Oct 22, 2009

வரம் வாங்கிவந்த காஞ்சிவரம்

நிஜாம் கான் @ 2:50 PM

வெள்ளைத்துணியை அருவித்தண்ணீரில் நனைத்துக் காட்டினாலே போதும், அந்த ஒரு காட்சியை வைத்தே கல்லாக் கட்டிவிடலாம் என களமிறங்கும் தமிழ்சினிமா இயக்குனர்களுக்கு மத்தியிலும் சில நேரங்களில் ஒரே ஒரு டிக்கெட் மட்டும் எடுத்துக்கொண்டு உள்ளே சென்று ஒரு முழுவரிசைச் சீட்டிலும் கால் நீட்டிப் படுத்துக் கொண்டு பார்க்கும் தமிழ் சினிமாக்கள் வந்துகொண்டு தான் இருக்கின்றன. பாரதி, காந்தி, காமராஜர்,பெரியார் போன்ற திரைப்படங்கள் ஏதோ கலைப்படைப்புகள் என்ற பெயரிலே வெளியாகி அந்த திரையரங்குகளைக் காத்தாட வைத்தன.

இதிலே பெரியார் திரைப்படம் மட்டும் எதிர்பார்த்ததை விட‌ வெற்றியடைந்தது. இதற்குக் காரணம் ரசிகர்களின் ரசிப்புத்தன்மை குறைவு என்பதை விட பொறுமை குறைவு எனச் சொல்லலாம். விரைவுரயில் வேகத்தில் திரைக்கதை நகரும் படங்களைப் பார்த்து பழகிவிட்ட மக்களுக்கு மேற்கண்ட திரைப்படங்களின் ஆமை வேகம் ஒத்துக்கொள்ளாது என்பது உண்மை.

அந்தவரிசையில் வெளியாகி எத்தனை பேர் பார்த்தார்கள் என விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய அளவிலே இன்றைக்கு 2 தேசிய விருதுகளைப் பெற்று பெருமை சேர்த்திருக்கும் காஞ்சிவரம் திரைப்படம் பற்றிய ஒரு பார்வை.

காஞ்சி(பு)வரத்தில் வாழும் வேங்கடம் என்ற நெசவுத்தொழிலாளி. தான் மணக்கப் போகும் பெண்ணுக்கு பட்டுச்சேலையைக் கொடுத்துத் தான் திருமணம் செய்துகொள்வேன் என்ற வைராக்யத்தோடு வாழ்கிறான். ஆனால் அவனின் வறுமைச் சூழ்நிலையால் அதுமுடியாமல் அன்னம் என்ற பெண்ணை திருமணம் செய்துகொள்கிறான்.ஊருக்கெல்லாம் பட்டுச்சேலை நெய்துகொடுக்கும் தன்னால் ஒரு பட்டுச்சேலையை உருவாக்க முடியவில்லையே என்ற ஏக்கம் தன் மனதிலே ஆறாத ரணமாய் இருக்கிறது. இந்த நிலையில் அவனின் தந்தை மரணமடைய அவரைக் கூட பட்டுத்துணி கொண்டு போர்த்த முடியாமல் அவரின் கால் விரலை பட்டு நூலால் கட்டி தன் இயலாமைக்கு மருந்துதேடிக்கொள்கிறான்..

அவனுக்கு ஒரு பெண்குழந்தை பிறக்கிறது. அந்தக் காலத்திய‌ அந்தப் பகுதி வழக்கப்படி பிறந்த குழந்தையிடம் தந்தை எதையாவது வாக்குறுதி கொடுக்க வேண்டும். உனக்கு பட்டுச்சேலை கட்டித்தான் உன்னைத் திருமணம் செய்துவைப்பேன் என குழந்தையிடம் சொல்கிறான் வேங்கடம். இதைக் கேட்டு நகையாடும் ஊர் மக்கள்,"ஆமா, ஏற்கனவே பொண்டாட்டிக்கு வாங்கித் தர்றேன்னு சொன்னான்,இப்ப பிள்ளைக்கு வாங்கித் தர்றேன்னு சொல்றான். நெசவு செய்யும் நம்மால் பாதி சேலை கூட வாங்க முடியாது" என வந்தவர்கள் பேசிக்கொள்ள, அன்னம் அவனிடம் இதைப் பற்றி கேட்டு கடிந்து கொள்கிறாள். ஆனால் தன் மகளுக்கு புடவை வாங்குவதற்காக தான் சேர்த்து வைத்திருக்கும் காசைக் காட்டுகிறான். இந்த நிலையில் வேங்கடத்தின் தங்கையின் கணவன் பணம் கேட்டு தொந்தரவு செய்ய அந்தப் பணத்தை அவனிடம் கொடுத்து விடுகிறான். இதனால் அவனின் பட்டுச்சேலை கனவு தகர்ந்து விடுகிறது.

இந்த நிலையில் அந்த ஊர் ஜெமீன்தாரின் மகள் கல்யாணத்திற்கு பட்டுப்புடவை நெய்யும் வேலை வேங்கடத்திடம் ஒப்படைக்கப்படுகிறது. நூல் திருட்டுப் போகாமல் இருக்க கோயிலில் வைத்து நெய்ய உத்தரவிடப்படுகிறது.அங்கே வேலை செய்யும் வேங்கடம் கொஞ்சம் கொஞ்சமாக பட்டு நூல்களைத் திருடிவந்து தன் கனவுச் சேலையை நெய்கிறான். தன் கணவரால் தன் மகளுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற இயலாது என வருத்தப்பட்டு மரணப் படுக்கையில் அவதிப்படும் மனைவியை தூக்கிச்சென்று, மகளுக்காக தான் ரகசியமாக‌ நெய்துகொண்டிருக்கும் பட்டுச்சேலையைக் காட்டி மனைவிக்கு நிம்மதியான மரணத்தைக் கொடுக்கிறான்.

இந்த நிலையில் அவனை கம்யூனிச சித்தாந்தம் ஆட்கொள்கிறது.800 ரூபாய்க்கு விற்கும் சேலைக்கு வெறும் 7 ரூபாய் கூலி கொடுக்கும் முதலாளியை எதிர்த்து சக தொழிலாளர்களைத் திரட்டி போராட்டத்தில் இறங்குகிறான். ஆனால் தன் மகளுக்காக நெய்து கொண்டிருக்கும் பட்டுச்சேலைக்கு தொடர்ந்து நூல் திருடியாக வேண்டும் என்பதால் சக தொழிலாளர்களிடம் வேறுவிதமாகப் பேசி வேலை நிறுத்தத்தை வாபஸ் வாங்கிக்கொள்கிறான்.கம்யூனிச சித்தாந்தம் வந்த நிலையிலும் தனக்குள்ளே ஒளிந்திருக்கும் அந்த சுயநலவாதியை நினைத்து நொந்து கொள்கிறான்.

கடைசியில், உயிர் மட்டுமே இருந்தும் மரக்கட்டையாய் கிடக்கும்,தான் ஆசை ஆசையாய் வளர்த்த அன்புமகளின் நிலையைக் கண்டு பொறுக்காமல் விசம் கொடுத்துக் கருணைக் கொலை செய்வது ஏழ்மையின்,இயலாமையின் உச்சம். மனதை ரணமாக்கும் இந்தக் காட்சி.தன் ஆயுள் முழுவ‌தும் உழைத்தும் கூட தன் மனைவிக்கோ, உயிருக்கு உயிரான மகளுக்கோ ஒரு பட்டுப் புடவையை தொட்டுப் பார்க்கும் வாய்ப்பை கூட வழங்கமுடியாமல் நொந்து போன ஒரு ஏழை நெசவாளியின் வாழ்க்கை நம்மை சஞ்சலப்படுத்துகின்றன.

வேங்கடமாக பிரகாஷ்ராஜ். இதிலே நடிப்பு என்பது அவருக்கு சுத்தமாக இல்லை, வேங்கடம் என்ற நெசவுத்தொழிலாளியாக‌ வாழ்ந்தேயிருக்கிறார். நிச்சயமாக அந்த வேங்கடம் பாத்திரத்திற்கு வேறு யாரும் பொருந்துவார்களா எனபது சந்தேகமே! அன்னமாக ஸ்ரேயா ரெட்டி. ஸ்ரேயாவுக்கும் சேர்த்து இந்தப் படத்திற்கு 3 விருதுகள் கொடுத்திருக்கப் படவேண்டும். எப்படி தவறியது என்று தெரியவில்லை. நெசவாளக் குடும்பத்துப் பெண்ணாக ஏழையாக வாழ்ந்து பல ஏக்கங்களைச் சுமந்து ஏழையாக மரணிக்கிறார்.திருவின் ஒளிப்ப‌திவு ந‌ம்மை அந்த‌க் கால‌த்திற்கே அழைத்துச் சென்றுவிட்ட‌து. ஒவ்வொரு பிரேமும் அருமை. த‌ங்க‌ர்ப‌ச்சானை நினைவுப‌டுத்தியிருக்கிறார்.

ஸ்ரீகுமார் என்ற அறிமுக இசையமைப்பாளர் பரவாயில்லை ரகம். அதிலும் "பொன்னூஞ்சல் தொட்டிலேலே மயிலிறகு மெத்தையிலே மானே நீ உறங்கு உறங்கு ...ஆராரொ ஆரிரரோ" என்றொரு திரும்ப திரும்ப கேட்க வைத்து ரீங்காரமிடும் அருமையான தாலாட்டு. படத்தின் முடிவிலும் இந்தப் பாடல் நிறைய பேரை அழவைத்து விடுகிறது.

ஆக இயலாமையின் உச்சத்தில் வாழ்ந்த வேங்க‌டம் என்ற‌ ஒரு ஏழை நெசவாளரின் வாழ்க்கை சரித்திரத்திற்கு வழங்கப்பட்ட விருதுகள் இந்தப் படத்திற்கு பெருமையல்ல, மாறாக‌ அந்த விருதுகள் தான் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டும்.

already seen this

4 Response to "வரம் வாங்கிவந்த காஞ்சிவரம்"

  1. யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

    சிறந்த படத்தைப் பற்றிய சிறப்பான பார்வை!
    வாழ்க்கை பூராகவும் வேகமான கதையமைப்புடைய படங்களை ரசிக்கும் கூட்டம், அப்பப்போ வரும் இப்படியான படங்களை ரசித்தால் குறைந்தா? விடும்.
    மேலும் இப்படத்துக்கு விருது கிடைத்ததும் பிரகாஷ் ராஜ் ; முதல்வரைச் சந்திக்கச் சென்றபோது (ஏன் போனாரோ? தெரியாது); கலைக்காக வாழ்ந்து விருதுகளைத் தனக்கே தர விழாச் செய்யும்; மானாட மயிரா(லா)ட ரசிகர்; தான் அந்தப் படத்தை பார்க்கவில்லை என்றாராம்.
    அத்துடன் 2007,2008...தமிழக அரசின் சிறந்த படத்தேர்வையும் கவனித்து;
    இந்தக் கலைக் குடும்பத்தில் நிலையை நினைத்து ;என் தலையில் நானே அடிக்கப் பழஞ் செருப்புத்
    தேடி நொந்தேன்.

  2. vasu balaji said...

    சிறப்பான விமரிசனம். பார்க்கணும். நன்றிங்க

  3. அ.மு.செய்யது said...

    அருமையான பகிர்வு நிஜாம் !!!

    ஆனால் படத்தின் கதையை முழுமையாக சொல்லிவீட்டீர்களே !!! மக்கள் பார்க்கட்டுமே !!!

  4. நிஜாம் கான் said...

    @ யோகன் பாரிஸ்
    @ வானம்பாடிகள்
    @ mix
    @ அ.மு.செய்யது

    நண்பர்களின் தொடர்ந்த ஆதரவிற்கும் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

Post a Comment

நண்பர்களே! மேற்கண்ட இடுகை தங்களுக்கு பிடித்திருந்தால் ஏதாவது ஒரு வாக்குப்பட்டியில் உங்களின் வாக்குகளை பதிவுசெய்யுங்கள். அது மேலும் பலரைச் சென்றடைய உதவும். நன்றி!

Labels

FIFA (1) TNTJ (4) அ.மு.செய்யது (1) அங்காடித் தெரு (1) அயோத்தி தீர்ப்பு (2) அரசியல் (7) அஜீத் (1) இந்தியா (14) இலங்கை (9) ஈழம் (7) உ.ரா.வரதராசன் (2) எந்திரன் (1) ஏர்டெல் சூப்பர் சிங்கர்2 (1) காங்கிரஸ் (4) காதலர் தினம் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (2) குமுதம் (1) குமுறல் (2) குழந்தைகள் தினம் (2) குறும்பட விமர்சனம் (3) சாரு (1) சானியா மிர்சா (1) சிந்தனைகள் (5) சிரி (3) சிறுகதை (3) சினிமா (14) சுவடுகள் (1) செம்மொழி மாநாடு (1) செய்திகள் (18) செய்தித் துளிகள் (10) டிசம்பர் 6 (1) டுபாகூர் (5) தமிழகம் (40) தமிழர்கள் (19) தமிழ்10 (1) தமிழ்மணம் (1) தலைவர் கலைஞர் (3) திரட்டிகள் (3) திருநாவுக்கரசர் (1) தினமலர் (2) தீபாவ‌ளி (3) தூர்தர்ஷன் (1) தேர்தல் 2010 (1) தொழில்நுட்பம் (1) நகைச்சுவை (10) நக்கீரன் (2) நித்யானந்தா (7) நீதிக்கதை (3) பர்தா (1) பாலியல் (4) பால்தாக்கரே (1) பேரவல‌ம் (16) பேரழிவுகள் (2) பொங்கல் (2) மக்கள் தொலைக்காட்சி (5) மரபணு (1) மருத்துவம் (2) மஹாத்மா (1) மீலாது விழா (1) முகரம் (1) ரமலான் (5) ரஜினிகாந்த் (2) ராமதாஸ் (1) ருச்சிகா (1) வசந்த் டிவி (1) வடிவேலு (1) வந்தேமாதரம் (1) வள்ளுவர் (1) விருதுகள் (2) வினவு (1) வின்டிவி (2) ஜல்லிக்கட்டு (1) ஜெயலலிதா (2) ஜெயா டிவி (1) ஸ்வீட் காரம் காபி (5)

எவ்வழி

Pages

Related Posts with Thumbnails

தொடர்புக்கு..,