அதை நினைக்க நினைக்க இப்போதும் சிரிப்பை அடக்கமுடியவில்லை. மக்கள் தொலைக்காட்சியிலே மாட்டுப்பொங்கல் அன்று "புண்ணாக்கு" என்ற தலைப்பில் ஒரு சிறப்பு நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள். மற்ற தொலைக்காட்சிகள் அனைத்தும் நடிகர்-நடிகைகளின் பேட்டிகளை ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் போது அதற்குப் போட்டியாக இவர்கள் மாடுகளின் பேட்டியை ஒளிபரப்பினார்கள். அதாவது மாட்டுப்பொங்கலுக்கு சிறப்பாக அழைக்கப்பட்ட மாடுகளும் (வேடமிட்டவர்கள்) அவர்களது சார்பாக எஜமானர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை மிக மிக காமெடியாக நகர்த்திச் சென்றார்கள். பேட்டி எடுப்பவர்களின் கேள்விகளுக்கு மாடுகளும் அவர்களின் எஜமானர்களும் பதில் சொல்லி நம்மை நகைக்க வைத்தார்கள். முதலில் கறவைமாடும் கன்றுக்குட்டியும் அவர்களது எஜமானர்களும் கலந்து கொள்ள பேட்டி ஆரம்பமானது. அதிலே மிக சுவாரஸியமான தகவல்களை மட்டும் இங்கே பதிவு செய்கிறேன். அதை உரையாடல் வடிவில் சொன்னால் தான் அதன் சுவை மாறாமல் இருக்கும்.
பேட்டியாளர்கள் : மாட்டுப்பொங்கல் சார்பாக உங்களை அன்போடு வரவேற்கிறோம். உங்க வாழ்க்கை எப்படி போய்க்கிட்டு இருக்கு?
கறவைமாடு: என்னத்த சொல்ல? ஏதோ சாணியும் சகதியுமா கலந்து பொறண்டு போய்க்கிட்டு இருக்கு.
பேட்டியாளர்கள்: ஏன் உங்க உரிமையாளர் உங்கள குளிப்பாட்டுறது இல்லையா?
கறவைமாடு: ஆமா வாரம் ஒருக்கா ஏதாவது ஒரு சேத்துக்குளத்துல இறக்கி எங்கள கழுவிவிடுறாங்க.
பேட்டியாளர்கள்: ஏங்க அதுக்காக உங்கள தினம் குளிப்பாட்ட முடியுமா? இப்ப இருக்குற தண்ணி கஷ்டத்தில அதுல்லாம் ஆகுற கதையா?
கறவைமாடு: நீங்க மட்டும் தெனம் குளிக்கலாம். ஆனா நாங்க குளிக்கக்கூடாதா?
உரிமையாளர்: என் கோமாதா! ஏன் இப்படி பேசுற. உன்னய தண்ணியில இறக்கி நல்லா வைக்கோலைச் சுத்தி பறக்குபறக்குன்னு தேய்க்கிறேனே! அதுக்கு காட்டுற நன்றியா இது?
கறவைமாடு: ஏன்யா யோவ்! நாங்க உன்னைய வைக்கோல சுத்தி தேய்க்கச் சொன்னமா? எங்களுக்கு வலிக்காது. நீயாவது பரவாயில்ல இப்ப சில பேரு கம்பி பிரஸப்போட்டு தேய்க்கிறாங்கே! ஆனா நீங்க மட்டும் சோப்பு போட்டு குளிக்கிறீங்க.
கன்றுக்குட்டி: அட இதாவது பரவாயில்லங்க. சில நேரத்துல என்ன மாதிரி டூப்பு கன்றுக்குட்டியக் காட்டி எங்க அம்மாகிட்ட பாலக்கறந்துடுறானுங்க. சினிமாவுல தான் கதாநாயகனுக்கு டூப்பு போடுறானுங்கன்னு பாத்தா இவனுங்க எனக்கே டூப்பு போட்டு பாலக் கறந்துட்டு என்னய பட்டினி போட்டுறானுங்க.
பேட்டியாளர்கள்: ஓக்கே!ஓக்கே! நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு நன்றி. உங்களுக்காக ஸ்டூடியோ பின்பக்கத்துல புல்லுக்கட்டும், வைக்கோலும் போட்டுருக்கோம். அத ஒரு வெட்டு வெட்டிட்டு போங்க.
கறவைமாடு: ஹூம்! இன்னிக்கும் அதானா?
பேட்டியாளர்கள்: அடுத்து நம்ம ஸ்டூடியோவுக்கு வரப்போவது ஜல்லிக்கட்டு மாடு
(ஜல்லிக்கட்டு மாட்டை (வேடமிட்டவர்)இரண்டு பேர் இரண்டு பக்கமும் கயிற்றால் கட்டி மல்லுக்கட்டியபடியே உள்ளே வர ஸ்டூடியோ அல்லோகலப்படுகிறது. பேட்டியாளர்கள் பயந்து ஆங்காங்கே பதுங்குகிறார்கள்)
பேட்டியாளர்கள்: யோவ் நாமெல்லாம் கருப்பு கோட்டு போட்டுருக்கதால மாடு மெரளுது. வாங்கய்யா மாத்திக்கிட்டு வந்திடலாம்
பேட்டி ஆரம்பமாகிறது.
உரிமையாளர்கள்: என்னங்க இதக்கண்டே மெரண்டு போயிட்டீங்க. இது வெறும் குட்டிதான். பெரிசு இன்னிக்கு அலங்காநல்லூருக்கு போறதால அதுகிட்ட அப்பாயின்மென்ட் வாங்கமுடியல.
பேட்டியாளர்கள்: என்னது குட்டியா? இதுக்கே இந்த பாடா இருக்கே. பெரிய மாடு வந்தா நாம என்ன ஆகிறது. ஏங்க, மாட்டோட கொம்பு இப்படி பளபளன்னு இருக்கே! அப்படி என்ன பண்ணுவீங்க?
உரிமையாளர்கள்: நல்லா கொம்ப சீவு சீவுன்னு சீவி வெளக்கெண்ணய தடவிடுவோம். அப்பதான் இரும்பக் குத்தினாலும் ஓட்ட விழுந்திடும்.
(அடுத்து வருவது வண்டி மாடு மற்றும் உழவு மாடு)
பேட்டியாளர்கள்: என்னங்க! வண்டி மாடு வந்திருக்கு.அதன் உரிமையாளரும் வந்திட்டீங்க. உழவு மாட்டு உரிமையாளர் மட்டும் வந்திருக்கீங்க. உங்க மாடு எங்க?
உரிமையாளர்: அது ஒன்னுமில்லீங்க. என் மாட்ட கூட்டிக்கிட்டு வரும் போது வாசல்ல சினிமா போஸ்டர் ஒட்டி இருந்திச்சி. அதப்பாத்த ஒடனே என் மாடு அத சாப்பிட ஆரம்பிச்சிருச்சி. சாப்பிடும் போது அத டிஸ்டர்ப் பண்ணினா அதுக்கு கோவம் வந்திடும். நீங்க வண்டி மாட்டுகிட்ட பேட்டிய ஆரம்பிங்க. அதுக்குள்ள என் மாடு வந்திடும்.
பேட்டியாளர்கள்: சொல்லுங்க வண்டி மாடு அவர்களே! உங்க வாழ்க்கை எப்படி ஓடிக்கிட்டு இருக்கு?
வண்டிமாடு: என்னங்க வாழ்க்கை. ஏதோ வண்டியும் நானுமா ஓடிக்கிட்டு இருக்கோம். இந்த ஆளு பண்ற இம்சை தாங்க முடியல
உரிமையாளர்: என் கோமாதா! இப்படி என் மானத்தை வாங்கலாமா?
வண்டிமாடு: யோவ்! கோமாதான்னு கொஞ்சுறதெல்லாம் உன் வீட்டு பசுமாட்டோட வச்சிக்க. என்ன அநியாயம் சார் இது. வண்டியில் ஃபுல்லா லோடு ஏத்தி எங்கள இழுக்கச்சொல்றானுங்க. நாங்க மூச்சித் தெனறி நிக்கும் போது வாலப்புடிச்சி கடிக்கிறாய்ங்கே! தார் குச்சியால குத்திவிடுறாய்ங்கே.
(அப்போது உழவு மாட்டைப் பிடித்துக் கொண்டு ஒருவர் உள்ளே வருகிறார்)
"யோவ் மாடு யாருதுய்யா? வெளியே பொங்கலுக்கு ரிலீசான என் தலைவர் படத்தோட போஸ்டரை உன் மாடு சாப்பிட்டுடுச்சி"
உரிமையாளர்: விடுய்யா விடுய்யா! உன் தலைவர் படம் என் மாட்டுக்காவது புடிச்சிருக்கேன்னு சந்தோசப்படு"
என்பது போல சுவாரஸ்யமாக பேட்டி தொடர்ந்தது. இதிலும் காதோடு காது குழுவினர் கலக்கியிருந்தார்கள்.
மக்கள் தொலைக்காட்சி பொங்கலுக்காக 3 நாட்கள் சிறப்பு நிகழ்ச்சிகளை படைத்தார்கள். போன வருடத்தை ஒப்பிடும் போது இந்தவருடம் நிகழ்ச்சிகளின் சுவாரஸ்யம் குறைவே! ஆனாலும் சில நிகழ்ச்சிகள் அருமையாக இருந்தன.
மக்கள் கலை இரவு (வள்ளித்திருமணம்):
முன்னெல்லாம் சனிக்கிழமை இரவு முழுவதும் கிராமிய ஆட்ட நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவார்கள். பொங்கலை முன்னிட்டு மொத்தம் 4 நிகழ்ச்சிகளை இரவு முழுக்க ஒளிபரப்பினார்கள். முதல்நாள் வள்ளித்திருமணம் நாடகமும், அடுத்த நாள் முத்தாரம்மன் கதை கணியான் கூத்தும், மறுநாள் புலேந்திரன் தூது என்ற அடவு ஆட்டமும், அடுத்த நாள் இரவு ஈசன் கதை என்ற கணியான் கூத்தும் இடம்பெற்றது. இதிலே முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது வள்ளித்திருமணம் தான். காரணம் இன்றைய வள்ளித்திருமணம் நாடகங்கள் எவ்வாறு போய்க்கொண்டிருக்கின்றன என்பதைப் பார்ப்பவர்கள் அறிவார்கள். முழுக்க முழுக்க சினிமா பாட்டுகளும், கவர்ச்சி ஆட்டமும், ஆபாச வசனங்களும் நிறைந்ததாகத் தான் கிராமங்களில் வள்ளித்திருமணம் போய்க்கொண்டிருக்கிறது. வள்ளியே முருகனிடம் இரட்டை அர்த்த வசங்களை அள்ளிவீசுவது ஒருபுறம் நகைச்சுவையாக இருந்தாலும் மறுபுறம் முகம் சுழிக்க வைக்கிறது. உதாரணத்திற்கு ஒன்று.
முருகன்: இந்த அம்பும் வில்லும் தான் என் வேட்டையின் சொத்துக்கள்.
வள்ளி: அட்ப்போய்யா! இந்த நவீன காலத்துல அவனவன் பெரிய பெரிய துப்பாக்கிய வச்சிக்கிட்டு வேட்டையாடுறான். நீ இந்த தேய்ஞ்சி போன அம்பையும் வில்லையும் வச்சிக்கிட்டு திரிஞ்சா எப்படியா மானு மடங்கும்.
(புரியலைன்னா ரொம்ப யோசிக்க வேண்டாம்)
என நமது கிராமத்து வள்ளித்திருமணங்கள் போய்க்கொண்டிருக்க மாறாத பழைய இலக்கியச்சுவையில் பாடல்களைக் கலந்து வள்ளித்திருமணத்தை நடத்தினார்கள் நாடகக் குழுவினர். நாரதர் பாடல் முடிந்து வள்ளி என்ட்ரி. வள்ளியைப் பார்த்ததும் மயக்கமே வந்து விட்டது காரணம் வள்ளிக்கு எப்படியும் 40 வயசிருக்கும். அவரிடம் நாரதர் வந்து மாப்பிள்ளை தேடும் படலம் குறித்து பேசும் போது சிரிப்புத்தான் வந்தது. ஆனால் முருகனைப் பார்த்த போது வள்ளியின் வயசு சரிதான் எனத் தோன்றியது. முன்னெல்லாம் கிராமத்திருவிழாக்களில் வள்ளித்திருமணம், அரிச்சந்திர மயாண காண்டம் நாடகம் நடத்துவார்கள். அன்றைய நடிகர்களுக்கு நல்ல டிமாண்டு இருந்தது. ஆனால் ஆடல் பாடல் என்ற ஆபாச நடனம் சந்துக்கு சந்து முளைத்த பிறகு வள்ளித்திருமணத்தில் நடிக்க வயது குறைவானவர்களை தேடுவது முடியாத காரியம் தான். அழிந்துவரும் இதுபோன்ற நாடகக்கலைகளை காப்பாற்ற யாருமே இல்லை.
லியோனியின் பாட்டு மன்றம்:
கேட்டுக்கேட்டு புளித்துவிட்ட லியோனியை நீண்ட இடைவெளிக்குப் பிறகு பார்க்கும் போது நல்லாத்தான் இருந்தது. சிரிப்போம் சிந்திப்போம் என்ற தலைப்பில் அரட்டை அரங்கம் சாயலில் கொடுத்திருந்தார்கள். பரவாயில்லை ரகம். காலம் கடந்து லியோனியின் குரலைக்கேட்பதால் சிரிப்பு வந்தது.
மாணவர் திருவிழா, தை தைத்திருவிழா:
பொதுவாக ஆடல்பாடல் நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தாத மக்கள் தொலைக்காட்சி இந்த வருடம் வேலூர் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற மாணவர்களின் பல்சுவை நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. சினிமா வாசம் வந்துவிடாமல் பார்த்துப் பார்த்து கொடுத்திருந்தார்கள். அதேபோல தை தைத்திருவிழா என்ற நிகழ்ச்சியும் மிக மிக அருமை. மாணவ மாணவியரின் கரகாட்டம், மயிலாட்டாம் மற்றும் கரகத்தோடு சாகசங்கள் என சுவாரஸ்யமாக படைத்திருந்தார்கள். எல்லா தொலைக்காட்சிகளிலும் வரும் நடுவர் இம்சைகள் இதிலும் எரிச்சலைத் தந்தன. சான்ஸே இல்லை! கொன்னூட்டீங்க! சூப்பர்ப்! வாவ்! பென்டாஸ்டிக்! மார்வலஸ் பெர்பார்மன்ஸ்! சூப்பர் கொரியோகிராபி! என மொக்கை நடுவர்கள் மற்ற தொலைக்காட்சி ஆட்ட நிகழ்ச்சிகளில் சொல்லும் டெம்ப்ளேட் வசனங்களை இங்கே தமிழில் சொல்ல கொஞ்சம் அவஸ்தைப் பட்டார்கள் நடுவர்கள்.
பத்து நிமிட கதைகள்:
மக்கள் தொலைக்காட்சி அறிவித்த பத்து நிமிட குறும்படப் போட்டிக்கான கதைகளுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு அறிவித்திருக்கிறார்கள். சேரன், சீமான் போன்ற இயக்குனர்கள் சிறந்த கதையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அதற்கான ஒரு முன்னோட்டத்தையும் காட்டி அசத்திவிட்டார்கள். பார்க்கலாம் யார் வெல்லப்போகிறார் அந்த ஒரு லட்ச ரூபாயை என்று.
மாடுகளுக்கான அழகிப்போட்டி:
பொதுவாக கேட் வாக், பூட் வாக் போட்டு வரும் நவநாகரீக மங்கையர்கள் பங்கேற்கும் அழகிப்போட்டிக்கே போட்டியாக மாடுகளை வைத்து “நடையா இது நடையா” என்ற அற்புதமான அழகிப்போட்டியை நடத்தினார்கள். அலங்கரிக்கப்பட்ட மாடுகள் அசை போட்டபடியே அணிவகுத்து வந்து அசத்தியது. அத்தோடு அந்த மாடுகளின் வகை, குணங்கள் பற்றியும் விளக்கியது சிறப்பு.
விடாது யோசனை:
அண்ணன் விடாது கருப்பனின் அக்கப்போரு நிகழ்ச்சி தான் இந்த விடாது யோசனை. எட்டுக்கு எட்டு மற்றும் திசைகளில் களை கட்டிய அண்ணன் விடாது கருப்பனின் யோசனைகள் உண்மையிலேயே நகைச்சுவைப் பொங்கல்.
நகைச்சுவை கவியரங்கம்:
நயமான கவிதையாகவும் இருக்கவேண்டும் அதே நேரம் நகைச்சுவையையும் அள்ளித் தெளிக்க வேண்டும் என்ற ரீதியில் வழக்கமாக மொக்கை போடும் நிகழ்ச்சி இந்த நகைச்சுவைக் கவியரங்கம். இது கவிதை வடிவில் ஒரு கரகர நிகழ்ச்சி வழக்கம் போல அருமை.
புதிய கோணங்கிகள்:
அண்ணன் ஜெகதீஸ்வரனின் புதுகை பூபாளம் குழுவினர் கும்மியடிக்கும் புதிய கோணங்கிகள் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து ஒளிபரப்பினார்கள். ஒவ்வொரு நாட்களுக்கும் ஒவ்வொரு நிலங்கள் என ஐவகை நிலங்களையும் ஒரு அலசு அலசிவிட்டார்கள். தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் ஒளிபரப்பியதால் அமிர்தமும் நஞ்சாகியதைப் போல அலுப்புத்தட்டியதை யாராலும் மறுக்கமுடியாது. ஆனாலும் வாரந்தோறும் விடாமல் பார்க்க வேண்டிய சமூக கேடுகளை நகைச்சுவையோடு விருந்தளிக்கும் இந்நிகழ்ச்சி ஞாயிறுதோறும் பகல் 12.30 மணிக்கும் வளைகுடா நேயர்களுக்காக மறுஒளிபரப்பு இரவு 12 மணிக்கும் (சவூதி,குவைத்**9மணி, துபாய்**10 மணி) இடம்பெறுகிறது.
திரைப்படங்கள்:
வியாழன்,வெள்ளி இரண்டு நாட்களும் ரஸ்ய மொழி மாயா ஜாலத்திரைப்படங்களை ஒளிபரப்பினார்கள். அதிலே ருஸ்லான் மற்றும் லுட்மியா என்ற திரைப்படம் மறுஒளிபரப்பாக இருந்தாலும் நன்றாக இருந்தது. டப்பிங் செய்யாமல் எழுத்துப்போடுவது அதன் சுவாரஸ்யத்தை குறைத்துவிடுகிறது.
ஏமாற்றிய மக்கள் தொலைக்காட்சி :
கடந்த ஆண்டுகளில் பொங்கலுக்கு அதிரடியாக நிகழ்ச்சிகளைப் போட்டு அசத்திய மக்கள் தொலைக்காட்சிக்கு இந்த வருடம் நிகழ்ச்சிப்பஞ்சம் ஏற்பட்டுள்ளதை நன்றாக உணரமுடிகின்றது. கடந்த வருடங்களில் கிராமங்களுக்குள் சுற்றிச் சுழன்ற கேமிராக்கள் இந்த வருடம் செட்டுக்குள்ளேயே முடங்கிப்போனது. நேரலை நிகழ்ச்சிகள் மிகக்குறைவு. பட்டிமன்றம் இல்லை. அதுமட்டுமின்றி என்றைக்குமே தொடாத ஆட்டம் பாட்டத்தை தொட்டது, தேவையற்ற சினிமாக்கள், பாலம் நிகழ்ச்சி இல்லாமை என ஏகப்பட்ட மிஸ்ஸிங். கடந்த வருடங்களில் கிராமம் கிராமமாக விளையாட்டுப்போட்டிகளை நடத்தி அதை ஒளிபரப்பினார்கள். அத்தோடு பிரபலங்கள் ஏர் ஓட்டும் நிகழ்ச்சியை அவர்களின் பேட்டியோடு ஒளிபரப்பினார்கள். இந்த வருடம் என்ன ஆனதோ தெரியவில்லை ரிஸ்க் எடுக்கவேயில்லை.
களத்தில் குதித்த வசந்த் டிவி:
பெரிய தொலைக்காட்சிகள் திரைப்படங்களையும் தேவையற்ற நடிகர் நடிகைகளின் சுய புகழ்ச்சியையும் போட்டு காலத்தை வீணடித்த போது மக்கள் தொலைக்காட்சிக்குப் போட்டியாக களத்தில் குதித்தது வசந்த் டிவி. மாட்டுப்பொங்கலன்று பாலமேட்டிலிருந்தும் மறுநாள் அலங்காநல்லூரில் இருந்தும் ஜல்லிக்கட்டை நேரலை செய்தது. இதன் காரணமாகவோ என்னவோ மக்கள் தொலைக்காட்சி தங்களின் நிகழ்ச்சித் தரத்தைக் குறைத்துக்கொண்டதோ நமக்குத்தெரியவில்லை.
மனதைக் கவர்ந்த விளம்பரம்:
வருடா வருடம் பொங்கல் அல்லது தீபாவளிக்கு நிறைய புதிய விளம்பரங்கள் படையெடுக்கும். ஆனால் ஒன்று அல்லது இரண்டு தான் அனைவரையும் கவரும். அந்த வகையில் இந்த வருடம் அனைவரையும் கவர்ந்த விளம்பரம் அனுஹாசன் தோன்றிய ஹமாம் கிரக பிரைவேச ஆஃபர் தான். மற்றபடி எதுவுமே நச்சென்று இல்லை.
டாஸ்மாக் செய்திகள்:
போகி இரவு கொஞ்சம் களைகட்டிய டாஸ்மாக் வியாபாரம் பொங்கல் அன்று சுத்தமாக படுத்து கடைகள் ஈயாடியது. அடுத்த நாள் மாட்டுப்பொங்கலுக்கும் கானும் பொங்கலுக்கும் சேர்த்து கடுமையாக கல்லாக்கட்டி விட்டனர் கடைக்காரர்கள். வசூல் தொகையைச் சொன்னால் கண்ணுபட்டு போய்விடுவதாக இம்முறை இரகசியம் காத்துவிட்டார்கள் நிர்வாகத்தினர். ஆனாலும் கசிந்த சேதி தீபாவளிக்கு குறைவாம் புத்தாண்டுக்கு அதிகமாம்.
கொசுறுத்தகவல்கள்: கானும் பொங்கல் முடிந்து மெரீனா கடறகரையை சுத்தம் செய்த போது 160 டன் குப்பைகள் கிடைத்ததாம். ஒரு நாளுக்கே இப்படின்னா ஒரு வாரமா இருந்தா? அத்தோடு கடலில் குளித்த 4 இளைஞர்கள் பலியாகினர். கூட்டத்தில் சிக்கி 4 குழந்தைகள் காணாமல் போய்விட்டனர். தமிழர்களின் வீரவிளையாட்டில் பாலமேட்டில் மாடு முட்டி மாடுபிடி வீரர் ஒருவர் பலி. திண்டுக்கல் அருகே நடந்த ஜல்லிக்கட்டில் வேடிக்கை பார்க்கச் சென்ற புதுமாப்பிள்ளை மாடுமுட்டி பலி. அத்தோடு இரண்டு மாடுகள் ஒன்றையொன்று முட்டிக்கொண்டு இரண்டுமே பலி. மொத்தம் 500 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் படுகாயம். தொடரட்டும் தமிழர்களின் வீரவிளையாட்டுக்கள்.


பாஸ் அப்போ சிறப்பு மானாட மயிலாட பார்கலியா?
//ஷாகுல் said...
பாஸ் அப்போ சிறப்பு மானாட மயிலாட பார்கலியா?//
இல்லை சாகுல்! கலைஞர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நான் வெறுக்கும் நிகழ்ச்சிகள் பட்டியலில் இந்த மானாட மயிலாடவும் ஒன்று.
ஆனாலும் நீங்க சன்/கலைஞர் போன்ற அறிவை வளர்க்கும் சேனல்களைப் பார்க்காம இருப்பது சரியில்லை!!
:-)
நல்ல விவரங்கள், நன்றி.
//திவ்யாஹரி said...
நல்ல பதிவு நண்பா.. மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எப்போதும் விழா சம்பந்தப்பட்டதாகவே இருக்கும்.. நானும் இதை உணர்த்த தான் எழுதி உள்ளேன்.. நேரம் இருந்தால் இதை பார்க்கவும்.. http://everythingforhari.blogspot.com/2010/01/blog-post_13.ஹ்ட்ம்ல்//
நன்றி திவ்யா! தொடர்ந்து வாங்க
//ஹுஸைனம்மா said...
ஆனாலும் நீங்க சன்/கலைஞர் போன்ற அறிவை வளர்க்கும் சேனல்களைப் பார்க்காம இருப்பது சரியில்லை!!
:-)
நல்ல விவரங்கள், நன்றி.//
நன்றி ஹுஸைனம்! தொடர்ந்து வாங்க