குடிமகனே!
உன்னை வருத்தி இந்நாட்டை
வளர்ப்பவனல்லவா நீ!
உன் வருமானமோ 100!-அதிலே
அரசுக்கு பாதியைத் தருகிறாய் பாரு...
இந்த காந்தி ஜெயந்தி ஏன் தான் வருகிறதோ, குடிமகன்களின் 364 ½ நாள் சுதந்திரம் இந்த ஒரு நாளில் பறிக்கப்படுகிறது. காந்தி ஏன் அக்டோபர் 2ஆம் தேதி பிறந்தார்? பேசாமல் பிப்ரவரி 29ம் தேதி பிறந்திருந்தால் வருடா வருடம் இந்த இம்சை இருக்காதே!
காந்தி ஜெயந்திக்கு கடையடைப்பு செய்தால் நாம் கலங்கிவிடுவதா? அல்லது அந்த ஒரு நாளை வீணாய்த் தியாகம் செய்வதா? அந்தக் கவலையே வேண்டாம்! காந்தி ஜெயந்தியிலும் கட்டிங் போட முடியும். என்ன கொஞ்சம் கஷ்டப் படனும்.கீழ்க்கண்ட மேட்டர்களைப் பாலோ செய்து போனால் இதிலே எங்காவது ஒரு இடத்தில் நிச்சயம் சரக்கு கிடைத்து உங்களை உங்களை சாந்திப் படுத்திவிடும்.
1) டாஸ்மாக் பின்புறம்:
தமிழகத்திலே இருக்கும் எல்லா டாஸ்மாக் கடையின் பின்பக்கச் சுவரிலும் குடும்பக் கட்டுப்பாடு விளம்பரம் போல முக்கோன வடிவில் ஒரு ஓட்டை இருக்கும். அது எதற்காகவெனில் இது போன்ற காந்திஜெயந்தி கடையடைப்புகளுக்குத் தான்.மற்ற நாட்களை விட இந்த நாளில் பின்பக்க வியாபாரம் பிரம்மாண்டமாக களை கட்டும். எனவே தயவு செய்து வழக்கம் போல கடையின் முன்பக்கம் மட்டும் பார்த்து விட்டு திரும்பிவிடாமல் மறவாமல் பின்புறமாகவும் சென்று தங்களின் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிட வேண்டுமாய் அன்போடு வேண்டுகிறேன்.

2) சிறப்பு பூக்கடை /பழக்கடை:
காந்தி ஜெயந்தியன்று கடைகளை அடைக்க உத்தரவிட்டு விடுவதால் பூட்டிய கடைக்குள் எல்லா இடங்களிலும் பின்பக்க வியாபாரம் நடக்கும் என சொல்ல இயலாது. அதை சமாளிப்பதற்காக கடை அருகேயிருக்கும் பூக்கடை/பழக்கடைகளில் சாக்குப் பைகளில் வைத்து விற்பனை நடக்கும். ஆனால் அங்கே நேரடியாக பணம் கொடுத்து வாங்க இயலாது. கடை வாசலில் அமர்ந்து இருக்கும் பிரமுகரிடம் பணத்தை செலுத்தி நுழைவுச் சீட்டினைப் பெற்றுக் கொண்டு அதைக் கொண்டு வந்து இங்கே பூக்கடை/பழக்கடைகளில் கொடுத்து சரக்கினைப் பெற்றுக்கொள்ளலாம். இதற்கென காந்திஜெயந்தி ஸ்பெசலாக சிறப்பு பூக்கடை/பழக்கடைகள் நம்ம கடைகளின் வாசல்களில் முளைத்திருப்பதைக் காணலாம்.

3) பாருக்குள்ளே நல்லாத் தேடு:
டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டாலும் பார்களுக்கு விடுமுறை கிடையாது. அவர்கள் வழக்கம் போல அவிச்ச முட்டையும் கொண்டக் கடலையுமாக குந்தியிருப்பார்கள். ஜெயந்தி அன்றைக்கு மட்டும் டாஸ்மாக் பார்களில் சரக்குகள் கிடைக்கும். ஆனால் கொஞ்சம் காஸ்ட்லி. காரணம் அந்த ஏரியாவின் காவல் தெய்வங்களுக்கு காணிக்கை செலுத்த வேண்டுமென்பதால். ஆனால் நமது ஒரே குறிக்கோள் சரக்கு தான் என்பதால் காசைப் பார்க்காமால், சினிமா தியேட்டரிலே தீஞ்சி போன காப்பியை கொள்ளைக் காசு கொடுத்து குடிப்பது போல நினைத்துக் கொண்டு அங்கேயே சரக்கு வாங்கி சாய்த்துக் கொள்ளலாம். அனேகமாக அன்றைக்கு கிளாஸ் அல்லது வாட்டர் பாக்கெட் இலவசமாகக் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. மறவாமல் கேட்டு வாங்கிக் கொள்ளவும்.

4) கடையின் முன்பக்கம்:
மேற்கண்ட எல்லா இடங்களில் தேடியும் சரக்கு சிக்கவில்லையா? மனம் தளர்ந்து விடக்கூடாது. நேராக கடையின் முன்பக்கம் வரவும். அங்கே வாசலில் பிச்சைக்காரர் போல ஒருவர் படுத்திருப்பார். அருகே சென்று பார்த்தால் அங்கே கடையின் ஷட்டர் சற்று தூக்கியிருக்கும். அந்தப் பிச்சைக்காரரிடம் பணத்தைக் கொடுத்தால் அவர் அதை வாங்கிக் கொண்டு, அவர் வைத்திருக்கும் குச்சியால் ஷட்டரை லேசாகத் தட்டுவார். உடனே பேய் படத்தில் வருவது போல உள்ளிருந்து ஒரு கைவரும். அந்தக் கையில் அந்தக் காசை வைத்து காத்திருந்தால் சில நிமிடங்களில் ஏடிஎம் மிசின் போல அந்தக் கை மீண்டும் வெளியே வந்து அந்தப் பிச்சைக்காரரிடம் மீதிக் காசையும் சரக்கையும் வைத்து விட்டு உள்ளே சென்று விடும். அவருக்கு ஒரு ரூபாயை கமிஷனாக வைத்து விட்டு சரக்கோடு நீங்கள் நடையைக் கட்டலாம்.

5) இருப்பு வைத்தல்:
மேற்கண்ட விசயங்கள் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. முந்தைய காலங்களில் நடந்த மற்றும் பத்திரிகை செய்திகள் அடிப்படையில் தொகுக்கப் பட்டது தான் மேற்கண்டவைகள். மழைக்காலத்தை எதிர்பார்த்து உணவை சேகரித்து வைக்கும் எறும்புகள் போல இன்றைக்கு இரவே உங்களுக்குத் தேவையான சரக்குகளை வாங்கி ஸ்டாக் செய்து கொள்வது நல்லது. ஆனால் அதை கைக்கு எட்டும் தூரத்தில் வைத்தால் இன்றைக்கு இரவே காலியாகி விடும். எனவே அதை எட்டா உயரத்தில் ஏதாவது பரண் மீது வைத்துப் பாதுக்காக்கலாம்.
மஹாத்மா காந்தி ஒரு சரித்திரம்:
மஹாத்மா காந்தி அக்டோபர் 2, 1869 அன்று இந்திய நாட்டின் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தரில் பிறந்தார். தனது 18ஆம் வயதில் பள்ளிப்படிப்பை முடிந்த பிறகு வழக்கறிஞர் படிப்பிற்காக இங்கிலாந்து சென்றார். படிப்பை முடித்து நாடு திரும்பி சரியான வேலையின்றி இருந்தார் காந்தி. பின்னர் தென்னாப்பிரிக்காவிற்கு வேலை தேடி பயணமானார்.அங்கு வழக்கறிஞராக பணியாற்றினார். ஒருநாள் ரயில் பயணத்தில் முதல் வகுப்புப் பெட்டியில் பயனம் செய்த காந்தியை நிறவெறி காரணமாக அந்தப் பெட்டியில் இருந்து தூக்கி எறிந்தார் ஒரு அதிகாரி.
வேலை நிறைவுற்று இந்தியா திரும்ப காந்தி தயாரானபோது, தென்னாப்பிரிக்கா, அங்கிருந்த இந்தியரின் வாக்குரிமையைப் பறிக்கும் தீர்மானத்தை எதிர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அங்குள்ள இந்தியர்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அங்கிருந்த இந்தியர் அனைவரையும் ஒன்று திரட்டி, அவர்களை தங்கள் உரிமைகளுக்காக போராட ஊக்கப்படுத்தினார். ஒத்துழையாமை,அகிம்சை ஆகிய கொள்கைகளை முன்னிறுத்தி போராட்டங்களை நடத்தி பலமுறை சிறை சென்றார். அறவழிப் போராட்டத்தின் மூலம் தென்னாப்பிரிக்க வாழ் இந்தியரின் சமூக நிலையை மேம்படுத்தும் முயற்சியில் வெற்றி கண்ட காந்தி இந்தியாவிற்குத் திரும்பினார்.

இந்தியாவில் இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து ஆங்கிலேயர்க்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் முழுமையாக ஈடுபட்டார். 1921ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். 1930ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு, உப்புக்கு வரி விதித்ததை எதிர்த்து தன் தோழர்களுடன் தண்டி கடற்கரைக்கு வந்து ங்கிருந்த கடல் நீரை காய்ச்சி உப்பு தயாரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார்.இதைத் தொடர்ந்து காந்தி உட்பட பல்லாயிரக் கணக்கான போராட்ட வீரர்கள் கொடுஞ் சிறையில் அடைக்கப் பட்டனர். பின்னர் காந்தியுடன் பேச்சு வார்த்தை நடத்தி இறுதியில் உப்புக்கான வரியை நீக்கிக் கொண்டது ஆங்கில அரசு.1942 ஆம் ஆண்டு "வெள்ளையனே வெளியேறு" என்ற பிரம்மாண்ட போராட்டத்தில் மிகத் தீவிரமாக ஈடுபட்டார்.
இறுதியில் 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவிற்கு சுதந்திரம் அளிக்கப் பட்டது. இந்த நேரத்தில் தான் மற்றொரு பிரச்சினை பூதாகரமாக வெடித்தது. அது தான் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை தொடர்பானது. ஆனால் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையை கொஞ்சமும் விரும்பாத காந்தி ஹிந்து முஸ்லீம் ஒற்றுமை குறித்து தனது போதனைக் கூட்டங்களில் பிரசாரம் செய்ய ஆரம்பித்தார். காந்தி உயிரோடு இருந்தால் அவரால் தங்களின் திட்டங்கள் நிறைவேறாது எனக் கருதிய இந்நாட்டின் காவலர்கள் காந்தியைக் கொன்று விட முடிவு செய்து முதல் அட்டாக்கைத் துவக்கினர்.
ஆனால் அதிலே அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய காந்தி 1948ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் தேதி நாதுராம் கோட்ஸே என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டார். தன் மக்களுக்காக போராடி பெற்ற சுதந்திரத்தை துளி கூட அனுபவிக்காமல் அம்மக்களாலேயே கொடூரமாகக் கொலை செய்யப் பட்டார் மஹாத்மா காந்தி. அவர் மறைந்தாலும் அவருடைய ஞாபகங்களை ரூபாய் நோட்டிலே பதிவு செய்து வைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது இந்திய அரசு.
மதுவே வேண்டாம் என்று போதித்த தேசத்தின் மிகச் சிறந்த தலைவரின் பிறந்த நாளுக்கும் கடையை மூடுவதாக வெளியே சொல்லிக் கொண்டு எப்படியெல்லாம் சைடில் விற்கப் படுகிறது என்பதற்கு மேற்கண்டவைகளே உதாரணம் ஆகும். நாம் மஹாத்மா காந்தியின் ஒரு ஆசையாவது நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்தால் நாம் செய்ய வேண்டியது முழு மதுவிலக்கு மட்டுமே!
பிராந்திக் கடையில் காந்தி..,
ரூபாய் நோட்டாக..,


குடிமகன்களுக்குத் தெரிந்த இவ்வளவு
விஷயங்களும் இந்த குடிமகனுக்கு
(CITIZEN) எப்படி தெரிந்தது?
குடிமகன்களின் ஆபத்பாந்தவன்
நிஜாம் வாழ்க!
ஒரு வாரம் முன்னாடியே கொடுத்திருந்தால் குடிமக்களுக்கு வசதியா இருந்திருக்கும்.
//Anonymous said...
லஞ்சம் வாங்குபவர்கள் முகத்திரையை கிழிக்கும் ஒரு பதிவு.
http://ulalmannargal.blogspot.com//
படித்தேன் நன்று.
//குடிமகன்களுக்குத் தெரிந்த இவ்வளவு
விஷயங்களும் இந்த குடிமகனுக்கு
(CITIZEN) எப்படி தெரிந்தது?
குடிமகன்களின் ஆபத்பாந்தவன்
//நிஜாம் வாழ்க!//
இருந்தாலும் இவ்வளவு தற்புகழ்சி கூடாது ஆமா..!
// S.A. நவாஸுதீன் said...
ஒரு வாரம் முன்னாடியே கொடுத்திருந்தால் குடிமக்களுக்கு வசதியா இருந்திருக்கும்.//
நீங்க வேற பாய், நம்ம பாயிண்டெல்லாம் கேட்டு உசாராகி வேறு வழிகளில் மீட்டர் போட்டுவிட்டார்கள்.
செய்தி: காந்தி ஜெயந்தி அன்று பிரவேட்டாய் கடை நடத்தியவர்கள் 19 பேர் கைது.
594 பாட்டில்கள் பறிமுதல்
தமிழிஷில் வாக்களித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி