"ஏன்டா டேய்! ஒரு காலத்துல மாடுங்க நெலத்த உழுதிச்சி. அப்ப மாட்ட அடக்கி உங்க வீரத்த காட்டுனீங்க, ஆனா இப்ப டிராக்டர் தானடா நெலத்த உழுது. அப்படி உங்க வீரத்த காட்டனும்னா ஒரு டிராக்டர ஃபுல் ஸ்பீடுல வரவச்சி அத அடக்குங்களேண்டா" அப்டின்னு நம்ம விவேக் பாணியில அலங்காநல்லூர் பக்கமா போயி சொன்னோமுன்னா நம்மள குனியவச்சி குமுறிடுவாங்க. அந்த அளவுக்கு ஜல்லிக்கட்டு என்ற பெயரில் மாடுகளிடம் முட்டு வாங்கி, உடம்பில் கிழி வாங்குவதில் நம் தமிழர்களுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி. இந்த ஜல்லிக்கட்டு நிகழ்த்தப்படும் மதுரை, தேனி வட்டார பகுதிகளில் மார்கழி மாதம் வந்துவிட்டால் போதும் மகிழ்ச்சி ஆரம்பமாகிவிடும். அப்படி என்ன தான் இருக்கிறதோ இந்த ஜல்லிக்கட்டில்.
காங்கேயம் காளைகள்:
இந்த வகை மாடுகளுக்கு எதிர்ப்புசக்தி இயற்கையாகவே அதிகமாதலால் மழை மற்றும் குளிர்காலங்களில் மற்ற விலங்கினங்களைப் போல மழைக்கால வியாதிகள் இவர்களைத் தாக்குவதில்லை. புண்ணாக்கு, பாதி அரைத்த கோதுமை, கேள்வரகு கூழ், உடைத்த கருப்பு உளுந்து கஞ்சி மற்றும் கருப்பட்டி என விதவிதமான சத்துணவுகள் இவர்களுக்குத் தீனியாக கொடுக்கப்படுகின்றன. மற்ற காளைகளைப் போல இவர்களுக்கு வண்டி இழுக்கும் வேலையோ அல்லது நிலத்தை உழும் வேலையோ கிடையாது. வருடம் முழுவதும் சுகபோகமான வாழ்க்கை. பண்ணையார் எங்கெல்லாம் செல்கிறாரோ அவருக்கு பின்னாலே இவரை பராமரிக்கும் நபர் இவரையும் பின்னால் கூட்டிச்செல்வார். நகரத்தில் நாயைக்கூட்டிக் கொண்டு நடைபயணம் செய்வது போல. இந்த காளைகள் வளர்ப்பதால் எந்தவிதமான இலாபமும் கிடையாது. பெருமைக்காக மட்டுமே வளர்க்கப்படுகிறது.
சிறப்பு பயிற்சி:
கம்ப்யூட்டர் சென்டர்கள் சிறப்பு கோடை கால பயிற்சி முகாம் நடத்துவது போல ஜல்லிக்கட்டுக்கு முந்தைய மாதம் இந்த காளைகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மாலை நேரங்களில் ஆளரவமற்ற இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அதை இருபுறமும் கட்டி மண்ணை கிளர விடுவார்கள். அவரும் தன் கால்களை வைத்து மண்ணைச் சுரண்டி தன் கொம்புகளால் பலம் கொண்ட மட்டும் மண்ணை கிளறித்தள்ளுவார். அவர்களின் கொம்புகள் நன்கு சீவப்பட்டு அதில் விளக்கெண்ணெய் தடவி பளபளப்பாக்கப்படும். கொம்புகளின் கூர்மை கத்திபோல ஆகிவிடும். இதே போல மாதம் முழுவதும் பயிற்சி கொடுக்கப்படும். இந்த நேரங்களில் இந்த மாடுகளுக்கு மனிதர்களைக் கண்டாலே அவர்களை குத்திக் கிழிக்கும் என்னத்தோடு பெருமூச்சி விட்டுக்கொண்டு பாயவரும். அதன் பராமரிப்பாளருக்கு மட்டுமே கட்டுப்படும்.
தனிமையில் இஞ்சிச் சாறு:
ஜல்லிக்கட்டுக்கு முந்தைய பத்து நாட்களுக்கு இவர்களை கொண்டு போய் ஆள் அரவமற்ற தோப்புகளில் கட்டிவிடுவார்கள். இஞ்சியை அரைத்து சாறு எடுத்து அதை அந்த மாடுகளுக்குப் புகட்டி மரங்களில் இரண்டு புறமும் முறுக்குக் கயிறால் இறுக்கமாகக் கட்டிவிடுவார்கள். இவ்வளவு காலமும் உல்லாசமாய் மிருகம் படத்தின் கதாநாயகன் ஆதி போல திரிந்தவரை, அடிமைப்பெண் எம்ஜிஆர் போல கட்டிப்போட்டதால் அவருக்கு ஆத்திரம் இன்னும் அதிகமாகும். அதுமட்டுமின்றி புகட்டப்பட்ட இஞ்சிச்சாற்றின் எரிச்சல் அத்தோடு இறுக்கமாக கட்டிய கயிறு என அனைத்தும் அவருக்கு கடுப்பை கிளப்ப அங்குமிங்கும் தலையை சிலுப்பி எப்படியாவது கயிற்றை அறுக்கும் முயற்சியில் ஈடுபடுவார். இந்தப் பயிற்சியில் அதை பராமரிக்கும் நபரைத் தவிர மற்றவர்கள் அருகே சென்றால் அவ்வளவு தான். கதை முடிந்துவிடும். இப்படியாக கடைசி பத்து நாட்களும் உறுவேற்றப்பட்ட வெறி காளைகள் ஜல்லிக்கட்டில் அணிவகுக்கும்.
புகட்டப்படும் நாட்டுச் சாராயம்:
ஜல்லிக்கட்டு அன்றைக்குக் காலை இவர்களுக்கு நாட்டுச்சாராயம் அல்லது புகையிலைக் காம்பு காய்ச்சிய நீர் புகட்டப்படும். அவருடைய பிரேக் கட்டைகளான மூக்கனாங்கயிறு வாடிக்கட்டைக்குள் மாடு வரும் போது அறுத்துவிடப்படும். பிரேக்கட்டைகள் அறுபட்ட மகிழ்ச்சியில் வாடிக்கட்டைக்குள் இருந்து துள்ளி வெளியே வருவார். அங்கு கூடியிருக்கும் கூட்டமும் ஆர்ப்பாட்டமும் ஆரவாரமும் இவருக்கு ஆத்திரத்தை கிளப்பும். எப்படியாவது ஓடிச்சென்று வெளியேறி விடலாம் என பாய்ந்து செல்லும் போது இந்த மாடுபிடி வீரர்கள் அதன் மீது ஏறி அமுக்குவார்கள். ஏற்கனவே ஆத்திரத்தில் இருக்கும் இவர் தன்மீது ஏறியவர்களை முந்தைய பயிற்சிகளைப் பயன்படுத்தி துவம்சம் செய்துவிடுவார். கொம்புகள் உரசினாலே போதும்,வயிறு கிழிந்துவிடும். தன் கொம்பு விளாசலுக்கு பயந்து ஓடுபவர்களை விரட்டி விரட்டி முட்டி நின்று விளையாடுவார். ஆனால் அதிகபட்சம் இவருடைய நோக்கம் அந்த இடத்தை விட்டு வெளியேறுவதாகத் தான் இருக்கும்.
வெற்றியும் தோல்வியும்:
நாலு பேரின் குடலை சரித்துவிட்டு, இன்னும் சிலருக்கு பின்பக்க சீட்டை காலி செய்துவிட்டு கம்பீரமாக வெளியே வரும் அவருக்கு, அவருடைய பாரமரிப்பாளரின் அதட்டல் சப்தம் கேட்டு அடங்கி நின்றுவிடுவார். முகத்தைச் சுற்றிக் கட்டி தற்காலிக மூக்கனாங்கயிறு போடப்பட்டு அவரை வேனில் ஏற்றி அழைத்துச் செல்வார்கள். பண்ணையாருக்கு இது பெறுமையோ பெறுமை. பழைய படி அவருக்கு பராமரிப்பு வேலைகள் நடக்கும். ஒருவேளை படுத்துவிட்டால அவரின் பாடு திண்டாட்டம். நேராக பண்ணையாரின் தோப்புக்கு அழைத்துச் செல்லப்பட்டு கட்டிவைத்து பிரம்படி மற்றும் சவுக்கடி கொடுக்கப்படும். சில இடங்களில் கத்தியால் குத்திக் கிழிப்பதும், ஈட்டியால் குத்தி தங்கள் ஆத்திரத்தை தீர்த்துக் கொள்வதும் உண்டு. அதுமட்டுமின்றி அதன் பயிற்சியாளருக்கும் "நல்ல கவனிப்பு" கிடைக்கும். அத்தோடு அவர்களை அப்படியே கட்டிப்போட்டு சவளையாக்கி குறைந்த விலைக்கு விற்றுவிடுவார்கள். ராஜபோக வாழ்க்கை வாழந்தவர்கள் வண்டி இழுக்கவும், ஏர் உழவும் போய்விடுவார்கள். இது போன்ற மாடுகள் அதிகமாக எண்ணெய் செக்குகளில் தான் பூட்டப்படும். ஆனால் தற்போது செக்குகள் மின்மயமாகி விட்டதால் அங்கு இப்போது மாடுகளுக்கு வேலையில்லை. மேலும் வேலை செய்யாமல் அடம்பிடிப்பவர்களை கேரளாவுக்கு ஏற்றிவிடுவார்கள்.
மாடுபிடி வீரர்கள்:
வருடம் முழுவதும் வீரர்களாக வலம்வரும் காளைகள் அன்றைக்கு ஒருநாள் அடிமைகளாக மாறிவிட, காலங்காலமாக அடிமைகளாக இருப்பவர்கள் அன்றைக்கு ஒருநாள் மட்டும் வீரர்களாக மாறிவிடுவார்கள். இந்த மாடுபிடி வீரர்கள் பண்ணையார்கள் கிடையாது, சாதாரண பண்ணையாட்கள். இவர்களை நம்பியிருக்கும் குடும்பத்திற்கு ஒரேயடியாக டாட்டா காட்டிவிட்டு போய் சேர்ந்துவிடுவார்கள். கைகால்களை மட்டுமே மூலதனமாக கொண்டு பிழைக்கக் கூடிய இவர்களின் காயங்கள் ஆற அதிகபட்சம் ஆறுமாதங்கள் வரை ஆகிவிடும். அதற்குப்பிறகு இவர்களில் பலருக்கு கடுமையான வேலைகள் பார்க்கமுடியாது. உழவர் திருநாள் இப்படி உயிரை எடுக்கும் திருநாளாக மாறிவிட்டதை எண்ணி வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை. இதை நாம் சொல்லப்போனால் இவன் தமிழனின் வீரத்தை குறைசொல்கிறான் என்பார்கள். தமிழன் தன் வீரத்தை காட்ட வேண்டிய இடத்தில் காட்டியிருந்தால் இன்றைக்கு ஆலய நுழைவுப் போராட்டங்களுக்கு அவசியமே இருக்காது. அதைவிடுத்து மாடுகளிடம் குத்துவாங்குவதை வீரமென்று சொல்லிக் கொள்வதை யாரிடம் போய்ச் சொல்ல?
வசந்த் டிவியில் நேரலையில் ஜல்லிக்கட்டு:
உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக நம்ம வசந்த் டிவி வரும் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் அலங்காநல்லூர் மற்றும் பாலமேட்டில் இருந்து இந்த வீரவிளையாட்டுக்களை நேரலையில் ஒளிபரப்பு செய்ய இருக்கிறார்கள். ஜல்லிக்கட்டினை இதுவரை கண்டிராதவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்பாக இருக்கும் என்று சொல்கிறார்கள். எனவே 15 மற்றும் 16 தேதிகளில் மக்கள் தொலைக்காட்சிக்கு போட்டியாக களமிறங்கிவிட்டது வசந்த் டிவி.


"வருடம் முழுவதும் வீரர்களாக வலம்வரும் காளைகள் அன்றைக்கு ஒருநாள் அடிமைகளாக மாறிவிட, காலங்காலமாக அடிமைகளாக இருப்பவர்கள் அன்றைக்கு ஒருநாள் மட்டும் வீரர்களாக மாறிவிடுவார்கள். "
நல்லா இருக்கு சாமி...!
அக்குவேறா ஆணி வேறா பிரிச்சு மேஞ்சிட்டீங்களே நிஜாம். ரொம்ப டீட்டெய்லா ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க.
////தமிழன் தன் வீரத்தை காட்ட வேண்டிய இடத்தில் காட்டியிருந்தால் இன்றைக்கு ஆலய நுழைவுப் போராட்டங்களுக்கு அவசியமே இருக்காது. அதைவிடுத்து மாடுகளிடம் குத்துவாங்குவதை வீரமென்று சொல்லிக் கொள்வதை யாரிடம் போய்ச் சொல்ல?////
ரொம்ப சரி.
ஏண்ணே! இந்த மாடுங்க இருக்கே மாடுங்க. இதுங்க புண்ணாக்கு பொட்டலம், குவார்டரு, காசுக்கெல்லாம் மண்டி போடாதா? நம்மள விட தேவலை போலயே..அவ்வ்வ்
/இந்த மாடுபிடி வீரர்கள் பண்ணையார்கள் கிடையாது, சாதாரண பண்ணையாட்கள்.//
அரசியலானாலும் சரி, அன்றாட வாழ்வானாலும் சரி, பலியாடுகள் இவர்கள்தான்.
வீர விளையாட்டு என்ற பெயரில் ஊக்குவிப்பவர்கள் ஒருமுறை களத்தில் இறங்கட்டுமே?
//chinnappayal said...
"வருடம் முழுவதும் வீரர்களாக வலம்வரும் காளைகள் அன்றைக்கு ஒருநாள் அடிமைகளாக மாறிவிட, காலங்காலமாக அடிமைகளாக இருப்பவர்கள் அன்றைக்கு ஒருநாள் மட்டும் வீரர்களாக மாறிவிடுவார்கள். "
நல்லா இருக்கு சாமி...!//
நன்றி அய்யா! தொடர்ந்து வாங்க
// S.A. நவாஸுதீன் said...
அக்குவேறா ஆணி வேறா பிரிச்சு மேஞ்சிட்டீங்களே நிஜாம். ரொம்ப டீட்டெய்லா ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க.//
நன்றி நவாஸ்! தொடர்ந்து வாங்க
// வானம்பாடிகள் said...
ஏண்ணே! இந்த மாடுங்க இருக்கே மாடுங்க. இதுங்க புண்ணாக்கு பொட்டலம், குவார்டரு, காசுக்கெல்லாம் மண்டி போடாதா? நம்மள விட தேவலை போலயே..அவ்வ்வ்//
அண்ணே! அதுங்களுக்கும் ஓட்டு இருந்தால் மண்டி போடுமே!!!!
//ஹுஸைனம்மா said...
/இந்த மாடுபிடி வீரர்கள் பண்ணையார்கள் கிடையாது, சாதாரண பண்ணையாட்கள்.//
அரசியலானாலும் சரி, அன்றாட வாழ்வானாலும் சரி, பலியாடுகள் இவர்கள்தான்.
வீர விளையாட்டு என்ற பெயரில் ஊக்குவிப்பவர்கள் ஒருமுறை களத்தில் இறங்கட்டுமே?//
அருமை ஹூசைனம்மா! யார் இறங்குவாங்க???
thamilar veeram. mikaiyana karpanai
Super பதிவு... மிக நன்றாக விரிவான விளக்கம் வழங்கியுள்ளீர்கள்...
வெறும் ஆரவார உணர்ச்சியின்றி அழகான தகவல் கொர்வை...
சிறு குறிப்பு: இங்கு எடுத்தாளப்பட்டுள்ள படங்கள் அனைத்தும் எனது இனிய நண்பர் திரு.ஹெங்க் ஜேகொப் (Henk Jacobs a.k.a. ooochappan)அவர்களுடையது. (http://www.flickr.com/photos/oochappan/)
அவர் வருடத்தில் பாதி நாட்கள் தமிழகத்தில் இருந்து மதுரை மற்றும் அதன் சுற்றுப்புறங்களை மிகச்சிறப்பாக தன் ஒளிஊடகத்தில் வெளிப்படுதுவார்.
தமிழர் பற்றிய பதிவு என்றால் அனுமதியை மகிழ்ந்து அளிப்பார். இல்லாவிடில் இந்த ஒரு மன வறுத்தமாகவே இருக்கும்.
அன்புடன்
ப்ரேம்
//Prem said...
Super பதிவு... மிக நன்றாக விரிவான விளக்கம் வழங்கியுள்ளீர்கள்...
வெறும் ஆரவார உணர்ச்சியின்றி அழகான தகவல் கொர்வை...
சிறு குறிப்பு: இங்கு எடுத்தாளப்பட்டுள்ள படங்கள் அனைத்தும் எனது இனிய நண்பர் திரு.ஹெங்க் ஜேகொப் (Henk Jacobs a.k.a. ooochappan)அவர்களுடையது. (http://www.flickr.com/photos/oochappan/)
அவர் வருடத்தில் பாதி நாட்கள் தமிழகத்தில் இருந்து மதுரை மற்றும் அதன் சுற்றுப்புறங்களை மிகச்சிறப்பாக தன் ஒளிஊடகத்தில் வெளிப்படுதுவார்.
தமிழர் பற்றிய பதிவு என்றால் அனுமதியை மகிழ்ந்து அளிப்பார். இல்லாவிடில் இந்த ஒரு மன வறுத்தமாகவே இருக்கும்.
அன்புடன்
ப்ரேம்
//
நன்றி திரு பிரேம். இந்தப் படங்கள் அனைத்தும் நான் கூகிலில் தேடிய போது கிடைத்தவை. மற்றும் தினமலர், தினமணி இதழ்கள் வாயிலாகவும் கிடைத்தவை. இருந்தாலும் உங்கள் நண்பரின் புகைப்படமாக இருப்பின் அனுமதி கேட்டிராது கண்டு நான் மனம் வருந்துகிறேன். திரு.ஹெங்க் ஜெகொப் அவர்களுக்கு நன்றி,.சுட்டிக்காட்டிய தங்களுக்கும் நன்றி..