ஆமை புகுந்த இடம் வெளங்காது என்று கிராமப் பெருசுகள் என்றைக்கோ சொல்லிவைத்து விட்டுச் சென்று விட்டனர். அது என்னடா ஆமை என்று பார்த்தால் கல்லாமை, இல்லாமை, முயலாமை, இயலாமை, ஈயாமை, பொறாமை என்ற ஆமைகள் நுழைந்தால் தான் வெளங்காது என்கின்றனர் பகுத்தறிவுவாதிகள் . ஆனால் இன்னமும் நாட்டாமைகள் உலவும் கிராமங்களில் மேற்படி பழமொழிக்கு சரியான அர்த்தம் காட்டாமைகள் தான் என அடித்துச் சொல்லிவருகின்றனர் அனுபவஸ்தர்கள். இதைப் பற்றிய ஆராய்ச்சி நமக்கு வேண்டாம். ஆனால் ஆமையை ஒருவரோடு சம்பந்தப்படுத்தி அவர் போய் சேரும் இடமும் வெளங்காது என தமிழகத்தின் ஒரு தொகுதிமக்கள் சொல்வதைக் கேட்கும் போது நகைச்சுவையாகவும் அதே நேரம் சிந்திக்கக் கூடியதாகவும் இருக்கிறது.

சமீபத்திய தொகுதி சீரமைப்பில் பொட்டியைக் கட்டிய புதுக்கோட்டை தொகுதி அரசியல்வாதிகளிடையே தான் இந்த அலசல்கள் இடம்பெறுகிறது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதியிலே 7 முறை வெற்றிவாகை சூடிய திருநாவுக்கரசர் பற்றித்தான் அந்தப் பேச்சுகள் நடக்கின்றன. முன்னர் திருநாவுக்கரசுவாக இருந்தவர் எவனோ ஒரு நியூமராலஜிக்காரன் சொன்னான் என்பதற்காக தன் பெயரை திருநாவுக்கரசர் என மாற்றிக் கொண்டார். பெயரை மாற்றியதும் அதிஷ்டம் அடிக்கும் என எதிர்பார்த்தவரின் எண்ணத்திலே மண்ணை அள்ளிப் போட்ட அத்தொகுதி மக்கள் அவரிடம் நேரடியாக மல்லுக்கு நிற்க ஆரம்பித்தனர்.
அத்தோடு மட்டுமின்றி அவரின் அரசியல் வாழ்க்கையே கேள்விக்குறியாக மாறிப்போனது. அரசியலில் திருநாவுக்கரசர் இருந்திராத கட்சியே இல்லை. இன்றைக்கு திமுக வேஷ்டியை கட்டிக்கொண்டு வரும் அவர் திடீரென அதிமுகவின் வேஷ்டியை மாற்றுவார். அப்பறம் எல்லாவற்றிலிருந்தும் விலகி மறுபடியும் சுயேட்சையாக போட்டியிடுவார். பின்னர் திடீரென கட்சி ஆரம்பிப்பார். இரண்டு நாட்களில் அதைக் கலைத்துவிட்டு மீண்டும் திமுகவில் சேர்ந்து விடுவார். பின்னர் அதிமுக. இப்படியே ரொட்டேசனில் வருவதால் அவரின் ஆதரவாளர்கள் தங்கள் வீடுகளில் எல்லாக் கட்சிகளின் கரை போட்ட வேட்டிகளையும் துண்டுகளையும் ஸ்டாக் வைத்துக்கொள்ள ஆரம்பித்தனர். இப்படியே மாறி மாறி விளையாடி போரடித்த திருநாவுக்கரசர் திடீரென பாஜகவிற்குத் தாவினார். பலதடவை தமிழகத்திலே தாவி தாவி விளையாடிய போதெல்லாம் அவரை ஏற்றுக்கொண்ட அறந்தாங்கி மக்கள் பாஜகவில் ஐக்கியமானதை ஏற்றுக்கொள்ளாமல் அவரைப் புறக்கணிக்க ஆரம்பித்தனர். அவரின் கோட்டை என சொல்லக்கூடிய அறந்தாங்கி தொகுதி அவருக்கே ஆப்புத் தொகுதியாக மாறியது.

அறந்தாங்கியிலே பலமுறை வெற்றிபெற்ற திரு நாவுக்கரசர் தனது வாய்ப்பை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க ஆரம்பித்தார். இது ஒரு புறம் இருக்கட்டும், அவரை ஏன் ஆமை என்று சொல்கிறார்கள் என விசாரித்த போது திருநாவுக்கரசரின் பழைய கோப்புகளைக் கிண்டி அவரைப் பற்றி கிடைத்த தகவல் மிக சுவாரஸ்யம். அதாவது ஆமை செல்லும் இடத்தில் அது நலமாக இருக்குமாம். ஆனால் அந்த இடம் படுத்துவிடுமாம், அதேபோல திரு நாவுக்கரசர் அவர்கள் போட்டியிடும் போது அவர் வென்றுவிடுவார், ஆனால் அவரின் கட்சி காலை நீட்டி கவுந்துவிடுமாம் என்பதே தற்போது புதுக்கோட்டை கரை வேஷ்டிகளிடம் பரபரப்பாக பேசப்படும் செய்தி. அதற்கும் சமீபத்திய நிகழ்வை உதாரணம் காட்டுகின்றனர்.
அவர் பாஜகவிலே சேர்ந்த நேரம் அடுத்தடுத்த தேர்தல்களில் பாஜக படுதோல்விகளை சந்திக்க ஆரம்பித்தது.அது மட்டுமின்றி இன்று பாஜகவிலே நடைபெறும் மோதல்களைப் பார்த்து காங்கிரஸ் பிரமுகர்கள் " நாம எவ்வளவோ தேவலை" என காலரைத் தூக்கிவிட்டுக் கொள்கின்றனர். இதற்கெல்லாம் காரணம் திருநாவுக்கரசரின் ராசி தான் என அவருக்கு ஆகாத வட்டாரத்தினர் சாம்புராணி போடுவது போல புரளிப் புகையை கிளப்பிக்கொண்டுள்ளனர்.இந்த நிலையில் இனியும், ரொம்ப நாள் பாஜகவிலே இருந்து போரடித்து விட்டதால் அடுத்து ஏதாவது தேடலாம் என நினைத்த திருநாவுக்கரசர் நைசாக திமுகவிற்கு புறா தூது அனுப்ப ஆரம்பித்தார். ஆனால் அறிவாலயம் நோக்கிச் சென்ற தூதுப்புறா திரும்பாத காரணத்தால் டெல்லியிலே அவரது ஆதரவாளர்களோடு ரூம் போட்டு யோசிக்க ஆரம்பித்தார். சாதாரணமாக அதிமுகவிலே எப்போதுமே மரியாதை இருக்காது. அதுவும் இப்போது அக்கட்சி மூழ்கும் கப்பலை போல ஆகிக்கொண்டிருப்பதால் அதுவும் கதைக்கு ஆவாது என காங்கிரஸ் கமிட்டியிலே ஐக்கியமாக முடிவெடுத்தார் திருநா.

அந்தச் செய்தியை நைசாக சோனியா அம்மையாருக்குத் தெரிவிக்க, ஏற்கனவே திருநாவின் ஜம்பிங் வித்தைகள் தெரிந்திருந்த சோனியா அம்மையார் நோ சொல்லிவிட்டாராம். இதனால் எங்கே தனது எதிர்காலம் பீஸ் போன பல்ப் ஆகிவிடுமோ என நொந்த திருநா தனது அடுத்த அஸ்திரத்தை ராகுலை நோக்கி ஏவ ஆரம்பித்தார். ராகுலுக்கு காந்திஜெயந்தி வாழ்த்துக்கள், முதியோர் தின வாழ்த்துக்கள், நண்பர்கள் தின வாழ்த்துக்கள் என தொடர்ந்து குருந்தகவல்கள் அனுப்பியும், மிஸ்டுகால்கள் கொடுத்தும் தான் ஒருவன் கட்சியில் இணைய தயாராய் இருப்பதை தெரிவித்துக்கொண்டாராம் திருநா.பஞ்சர் ஆன சைக்கிள்கள், ஓடாத வண்டிகள் என எது வந்தாலும் ரீமாடலிங் செய்து சேர்த்துக்கொள்ள தயாராகிவிட்ட ராகுல், திருநாவுக்கரசரின் வருகையை தனது கட்சித்தலைமையிடம் தெரிவிக்க இப்போது அவருக்கு மஞ்சல் சிக்னல் விழுந்திருக்கிறதாம். அதாவது மஹாராஷ்டிரா தேர்தல் முடிந்த பிறகு அதுபற்றி பார்க்கலாம் என வெயிட்டிங் லிஸ்டில் வைக்கப் பட்டிருக்கிறார் திருநா.

தென்னக ரெயில்வேயில் இருக்கும் நீண்ட வெயிட்டிங் லிஸ்ட் போல எப்போதும் காங்கிரஸ் கட்சியிலும் நீண்ட வெயிட்டிங் லிஸ்ட் இருக்கும். ஆனால் எப்படியும் சீட்டு கன்பார்ம் ஆகிவிடும் என தெரிந்து திருநா மகிழ்சியில் இருக்கிறார். இவரின் இந்த வேலைகளைக் கண்டு டரியலாகிய தமிழக பாஜக இவரைப் பற்றி தொடர்ந்து புகார் ராக்கெட்டுகளை தலைமை நோக்கி ஏவிக்கொண்டிருக்கிறது. ஆனால் தலைமையே அஸ்திவாரம் ஆட்டம் கண்டு இருக்கும் இந்த நிலையில் திருநா பற்றிய எந்த ஒரு புகாரையும் பரீசிலிக்க தலைமைக்கு நேரமில்லை. அரசனை நம்பி புருசனைக் கைவிட்டுவிடாமல் காங்கிரஸிலே சீட்டு கன்பார்ம் ஆகும் வரை கட்சியை விட்டு விலகவோ அல்லது பத்திரிகையாளர்களிடம் இதுபற்றி தெரிவிக்கவோ மாட்டாராம் திருநா. ஏற்கனவே 72 கோஷ்டிகள் உள்ள தமிழக காங்கிரஸில் இவர் மற்றொரு கோஷ்டியாக வருவதைப் பற்றி கவலைப்படாமல் "வாய்யா மோதிப்பாத்திரலாம்" என வேஷ்டியை மடித்துக் கட்டிக்கொண்டு களத்தில் குதிக்க முடிவெடுத்து விட்டார்களாம் தமிழக கோஷ்டியார், ச்சீ..,சாரி தமிழக காங்கிரஸார். ஆனாலும் திருநாவை கட்சியிலே சேக்காதீங்க, அவரை கட்சியிலே சேக்குறது நீங்களா ஆப்புகளத் தேடிப்போயி அதுமேல உக்காருவதற்குச் சமம் என வழக்கம் போல அவரின் நலன் விரும்பிகள் காங்கிரஸுக்கு மொட்டை பெட்டிசன்களைப் போட்டு வருகிறார்களாம்.ஆக காங்கிரஸின் இன்றைய வளர்ச்சியை திருநாவுக்கரசரின் இணைவு பாதிக்குமா என்பதைப் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

டிஸ்கி: திருநாவுக்கரசரை மேற்படியாளர்கள் சாதாரண ஆமையோடு தான் ஒப்பிட்டார்கள். ஆனால் அவர் நட்சத்திர அந்தஸ்து உள்ளவர் என்பதால் தான் அவரை நட்சத்திர ஆமையுடன் ஒப்பிடப்பட்டுள்ளது. மற்றபடி நட்சத்திர ஆமைக்குட்டிகள் மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் செல்லப் பிராணிகளாக வீட்டிலே வளர்க்கப் படுகின்றது. சீன சாஸ்திரப்படி ஆமையை வீட்டிலே வளர்த்தால் அந்த வீட்டிலே வளம்பெருகும் என்பது அவர்களின் ஐதீகம். அதுமட்டுமின்றி நட்சத்திர ஆமைகள் முக்கியமாக ஆஸ்துமாவுக்கு மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகின்றது. அதுமட்டுமின்றி ஆமைக்கறிக்காகவே சிங்கப்பூரில் ஒரு கூட்டம் கத்தியும் கரண்டியுமாக காத்துக்கிடக்கின்றது. அத்தோடு அதன் ஓடுகள் அலங்காரப் பொருட்களாகப் பயன்படுகின்றன. சிங்கப்பூரிலே ஒரு நட்சத்திர ஆமைக்குட்டியின் விலை 5 முதல் 50 சிங்கை டாலர்கள் வரை விலை போகின்றது. அதனால் தான் அடிக்கடி சென்னை விமான நிலையத்திலே ஆமைக்குட்டிகளைக் கடத்துபவர்கள் பிடிக்கப்பட்டு அந்த ஆமைகள் கிண்டி பூங்காவிற்கும்,அதை கொண்டு வந்தவர்கள் புழலுக்கும் அனுப்பப் படுகின்றனர். ஆமைகளை அதிகமாக விடுவதால் கிண்டி உயிரியல் பூங்கா வெளங்காமையா போச்சி என்பது பற்றி நமக்குத் தெரியவில்லை.


அவரை திமுகவில் சொல்லி சேத்து விடுங்களேன்.
ராஜபக்ச கட்சியில சேர்த்துபாங்களா. ஜனங்களுக்கு அப்படியாவது ஏதோ நடக்கும்.
இப்படியெல்லாம் ஒரு மூட நம்பிக்கையா? எப்படிங்க இப்படியெல்லாம்? புரியலை..
ஒரு கட்சி உருப்படாம போவதற்கும், வளர்வதற்கு பல காரணிகள் இருக்கும் போது, இந்த மூட நம்பிக்கை புரியலை?
// ஷாகுல் said...
அவரை திமுகவில் சொல்லி சேத்து விடுங்களேன்.//
எத்தன மொற அவரு சேருவாரு திமுகவுல? இனிமே அவரு தேசியக் கட்சிக்குத் தான் லாயக்கு.ஏங்க சாகுல் ,நான் நல்லா இருக்குறது உங்களுக்கு புடிக்கலையா????
//வானம்பாடிகள் said...
ராஜபக்ச கட்சியில சேர்த்துபாங்களா. ஜனங்களுக்கு அப்படியாவது ஏதோ நடக்கும்.//
பாவங்க திரு நா. இதுவரை இலங்கை பிரச்சனையில் அவர் கலந்துகொள்ளவேயில்லை அவரது கட்சியைப் போல. ஆனால் இவரு குணத்தில நல்லவருங்க.
//இராகவன் நைஜிரியா said...
இப்படியெல்லாம் ஒரு மூட நம்பிக்கையா? எப்படிங்க இப்படியெல்லாம்? புரியலை..//
அப்படியில்லைண்ணே! அவரு கட்சி மாறி கட்சி தாவறது தான் அவருக்கு பிராப்ளமே.
//திருநாவுக்கரசரை மேற்படியாளர்கள் சாதாரண ஆமையோடு தான் ஒப்பிட்டார்கள். ஆனால் அவர் நட்சத்திர அந்தஸ்து உள்ளவர் என்பதால் தான் அவரை நட்சத்திர ஆமையுடன் ஒப்பிடப்பட்டுள்ளது//
ரொம்ப நக்கல் தாங்க உங்களுக்கு :-)
வாங்க கிரி சார். உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. தொடர்ந்து இணைந்திருங்கள்.
ithuvarai avar thi mu kavil sernthathu illai.
ஓ... அவர் திமுக வில் பலமுறை சேர்ந்தாரா, நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை. புதிய செய்தி!
அதிமுகவில் இருந்திருக்கிறார், தனிக்கட்சி வைத்திருந்தார், பிஜேபி யில் இருக்கிறார், அவ்வளவுதான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
//ஓ... அவர் திமுக வில் பலமுறை சேர்ந்தாரா, நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை. புதிய செய்தி!
அதிமுகவில் இருந்திருக்கிறார், தனிக்கட்சி வைத்திருந்தார், பிஜேபி யில் இருக்கிறார், அவ்வளவுதான் கேள்விப்பட்டிருக்கிறேன்//
வருகைக்கு நன்றி ஜோதிபாரதி அண்ணா! திரு நாவுக்கரசர் திமுகவில் இருந்தார் என்றோ, இணைந்தார் என்றோ நான் எங்கேயும் சொல்லவில்லையே.., சேர்ந்துவிடுவார் என்பது கூட்டணியாய் இணைந்து உதயசூரியனில் போட்டியிடுவார் என பொருள் கொள்ளவும்.
அத்தோடு மட்டுமின்றி அவரின் அரசியல் வாழ்க்கையே கேள்விக்குறியாக மாறிப்போனது. அரசியலில் திருநாவுக்கரசர் இருந்திராத கட்சியே இல்லை. இன்றைக்கு திமுக வேஷ்டியை கட்டிக்கொண்டு வரும் அவர் திடீரென அதிமுகவின் வேஷ்டியை மாற்றுவார். அப்பறம் எல்லாவற்றிலிருந்தும் விலகி மறுபடியும் சுயேட்சையாக போட்டியிடுவார். பின்னர் திடீரென கட்சி ஆரம்பிப்பார். இரண்டு நாட்களில் அதைக் கலைத்துவிட்டு மீண்டும் திமுகவில் சேர்ந்து விடுவார். பின்னர் அதிமுக. இப்படியே ரொட்டேசனில் வருவதால் அவரின் ஆதரவாளர்கள் தங்கள் வீடுகளில் எல்லாக் கட்சிகளின் கரை போட்ட வேட்டிகளையும் துண்டுகளையும் ஸ்டாக் வைத்துக்கொள்ள ஆரம்பித்தனர். இப்படியே மாறி மாறி விளையாடி போரடித்த திருநாவுக்கரசர் திடீரென பாஜகவிற்குத் தாவினார். //
இந்த வரிகள் எனக்கு அப்படி உணர்த்துகின்றன நிஜாம்.
உங்களுக்கு எப்படி உணர்த்துகின்றன என்று தெரியவில்லை.
இருந்தாலும் எண்ணமும் எழுத்தும் மாறுபட்டே இருக்கிறது இங்கு.
அண்ணன் ஜோதிபாரதியின் இரண்டாவது பின்னூட்டத்தை வழிமொழிகின்றேன்.
அப்புறம் நிஜாம் அண்ணா எனக்கு இந்த இடுகையின் உட்கருத்தில் உடன்பாடு இல்லை. அவர் செல்லும் இடம் விளங்காமல் போகும் என்றால் எப்படி எம்.ஜி.ஆர். இவரை அமைச்சராக வைத்துக்கொண்டு 11 ஆண்டுகள் அரசை நடத்தினார்??
திருநாவுக்கரசை கருத்தியல் ரீதியாகவே எதிர்த்து நாம் ஆயிரம் காரணம் சொல்லலாம்.ராசி இல்லாதவர், ஆமை என்றெல்லாம் விமர்சித்தால் அவரை எதிர்த்து விமர்சிக்க நம்மிடம் கருத்தில்லை,நம்முடைய வாதத்தில் வலு இல்லை என்பதுபோல் ஆகிவிடாதா??
நானும் அவரைப் பற்றி விரைவில் ஒரு இடுகை இடுகின்றேன்.