திருச்சி அருகே திண்ணியத்தில் ஒரு ஒடுக்கப்பட்ட சகோதரனின் வாயிலே மனித மலத்தை கரைத்து ஊற்றியதும், இரட்டைக்குவளை முறைகளும், ஆலயத்திற்குள் அன்னிய(மதத்தவ)ர்கள் பிரவேசிக்கக்கூடாது என பலகை வைத்துவிட்டு அந்த மதம் சார்ந்தவனையே உள்ளே விட மறுப்பதும் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதிலும் இரட்டைக்குவளை முறை ஒழிந்துவிட்டதாக மார் தட்டும் என் சமுதாயமே! இன்னும் எத்தனை ஊர்களில் இரட்டைக்குவளை முறை சத்தமேயில்லாமல் வீர நடை போடுகிறது எனத் தெரியுமா? முன்பெல்லாம் உயர் சாதியினருக்கு கண்ணாடி கிளாசிலும், மனித பிறவியே இல்லாத தாழ்ந்த சாதியினருக்கு தேய்காய் சிரட்டையிலும் தேனீர் கொடுத்த இரட்டை குவளை முறை முற்றிலும் ஒழிந்துவிட்டது என அரசுகள் சொல்லிவருவது உண்மைதான். அதாவது பழையமுறை மாறிவிட்டது இப்போது சிரட்டைகளுக்கு பதிலாக ஒருமுறை உபயோக பிளாஸ்டிக் கிளாஸ் வடிவில் இரட்டைக்குவளை முறை இன்னமும் நடைமுறையில் தான் இருக்கிறது.
நான் கல்லூரியில் இளங்கலை படித்துக்கொண்டிருக்கும் போது எங்களுடைய நாட்டு நலப்பணித்திட்டத்தில்(NSS) இருந்து அருகேயிருந்த ஒரு கிராமத்தில் முகாமிட்டிருந்தோம். பத்து நாட்கள் அங்கே கேம்ப். அந்த ஊர் பள்ளிக்கூடத்தில் தங்க இடமளித்திருந்தார்கள். பகல் பொழுதில் அந்த ஊரைச்சுத்தம் செய்தல், மற்றும் சுகாதார ஆலோசனைகள் வழங்குதல் என பொது பணிகளை மேற்கொண்டுவிட்டு, இரவில் ஒரே ஆட்டம் பாட்டம் தான். இரவுப்பொழுதில் பள்ளிக்கூடம் முன்பு அந்த ஊரே கூடி விடும். ரெக்கார்ட் டான்ஸ் மற்றும் நாடகங்கள் என ஒரே கலகலப்பு தான். ஓய்வாய் இருக்கும் மாலை நேரங்களில் அந்த ஊரைச்சுற்றி வருவோம். அந்த ஊருக்கு ஒரு நாளைக்கு ஒரே ஒரு பஸ் மட்டுமே காலையும் மாலையும் வந்து செல்லும்.
4 கிலோமீட்டர்கள் நடந்து சென்றால் அங்கே மெயின் ரோடு. தமிழ் சினிமாக்களில் காட்டப்படும் கிராமத்து டீக்கடை. ஒருநாள் மாலைநேரம் நடந்தபடியே மெயின்ரோட்டுக்கு வந்துவிட்டோம். அங்கே இருந்த டீக்கடையில் அனைவருக்கும் டீ ஆர்டர் செய்து உக்கார்ந்தோம். அனைவருக்கும் பிளாஸ்டிக் கிளாஸில் டீ வந்தது. அப்போது வெள்ளை வேட்டியில் மினுமினுப்பாக வந்த ஒருவர் டீ கேட்டு அமர்ந்தார். அந்த நேரம் வயலில் வேலை செய்துவிட்டு வந்த ஒருவரும் வந்து டீ கேட்டார். எங்களுக்கு அப்போதெல்லாம் இரட்டைக்குவளை முறை பற்றிய அறிவு இல்லை. உடனே கடைக்காரர் ஒரு கண்ணாடி கிளாஸையும், ஒரு பிளாஸ்டிக் டம்ளரையும் எடுத்துவைத்து டீ ஆற்ற ஆரம்பித்தார். அதை கிளாஸிலும், பிளாஸ்டிக் குவளையிலும் ஊற்றினார். முதலில் கிளாஸை அந்த வெள்ளை வேட்டிக்காரரிடம் நீட்ட அதை வாங்கிக் கொண்டார் வெள்ளை வேட்டிக்காரர்.
வாங்கிய டீயைக் குடிக்காமல் கையில் வைத்திருந்த வெள்ளை வேட்டி, அந்த தொழிலாளி சென்றபிறகு கடைக்காரர் அருகில் சென்று டீயோடு கிளாஸை வைத்துவிட்டு,"ஏய்யா என்ன திமிறு இருந்தா அவனுக்குப் போட்ட டீயில எனக்கும் ஊத்துவ, ஜாக்கிரத, கடைய நைட்டோட நைட்டா நைட்டா கொழுத்திடுவேன்" என சத்தமிட்டுவிட்டு வெளியேறிவிட்டார். அப்போது தான் புரிந்தது இரட்டைக்குவளையின் சாராம்சம். அந்த நேரம் எங்களின் கைகளிலும் இருந்த அந்த பிளாஸ்டிக் டம்ளரைப் பார்த்து எங்களுக்கே அவமானமாயிருந்தது. அதாவது நன்கு தெரிந்த தாழ்த்தப்பட்டவருக்கும் மற்றும் முகம் தெரியாத எங்களைப் போன்ற வெளியூர்காரர்களுக்கும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் டம்ளர்களைப் பயன்படுத்துகின்றனர். நல்லவேளை அந்த ஊருக்கு கொஞ்சநாள் முன்னாடி போகவில்லை. போயிருந்தால் தேங்காய் சிரட்டையில் டீ தந்திருப்பார்கள் பாவிகள்.
ஆக மனிதனை இனம்பிரித்தவர்களின் சூழ்ச்சியில் இன்னமும் நமது சமூகம் சிக்கிக்கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் அதை பிரதிபலிக்கும் விதமாக தந்தை பெரியார் வலைக்காட்சியகம் சார்பில் ஒரு அருமையான குறும்படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். புனிதம் என்று பெயர் வைத்திருக்கும் இந்தக்குறும்படத்தை சகோ.தளபதி ராஜ் அவர்கள் இயக்கியிருக்கிறார்கள். மிக எளிமையான சம்பவங்களை வைத்து அமைத்துள்ள இந்தப்படம் அருமையாக ஒப்பீடு காட்டுகிறது. மாட்டுச்சாணத்தை விட, காக்கையின் எச்சத்தை விட ஒரு சூத்திரனின் கைவிரல் கொடுமையானது தா எனக்கேள்வி கேட்டு சவுக்கடி கொடுக்கிறது இந்தப்படம். அத்தோடு நீங்களெல்லாம் கோயிலுக்குள் வந்தால் புனிதம் கெட்டுவிடும் என சொல்லிவிட்டு சமீபத்தில் கோயிலுக்குள் நடந்த புனிதச் சம்பவத்தையும் சேர்த்து தோலுரித்துக் காட்டியிருக்கிறார் இயக்குனர்.
ஒருமுறை தந்தை பெரியாரிடம் கேட்டார்களாம், நெற்றியிலிருந்து பிறந்தவன், மார்பிலிருந்து பிறந்தவன், தொடையிலிருந்து பிறந்தவன், பாதத்திலிருந்து பிறந்தவன் என ஒவ்வொருவராகச் சொல்கிறார்களே! ஆனால் இந்தப் பட்டியலில் வராத ஒரு இனம் இருக்கிறதே! அவர்கள் எங்கிருந்து பிறந்தார்கள் எனக் கேட்க, ரொம்ப சிம்பிளாகச் சொன்னாராம் பெரியார், "அவன் தான் பிறக்கவேண்டிய இடத்திலிருந்து பிறந்தவன்" என்று.

இதுவரை என்னோடு பழகும் நண்பர்களிடம் அவர்கள் என்ன ஜாதி என்று நான் கேட்டதுமில்லை, அதற்கான அவசியமும் எனக்கு இல்லை. என் நண்பனிடத்தில் அவனுடைய ஜாதி என்னவென்று கேட்பது அவனை நடுத்தெருவில் நிற்க வைத்து அவமானப்படுத்துவதற்கு சமமாகும் என்பது எனது கருத்து.
பிறப்பால் யாரும் உயர்ந்த குலமாக ஆகிவிடமுடியாது. உயர்சாதி என சொல்லிக்கொள்ளும் சாதியில் பிறந்த ஒரு குழந்தையை ஒரு தாழ்த்தப்பட்டவன் வளர்த்தால் அந்தக் குழந்தையும் ஒரு கீழ்சாதியாக வளர்கிறது. அதேபோல ஒரு தாழ்த்தப்பட்டவன் வீட்டில் பிறந்த குழந்தையை மேல்சாதி என சொல்லிக்கொள்பவர்கள் வளர்த்தால் அது மேல்சாதியாகிவிடுகிறது. ஆக யாரும் பிறப்பால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் கிடையாது. வளர்ப்பால், பொருளாதாரத்தால் மட்டுமே உயர்வு தாழ்வுகள் கற்பிக்கப்படுகிறது.
சாதி இரண்டொழிய வேறில்லை
சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையின்
மேதினியில் இட்டார் பெரியோர் இடாதார்
இழிகுலத்தோர் பட்டாங்கில் உள்ளபடி .
என்று சொன்ன ஔவையாரைக் கூட என்ன சாதி என்று கேட்காமல் இருந்தால் சரி.
இந்த புனிதம் குறும்படம் நமக்காக, நம் மனதில் ஒட்டியிருக்கும் அழுக்கைக் கழுவுவதற்காக.
நன்றி: பெரியார் வலைக்காட்சியகம்


அருமையா உங்க அனுபவத்தோடயும் சொல்லியிருக்கீங்க நிஜாம். காணொளியும் நல்லா இருக்கு.
(வடிவேலு மன உளைச்சல் தாங்காம கம்ளைண்ட் கொடுத்திட்டார் போல, சாரி இது பழைய பதிவுக்கு)
:). நல்ல கருத்தும் பகிர்வும். பவர்ஃபுல் மீடியா
நன்றி நவாஸ். பாவம் வடிவேலு. இத ஒரு மேட்டரா எடுத்துக்காம விட்டிடலாம்னு தான் இருந்தாராம். ஆனா மன உளைச்சல் மற்றும் கூட இருந்தவங்க கரைச்சல் தாங்காம கம்ப்ளைன்ட் கொடுத்திட்டார். அப்பறம் நவாஸ் எப்ப ஊருக்கு??
// வானம்பாடிகள் said...
:). நல்ல கருத்தும் பகிர்வும். பவர்ஃபுல் மீடியா//
நன்றிண்ணே! வருகைக்கும் கருத்துக்கும்