ஆயம்மா என்றே அழைத்துப் பழகிவிட்டனர் அந்தப்
பகுதியினர் அவசரத்தில் பெயர் கூடத்தெரியவில்லை
ஏட்டுப் பதிவுக்கு. கிழவியின் மச்சிப்போன குடிசைக்கு
இதுவரை யாருமே போனதில்லை, இன்றைக்கு எங்கள்
தெருவே அதன் முன்னாள்.
எங்கிருந்து வந்தாளோ இவள் சொந்தங்கள் யாரோ?
யாருமறியர். எங்களூர் பள்ளிக்கூட சமயக்கட்டிலேயே
பலகாலம்கிடந்து பட்டம் வாங்கியவள். ஆயம்மா எனும்
பட்டத்தை பெறுவதற்காக அவள் தினசரி பாடுபட்டவள்
பாட்டாளி வர்க்கத்தின் அடையாளமாய்.
ஊரின் ஒதுக்குப்புறமாய் இருந்த ஒற்றைக் குடிசையிலே
தங்கி இந்த ஊரின் பிள்ளைகளுக்கே அன்னமிட்டவள்.
நான் கூட அவள் கையில் சாப்பிட்டிருக்கிறேன். அவளின்
கைமணத்தில் மீந்து போன சாம்பாரு வாங்க எங்களூரே
கிண்ணமேந்தும் தினசரி.
தினக்கூலி 10 ரூபாய்க்காக கொஞ்சம் கொஞ்சமாக
தீயிலே வெந்தவள், இன்று முழுமையான தீயின்
மோட்சத்திற்காக! இதற்கு மேல் வேண்டாம் என
கரையான்கள் கூட முடிவெடித்து விட்டுப் போன
அந்தப் பாயிலே தன் கூரை நோக்கி.
இரவில் வரும் நிலாவையும் நட்சத்திரங்களையும்
தவிர அவளுக்கென்று வேறு துணையில்லை. இரவுப்
பொழுதில் இத்துப்போன குடிசையின் வழி இந்த
விருந்தாளிகள். அமாவாசையில் அவள் அனாதி தான்.
எப்படி வாழ்ந்தாள் இந்த வாழ்க்கையை?
அதிகாலைப் பொழுதிலே அங்கேயிருக்கும் அய்யனார் டீ
கடையை கூட்டிப்பெருக்கி கோலமிடுவாள். அதற்கெனக்
கூலி ஒரு டீயும்,பன்னும் மற்றபடி அவளுக்கென்று எங்குமே
கடனில்லை. கவுரமாய் வாழ்ந்தவள் இன்று காற்றுக்குச்
சாய்ந்த கதிர்போல உதிர்ந்துவிட்டாள்!
ஊருக்கெல்லாம் அன்னமிட்ட அன்னத்தாயின் வாயிலே
போடுவதற்கு கூட பிடி அரிசி இல்லை. அரிசியோடும்
பருப்போடும்,எண்ணையோடும் வாழ்க்கை நடத்தியவளுக்கு
இறுதியாக வைக்க ஒரு துளி எண்ணெய் கூட அங்கில்லை.
சுத்தமாய் துடைத்துப் போட்டது போல வீடு.
தைக்க இனி இடமேயில்லாத இரண்டு சேலைகளும்
நெளிந்து போன ஒரு தட்டும்,ஒரு மண்பானையும்,ஒரு
சிறிய தூக்கு வாளியும் தான் அவளுடைய சொத்தாக
இருந்தது.மதியஉணவை அங்கேயே உண்டு மீதமிருந்தால்
அதுவே தூக்குவாளி வழி இரவு உணவாய்.
நேர்மையாய் வாழ்ந்திருக்கிறாள் இத்தனை காலமும், ஒரு
குண்டுமணி அரிசி கூட பள்ளியிலிருந்து அவள்வீட்டுக்கு
நகரவில்லை. உத்தமியாய் பத்தினியாய் படுகிளவியாய்
முகம்முழுவதும் வருமைக்கோடு கொண்டு வாழ்ந்து வந்த
அவளின் அகால மரணத்தின் காரணம்?
பள்ளி சமயக் கட்டருகிலே தானம்மா தோடு தொலைத்தேன்
என்று தெரியாமல் சொல்லிய அந்தச் சிறுமியின் மவுனம்
அடங்காபிடாரித் தாயின் வாயிலிருந்து வம்பாய் வெடித்து
ஆயம்மாவைப் பதம்பார்த்தது. நீ தான் எடுத்திருப்பாய் என.
எவ்வளவோ மறுத்தும் பலனில்லை..
உன்னத் தெரியாதா? அரிசி பருப்பக் களவாண்டு செட்டியாரு
கடையில விக்கிறவதானடி நீ! எங்கடி எம்புள்ள தோடு?
கெழட்டுச் சிருக்கி! சாகப்போற வயசுல தங்கத்தோடு கேக்குதோ
மருவாதயா கொடுடி. அவளின் அலறல்களை வழக்கம் போல
வேடிக்கைப் பார்த்தது வீணாய்ப் போன சமூகம்.
திமிரு கொண்டெரியும் தீயின் நாக்குகளை அடக்கியாளத்
தெரிந்த அவளுக்கு மனித நாக்குகளை அடக்க சக்தியில்லை.
நல்ல பெயரெடுத்தவள் ஒரு நொடியிலே நாதியற்றவளாய்
கூனிக்குருகி! கூப்பாடு போட்டவளின் குரலை எதிர்க்க
முடியாத கோழையாய் ஏழையாய்.
அவளின் கூப்பாடு கேட்டு கூடிய ஊர் அந்தக் கிளவியின்
அரண்மனை அருகே ஆக்கிரமித்திருந்தது.உண்மையாய்
இருக்குமோ! யாரையப்பா நம்ப முடியுது இந்தக் காலத்துல?
பணம்னு வந்த பொணம் கூட வாயத்தொறக்குமப்பா!
ஊகங்கள் உதிர்த்துக் கொட்டப் பட்டன.
காலைல வருவேன் மருவாதயா நீ குடுத்திரனும் இல்லனா
உண்டு இல்லைன்னு பண்ணிருவேன் என சத்தமிட்டு,
வா சனியனே! என தன்பிள்ளையை இழுத்து அவள் வீடு
சென்று சிறுமியின் சீருடை கழட்டயிலே சட்டையின் ஊக்கிலே
உள்பக்கமாய் சிக்கி தொங்குதய்யா தோடு.
யாத்தே! அந்தக் கெழவிய கேவலப்படுத்திட்டேனே என ரா
முழுதும் அழுது, காத்தால மொத வேல அவ காலுல
உழுவதுதான் என முடிவு செஞ்சி வராத தூக்கத்த வம்புக்கு
இழுத்தும் வரலையே! சூரியன் எழுந்திருக்கும் காலம் வரை
சூனியமா தெரிஞ்சது அவளுக்கு.
காத்தால பதறியடிச்சி ஓடியாந்தா கெழவி வூட்டு வாசலுல
தான் இந்தக் கூட்டம். புரியாம உள்ள போனா, மானஸ்தி
கெழவி ராத்திரியே தான் ஒரு உத்தமின்னு நிறுபிச்சிட்டா.
ஆத்தா! என்ன மன்னிச்சிடு ஆத்தா! நாந்தெரியாம செஞ்ச
தப்புக்கு நீ, என் சொல்லே உனக்கு எமனா?
அனாதக் கெழவிக்கு யாருய்யா கொள்ளிபோடறது?
யோவ்! நம்ம புள்ளைங்களுக்கு தெனெக்கிம் சோறு போடற
ஆத்தாவ அனாதின்னு சொல்லாதய்யா? அவ நமக்கு ஆத்தா.
ஆளுக்கொரு கொள்ளியெடுங்க. அவளுக்கு நாம எல்லாருமே
புள்ளைங்க தானய்யா.
வீட்டுக்கு கொஞ்சம் வெறகு தாங்க! இந்த தாய்க்கு எல்லாருமே
சொந்தம் தான். இத்தனை நாளும் தங்கள் இனத்தை எரித்த
கிழவியை இப்போது தாங்கள் எரிக்கப் போவதாக நினைத்து
அவள் வீட்டு வாசலில் குவிந்த விறகுகள் பெருமை கொண்டன.
பள்ளிக்கூடத்திலிருந்தும் ஒரு கை விறகு வந்தது.


இரு கண்களிலும் கண்ணீரை வர வலைத்து விட்டீர்கள்
நன்றி அனானி!தொடர்ந்து இணைந்திருங்கள்
// ஆத்தாவ அனாதின்னு சொல்லாதய்யா? அவ நமக்கு ஆத்தா.
ஆளுக்கொரு கொள்ளியெடுங்க. அவளுக்கு நாம எல்லாருமே
புள்ளைங்க தானய்யா.
//
இந்த வரிகள் கலங்க வைத்து விட்டன நிஜாம்..நல்லா எழுதியிருக்கீங்க..ஒரு சிறுகதைக்கேற்ற கரு.
கேப் விடாம எழுதியிருந்தா ஒரு சிறுகதையா டெவலப் பண்ணியிருக்கலாம்.இப்ப ஒன்னும் கெட்டு போவல.
வரிகளுக்கு இடையில் கேப்பை நிவர்த்தி செய்து முயன்று பாருங்கள்.
வாழ்த்துகள் !!! தொடர்ந்து இது போல் இன்னும் நிறைய எழுதுங்கள் !!!!
வரவேற்பு குறித்து கவலை வேண்டாம்.போக போக தானாக கூட்டம் கூடும்.
இடியே ஆனாலும் தாங்கி கொள்ளும் இதயம்
சிறு பழி தாங்க கூடலையே.
unarchi perukeduppu...
அவள் வீட்டு வாசலில் குவிந்த விறகுகள் பெருமை கொண்டன.
அப்படி வாழ்வதுதான் வாழ்க்கை என்று புரிகிறது.
அருமையான சொல் ஓவியம்
கருத்துக்களை வெளிப்படுத்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. செய்யத் இதை சிறு கதையாகத்தான் எழுதிவைத்திருந்தேன். ஆனால் அதன் நீளம் என்னை கவலையடைய வைத்துவிட்டதால் அதை மாற்றீ நீள் கவிதையாக வடித்தேன், இருந்தாலும் உங்க அளவுக்கு நமக்கு கத சொல்ல வருமான்னு தெரியல..
மிகவும் அருமையான் கதை அய்யா.
நிஜாம் பாய் நான் இதை கதையாக நினைக்கவில்லை இந்த உலகில் எதோ ஒரு பகுதியில் இந்த மாதிரி தாயம்மா இருப்பார்கள் என்றுதான் நினைக்கிறான்
கண்களில் கண்ணீரை வர வளைத்து விட்டிர்