Jan 28, 2010

பைத்தியமாய்த் திரிந்த மஹிந்தா - இலங்கை தேர்தல் ஒரு அலசல்

நிஜாம் கான் @ 5:22 PM

பொன்சேகா வெல்வது உறுதி. மஹிந்தா ஊரைவிட்டே ஓடப்போகிறார். ஒரு வெளிநாட்டில் அடைக்கலம் கோரி அங்கு அனுமதி கிடைத்துவிட்டது என ஏகப்பட்ட புரளிச்செய்திகளால் இத்தனை நாட்களும் மஹிந்தாவுக்கு தூக்கமே வந்திருக்காது. மஹிந்தா கூட இந்த வெற்றியை எதிர்பார்த்திருக்கவில்லை. தோற்றால் எப்படியும் தன் மீது பலவிதமான வழக்குகள் பாயும், நிச்சயம் சிறை செல்வது உறுதி. அதனால் தப்பிக்க பலவிதமான வழிகளையும் திறந்து வைத்துக்காத்திருந்த மஹிந்தா குடும்பத்தாருக்கு இது மிக மிக இனிப்பான செய்தி. அத்தோடு இனி தன்னை எதிர்க்க ஆள் இல்லை, தானும் தன் குடும்பமும் இனி யாரைக் கொன்றாலும் என்ன செய்தாலும் கேட்பதற்கு ஆள் கிடையாது என்ற அகந்தையை தன் தலைமீது ஏற்றிக் கொண்டாடுகிறது மஹிந்தாவின் குடும்பம். கிட்டத்தட்ட 16 க்கும் மேற்ப்பட்ட ஊழல் வழக்குகளில் மஹிந்தாவையும் கோத்தபயவையும் சிக்கவைத்து அவர்களை காலத்துக்கும் வெளியே விடாமல் சிறைச்சேதம் செய்துவிட வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்த ரனில் வகையறாக்களுக்கு இந்த வெற்றி ஒரு பேரிடி.

ஊடகங்கள் காட்டிய காணல்:

பொன்சேகா வெற்றி உறுதி என இலங்கை ஊடகங்கள் மற்றுமின்றி சர்வதேச ஊடகங்களும் காட்டிய முனைப்புகள் காணல் நீராகிவிட்டன. இலங்கையின் அரச ஊடகங்கள் மட்டுமே அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை, மஹிந்தாவின் ஆட்சி தொடரும் என செய்திகளை வெளியிட்டன. ஆனால் சரத்பொன்சேகா வெல்வது உறுதி என்றும், தமிழர்களை வேட்டையாடியதின் பலன் உங்கள் இருவருக்குமே சிங்கள மக்கள் மத்தியிலே சமபங்கான நிலையில், இலங்கையில் திணிக்கப்பட்ட விலைவாசி உயர்வு உங்கள் மீது வெறுப்பை உண்டாக்கி விட்டது, எனவே மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்கிறார்கள் என இலங்கையின் உளவுத்துறை அரசுக்கு அளித்த செய்தியைக் கண்டு ஒரு கணம் ஆடித்தான் போனார் மஹிந்தா.

ஜெயிக்கிற சேவல் என் சேவல் *** இந்தியா:

தோள் கொடுப்பான் தோழன் என போர் காலத்தில் பேருதவி புரிந்த காங்கிரஸ் அரசாங்கம் தேர்தல் நேரத்தில் ஜகா வாங்கிக்கொண்டதும் கூட மஹிந்தாவை தனிமைப் படுத்தியது. பொன்சேகாவின் திடீர் தில்லி பயண ரகசிய சந்திப்பில் என்ன நடந்தது என இன்று வரை வெளிவராத அந்த மர்ம முடிச்சுகள் மஹிந்தாவை கலவரப்படுத்தியது. ஆனால் காங்கிரஸ் அரசின் காய் நகர்த்தல் மிக சிறப்பாகவே இருந்திருக்கிறது. அதாவது கிராமத்துப் பழமொழியான பந்தயத்துல ஜெயிக்கிற சேவல் என் சேவல் என அமைதி காத்தது இந்தியா. காங்கிரஸின் இந்த ஊமைக்குத்து நிலை மஹிந்தாவை பேதியாக்கியது. அதாவது ஒருவேளை பொன்சேகா வென்றுவிட்டால் அவருக்கு பாராட்டு விழா எடுக்கக்கூட காங்கிரஸ் தயங்காது எனவும், தன் மீது ஏதேனும் வழக்குத்தொடரப்பட்டால் அதை ஒருபோதும் காங்கிரஸ் அரசாங்கம் கண்டுகொள்ளாது எனவும் நொந்தேபோனார் மஹிந்தா.

கைவிரித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு :

யாரையாவது ஒருவரை வீழ்த்தினால் வெற்றிதான் என்ற நோக்கில் இருந்த தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஆதரவைக் கோரினார் மஹிந்தா. ஆனால் எந்த விதமான முடிவும் எடுக்காமல் மௌனம் காத்தது ததேகூ. இந்த நிலையில் தமிழகம் வந்த சிவாஜிலிங்கம் ததேகூ தனித்துப்போட்டியிடும் என அறிவித்தார். ஆனால் தனித்துப் போட்டியிடுவது மஹிந்தாவின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என தமிழ் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் பொன்சேகாவை ஆதரிப்பதாக ததேகூ அறிவித்தது. இந்த செய்தியுடன் காங்கிரஸ் அரசை அந்த அமைப்பினர் சந்தித்தனர். இந்திய அரசின் புகழுக்கு களங்கம் வந்துவிடாமல் பிரச்சாரம் செய்யுங்கள் என அவர்களிடம் அரசு அறிவுறுத்தியது. ஆனால் தனிப்பட்ட முறையில் உங்களின் முழுமையான ஆதரவு எங்களுக்கு வேண்டும் என்ற மஹிந்தாவின் கோரிக்கையை நிராகரித்து வானத்தைப் போல விஜயகாந்த் மாதிரி நடந்து கொண்டது இந்தியா.

சந்திரிகாவின் அந்தர் பல்டி:

எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக பொன்சேகா நிறுத்தப்பட்டிருப்பதும், பலர் அவருக்கு ஆதரவு அளித்திருப்பதும் ஒரு வெற்றி மாயையை உண்டாக்கிவிட சந்திரிகாவும் கூட அதற்கு மயங்கி தனது ஆதரவைக் கொடுத்துவிட்டார். தான் ஒருவேளை தோற்கும் நிலை ஏற்பட்டால் எவ்வாறு தப்பிச்செல்வது போன்ற திட்டங்களை நீண்ட நாட்களாகவே செயல்படுத்தி வந்த மஹிந்தா சகோதரர்கள் தங்களின் தப்பிக்கும் பாதையை எளிதாக்கிக் கொண்டார்கள். இலங்கையில் இருந்து விமானம் வழி செல்லும் சாதாரண பயணிகளுக்குக் கூட கட்டுப்பாடுகளைத் தளர்த்தி சட்டமியற்றினார்கள். தேர்தலில் தோற்றால் நிச்சயம் மஹிந்தாவும், கோத்தபயவும் உள்ளே செல்வது உறுதி என்ற நிலையில் தங்களுக்கெதிரான ஆதாரங்களை அழிக்க முற்பட்டார்கள்.

13 இடங்களில் குண்டுகள் வெடிப்பு :

பொன்சேகாவின் வெற்றியைத் தீர்மானிப்பதில் தமிழர்களுக்கு முக்கியப் பங்கு இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட அவற்றைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள் மஹிந்தா சகோதரர்கள். இந்த நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்ட கடந்த 26 ஆம் தேதியன்று அதிகாலையில் யாழ்ப்பாணத்தில் 13 இடங்களில் குண்டுகள் வெடித்தன. பழைய தெலுங்கு சினிமா பாணியில் ஆளுங்கட்சி அலுவலகங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன. இதை செய்தது யார் என இதுவரை இலங்கை காவல்துறையினர் தேடிவருகிறார்களாம். அத்தோடு கருணா குழுவினர் மண்வெட்டி, கோடாலி போன்ற ஆயுதங்களைக் கொண்டு தமிழர்களை மிரட்டியதாகவும் , ஏற்கனவே பீதியில் இருக்கும் தமிழர்கள் அதிகபட்சமாக வாக்களிக்கச் செல்லவில்லை என்றும், பிற்பகலில் தமிழர்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்தினார்கள் என்றும் செய்திகள் வெளியாயின. மொத்தம் 70 சதவிகிதம் வாக்குகள் பதிவாயின. பதிவான வாக்குகளில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமாக பெற்றவரே வெற்றி பெறுவார் என்பது இலங்கை தேர்தல் ஆணைய விதியாகும். கடந்த 2008 ஆம் ஆண்டு தன் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்ததாகவும் ஆனால் இன்றுவரை தன் பெயர் பட்டியலில் இடம்பெறவில்லை அதனால் தான் வாக்களிக்கவில்லை எனவும் பொன்சேகா சொல்லியிருந்தார்.

பரபரப்பான‌ வாக்கு எண்ணிக்கை:

தேர்தல் முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை துவங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தபால் வாக்குகளில் மஹிந்தாவே முன்னிலை வகித்தார். இரவு முழுவதும் வாக்குகள் எண்ணப்பட்டன. தொடர்ந்து மஹிந்தா முன்னிலை வகித்தார். இறுதியாக 18 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மஹிந்தா வெற்றியடைந்ததாக அறிவிக்கப்பட்டார்.

பதிவான மொத்த வாக்குகள் : 1,04,95,451

செல்லுபடியானவை 1,03,93,613

மகிந்த ராஜபக்சே = 60,15,934 (57.88 %)

சரத் பொன்சேகா = 41,73,185 (40.15 %)

சிவாஜிலிங்கம் = 9,662 (0.09 %)

விக்கிரமபாகு = 7,055 (0.07 %)

வாக்குகள் எண்ண ஆரம்பித்தவுடன் பொன்சேகாவும், ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் மற்றும் அவர்களது குழுவினருடன் இலங்கையின் முக்கிய நட்சத்திர விடுதியான ரிரான்ஸ் ஏசியா ஹோட்டலில் தங்கி தங்களின் அடுத்த நடவடிக்கைகள் குறித்து விவாதித்தனர். இந்த நிலையில் மஹிந்தாவின் முன்னிலைச் செய்தி அறிவிக்கப்பட்டவுடன் இவர்கள் அரசுக்கு எதிராக சூழ்ச்சி செய்ததாக கூறி அந்த விடுதியை 300க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் சுற்றிவளைத்து அவர்களைச் சிறைபிடித்தனர். அந்தப் பகுதிகளில் சாலைகள் தடுக்கப்பட்டு போக்குவரத்துகள் முடக்கப்பட்டன.

சிறை பிடிக்கப்பட்டவுடன் உள்ளிருந்த படியே சேனல் X க்கு பேட்டியளித்த பொன்சேகா, தன்னை கொலை செய்வதற்கு மஹிந்தா உத்தரவிட்டிருப்பதாகவும், தேர்தல் முடிவுகளை எதிர்த்து வழக்குத் தொடரப்போவதாகவும் அறிவித்தார். ஏற்கனவே அயர்லாந்து நீதிமன்றத்தால் போர்குற்றவாளி என அறிவிக்கப் பட்ட மஹிந்த இந்த சிக்கலிலும் மாட்டிக்கொள்ள விரும்பாமல் அவர்களை விடுவிக்க உத்தரவிட்டார். அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கை (தற்போதைக்கு) இல்லை என பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் உதய நாணயகாரா அறிவித்தார்.

திரிகோணமலையில் படுதோல்வியடைந்த மஹிந்தா:

தமிழர்களின் பகுதியான திரிகோணமலையிலும்,மூதூரிலும் மஹிந்தாவை விட பொன்சேகா அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். திரிகோணமலையில் பொன்சேகா 35,877 வாக்குகளும், மஹிந்தா 13,935 வாக்குகளும் பெற்றிருந்தனர். அதேபோல மற்றொரு பகுதியான மூதூரில் பொன்சேகா 32,631 வாக்குகளும், மஹிந்தா 21,002 வாக்குகளும் பெற்றிருந்தனர். ஆனால் சிங்களவர்களின் வாக்குகள் கொத்துக்கொத்தாக மஹிந்தாவிற்கு கிடைத்திருக்கிறது. இந்த தேர்தல் முடிவுகளால் கடந்த ஒரு மாத காலம் பைத்தியமாய்த் திரிந்த மஹிந்தாவுக்கு இப்போது தான் அமைதி கிடைத்திருக்கிறது. கடந்த ஒரு மாத காலமும் மஹிந்தா மனஅழுத்தத்தால் மிகுந்த பாதிப்படைந்திருந்தாக அவரின் ஆஸ்தான மருத்துவர்கள் முன்னரே சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வெடிப்புகை வாசனையின்றி வாழட்டும்:

பொன்சேகா வென்றால் ராஜபக்சே குடும்பத்திற்கு அவர்களின் தோல்வியையாவது தண்டனையாக அளிக்கலாம் என காத்திருந்த அனைத்து உலகத் தமிழ் மக்களுக்கும் இந்த வெற்றிச்செய்தி கவலையளிப்பதாக உள்ளது. மற்றபடி ராஜபக்சே ஆட்சிக்கு வந்தாலும், பொன்சேகா ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்களின் நிலையில் எந்தவிதமான மாறுதலகளும் வந்துவிடப் போவதில்லை. ஒருவேளை பொன்சேகா வெற்றியடைந்திருந்தால் ராஜபக்சேவை குற்றவாளியாக பலவழக்குகளில் சிக்கவைத்து அவரை நிரந்தரமாக உள்ளேவைக்க அல்லது நாடுகடத்த உத்தரவிட்டிருப்பார். இந்த வாய்ப்பும் இப்போது மங்கி பூமராங்காக அது பொன்சேகாவின் மீது பாயும் வாய்ப்பு இருக்கிறது. நடப்பது நடந்தே தீரும். யார் வென்றாலும் சரி அங்கு வாழும் தமிழர்களின் வாழ்க்கையை கோபுரமேற்றி விடப்போவதில்லை. இதுவரை தமிழ்மக்கள் மீது ஏவிய வன்முறைகளை விடுத்து இனியாவது அவர்களை சுதந்திரமாக வாழ அனுமதித்தாலே போதும். இனியாவது எம்மக்கள் வேட்டுச்சத்தமின்றி, வெடிப்புகை வாசனையின்றி மகிழ்ச்சி வாழ்க்கை வாழட்டும்.

already seen this

2 Response to "பைத்தியமாய்த் திரிந்த மஹிந்தா - இலங்கை தேர்தல் ஒரு அலசல்"

  1. vasu balaji said...

    /இதுவரை தமிழ்மக்கள் மீது ஏவிய வன்முறைகளை விடுத்து இனியாவது அவர்களை சுதந்திரமாக வாழ அனுமதித்தாலே போதும். இனியாவது எம்மக்கள் வேட்டுச்சத்தமின்றி, வெடிப்புகை வாசனையின்றி மகிழ்ச்சி வாழ்க்கை வாழட்டும்./

    ஆமாம் நிஜாம். நல்ல அலசல்

  2. நிஜாம் கான் said...

    நன்றியண்ணே! தொடர்ந்து வாங்க‌

Post a Comment

நண்பர்களே! மேற்கண்ட இடுகை தங்களுக்கு பிடித்திருந்தால் ஏதாவது ஒரு வாக்குப்பட்டியில் உங்களின் வாக்குகளை பதிவுசெய்யுங்கள். அது மேலும் பலரைச் சென்றடைய உதவும். நன்றி!

Labels

FIFA (1) TNTJ (4) அ.மு.செய்யது (1) அங்காடித் தெரு (1) அயோத்தி தீர்ப்பு (2) அரசியல் (7) அஜீத் (1) இந்தியா (14) இலங்கை (9) ஈழம் (7) உ.ரா.வரதராசன் (2) எந்திரன் (1) ஏர்டெல் சூப்பர் சிங்கர்2 (1) காங்கிரஸ் (4) காதலர் தினம் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (2) குமுதம் (1) குமுறல் (2) குழந்தைகள் தினம் (2) குறும்பட விமர்சனம் (3) சாரு (1) சானியா மிர்சா (1) சிந்தனைகள் (5) சிரி (3) சிறுகதை (3) சினிமா (14) சுவடுகள் (1) செம்மொழி மாநாடு (1) செய்திகள் (18) செய்தித் துளிகள் (10) டிசம்பர் 6 (1) டுபாகூர் (5) தமிழகம் (40) தமிழர்கள் (19) தமிழ்10 (1) தமிழ்மணம் (1) தலைவர் கலைஞர் (3) திரட்டிகள் (3) திருநாவுக்கரசர் (1) தினமலர் (2) தீபாவ‌ளி (3) தூர்தர்ஷன் (1) தேர்தல் 2010 (1) தொழில்நுட்பம் (1) நகைச்சுவை (10) நக்கீரன் (2) நித்யானந்தா (7) நீதிக்கதை (3) பர்தா (1) பாலியல் (4) பால்தாக்கரே (1) பேரவல‌ம் (16) பேரழிவுகள் (2) பொங்கல் (2) மக்கள் தொலைக்காட்சி (5) மரபணு (1) மருத்துவம் (2) மஹாத்மா (1) மீலாது விழா (1) முகரம் (1) ரமலான் (5) ரஜினிகாந்த் (2) ராமதாஸ் (1) ருச்சிகா (1) வசந்த் டிவி (1) வடிவேலு (1) வந்தேமாதரம் (1) வள்ளுவர் (1) விருதுகள் (2) வினவு (1) வின்டிவி (2) ஜல்லிக்கட்டு (1) ஜெயலலிதா (2) ஜெயா டிவி (1) ஸ்வீட் காரம் காபி (5)

எவ்வழி

Pages

Related Posts with Thumbnails

தொடர்புக்கு..,