளத கையில வச்சிட்டு போய்கினே இருன்னு சொல்லி 5 ரூவா குட்தாலும் வாங்கிகுனு நம்மள ரிலீஸ் பண்ணுவாரு பாத்தியா, அத்த பாக்கசொல்லோ சிர்சா இருந்தாலும் அந்த டைமிங் தாம்பா இந்த ஒலகத்த விட பெர்சு.
தத்துவம் தங்கராசு:
வாடக சைக்கிள்ள போறவன விட சொந்தமா டயர் வண்டிய குச்சியால தட்டி ஓட்டிக்கிட்டு போறவன் எவ்வளவோ மேல்.
கிசுகிசு கார்னர்:
இலங்கையில போர் நடந்த சமயத்துல இங்கிருந்து சிங்களத்தி நடிகையோட கொழும்பு போயி கூத்தடிச்ச அந்த நடிகரு பண்ற அலப்பறை தாங்கலையாம். இப்ப வெளியான அஞ்சிக்கி அடுத்த மூஞ்சி படம் அட்டுப்பிளாப்பா ஆனாலும் அவரு பந்தா மட்டும் கொறயலையாம். கத சொல்லப் போற புது இயக்குனர்களை இன்னிக்கு வா நாளைக்கு வான்னு இழுத்தடிச்சி கடைசியா என் லெவலுக்கு பெரிய பேனர்ல தான் நடிப்பேன்னு வாசலோட அனுப்பிடுறாராம். இவன வச்சி படம் எடுக்குறதுக்கு பதிலா ஊருக்குப் போயி பன்னி மேய்க்கலாமுன்னு சொல்றாங்க அந்த நொந்த இயக்குனர்கள்.
கானொளி கார்னர்:
புரட்சிக்கலைஞர் விசயகாந்த், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இளைய திலகம் பிரபு நடித்து வெளிவராத ஒரு படத்தின் டிரைலர் கானொளியாக
உங்கள் ஆதரவுக் கரங்களைப் பொருத்து மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்
அண்ணன் கேபிள்சங்கர் அவர்களின் தந்தையார் அவர்களுக்காக நாம் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம்.


ஸ்வீட் காரம் காப்பி செம பார்ட்டி=)). அசத்தல் நிஜாம்.
எல்லாமே தூக்கலா இருக்கு. சூப்பர் பார்ட்டிங்க நிஜாம்
nalla pathivu
ஜீப்பர். ஆமா யாருங்க அந்த நடிகர்.
டிரைலர் தான் டாப்பு
தெளிவான இடுகை.செய்திகளை சேகரித்து எழுதியிருக்கிறீர்கள்.ஒரு இடுகைக்கான உங்கள்
உழைப்பு தெரிகிறது.
நல்லா எழுதுறீங்கண்ணே !!!! வலையுலகில் நீங்கள் நிச்சயம் கவனிக்கப்பட வேண்டியவர் !!
ஸ்வீட் காரம் காப்பி சூப்பர்...
நல்ல பதிவு!
காணொளி சூ...சூப்பர் ... ரு...! ;)
//வானம்பாடிகள் said...
ஸ்வீட் காரம் காப்பி செம பார்ட்டி=)). அசத்தல் நிஜாம்.//
நன்றிண்ணே! தொடர்ந்து இணைந்திருங்கள்.
// S.A. நவாஸுதீன் said...
எல்லாமே தூக்கலா இருக்கு. சூப்பர் பார்ட்டிங்க நிஜாம்//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நவாஸ். தொடர்ந்து இணைந்திருங்கள்.
//venkat said...
nalla pathivu//
Thanks Mr.Venkat. Stay Tuned
//ஷாகுல் said...
ஜீப்பர். ஆமா யாருங்க அந்த நடிகர்.
டிரைலர் தான் டாப்பு//
அவரு தான் வருங்கால முதலமைச்சராம் சாகுல். நல்ல காமெடில்ல,
// அ.மு.செய்யது said...
தெளிவான இடுகை.செய்திகளை சேகரித்து எழுதியிருக்கிறீர்கள்.ஒரு இடுகைக்கான உங்கள்
உழைப்பு தெரிகிறது.//
நன்றி செய்யத்.
//நல்லா எழுதுறீங்கண்ணே !!!!//
அண்ணன்லாம் வேண்டாம். நிஜாம்னே கூப்டலாம்
//வலையுலகில் நீங்கள் நிச்சயம் கவனிக்கப்பட வேண்டியவர் !!//
//கவனிக்கப்பட வேண்டியவர் !!//
ரூம் போட்டு அடிக்கனும்னு சொல்றீங்களா?
// ரோஸ்விக் said...
ஸ்வீட் காரம் காப்பி சூப்பர்...//
நன்றி ரோஸ்விக். தொடர்ந்து இணைந்திருங்கள்.
// மணிப்பக்கம் said...
நல்ல பதிவு!
காணொளி சூ...சூப்பர் ... ரு...! ;)//
நன்றி மணிப்பக்கம் தொடர்ந்து இணைந்திருங்கள்.,