
இந்தியா தனது பாதுகாப்பு விசயத்தில் எப்போதுமே உசாராக இருக்கும். எவ்வளவு தீவிரகண்காணிப்புகளுக்கும் மத்தியில் எப்படி பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவுகிறார்கள்? எப்படி தாக்குதல் நடத்துகிறார்கள்? என்பது இன்னமும் நமது பாதுகாப்பை சந்தேகிக்கும் கேள்விகள். இந்தியாவின் பாதுகாப்புத்துறையில் அல்லது அதிகாரப்பிரிவில் இருப்பவர்களைத் தாண்டி நிச்சயமாக எவனாலும் உள்ளே நுழைய முடியாது. இது ஒருபுறம் இருக்கட்டும். இது நாள் வரை இந்தப் பக்கம் பாகிஸ்தானின் இம்சையையும் அந்தப்பக்கம் சீனாவின் இம்சையையும் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்டா என்ற ரீதியில் ஓட்டி வந்த இந்தியாவிற்கு இப்போது ஒரு புதிய பிரச்சினை. ஆமாம் அது இலங்கையின் மூலம் வரப்போகும் பிரச்சினை. தேங்காய் சைஸ் இருக்கும் அதனால் அக்கப்போரு செய்ய முடியாது என இந்தியா நினைத்து வந்தது. ஆனால் இப்போது இலங்கை என்ற சுயேட்சை நாடு சீனா முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி வைத்து விட்டதால் இனி அவர்களைச் சமாளிப்பது கொஞ்சம் கடினம் தான்.
விரும்பியோ விரும்பாமலோ இத்தனைக் காலமும் விடுதலைப் புலிகள் இலங்கையின் வடக்குப் பகுதியில் இருந்து இந்தியாவின் தென்பகுதியைக் காத்து வந்தார்கள் என சொல்லலாம். இப்போது வடக்குப் பகுதி முழுமையுமே இலங்கையின் வசம் வந்து விட்டதாலும் அவர்களின் புதிய தலைவர் சீனாவின் முழு ஒத்துழைப்பாலும் இலங்கை அரசு வடக்குப் பகுதியில் தனது ரானுவத் தளத்தினை அமைக்க முயற்சித்து வருவது ஊரறிந்த செய்தியாகும். அவ்வாறு அவர்கள் வடக்குப் பகுதியில் ராணுவ கிட்டங்கிகள் அமைப்பது புலிகளின் வேர்கள் மீண்டும் முளையாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் என்று சொல்லிக்கொண்டாலும் அதிலே நாளைய இந்தியாவின் சொல்லப்போனால் நாளைய தமிழகத்தின் அபாயக் கட்டத்திற்கு போடும் அடித்தளமாகத் தான் கருத வேண்டியிருக்கிறது.
அப்பாவித் தமிழர்களை அடித்து அடித்தே உலக அளவில் பெரிய ரவுடி என்று பேர் வாங்கிவிட்ட இலங்கை, தற்போது அடிப்பதற்கு ஆள் கிடைக்காததால் தனது அண்ணன் வழங்கிய ஆயுதங்கள் துருப்பிடித்துப் போய்விடுமோ என பயந்து அதை கூர்படுத்துவதற்காக இந்தியாவின் மீது ஏவிப்பார்த்தால் என்னவாகும்? வடக்குப் பிரதேசங்களில் இருக்கும் பாதுகாப்பு இனிமேல் தெற்கிலும் குறிப்பாக இராமேஸ்வரம் முதல் கடற்கரைக் கிராமங்கள் முழுவதும் பிடித்து நாகப்பட்டினம் வரை முழுப்பாதுகாப்பு போடவேண்டி வரும்.
நமது நாட்டின் கடற்படையின் செயல்பாடு மிக மிக மந்தம். எவனாவது இளிச்சவாயன் மாட்டினால் அவர்களை ரவுண்டு கட்டி அடிப்பார்கள். மற்றபடி நமது ரேங்க் குறைவு தான். எனவே தான் இதனைக் கருத்தில் கொண்டு சமீபத்தில் நடந்த முதல்வர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தமிழகத்தின் துணை முதல்வர் தளபதி மு.க ஸ்டாலின் அவர்கள் கடற்பாதுகாப்பை அதிகப்படுத்துதல் மற்றும் உறுதிப்படுத்துதல் குறித்து பேசியிருந்தார். தலைப்பக்கம் மட்டுமே அடித்து வந்த சீனா இனி வால்பக்கம் அடிக்கவும் வாய்ப்பிருக்கிறது. அதனால் தான் எப்படியாவது இலங்கையை தாஜா செய்யும் வேலையைத் இந்திய அரசாங்கம் செய்து வருகின்றது. காரணம் இன்று இருக்கும் சூழ் நிலையில் இலங்கையை பகைத்துக் கொண்டால் அவர்களிடமிருந்து எதிர்வினை பெறவேண்டியிருக்கும் என்பதால் தான்.
எது எப்படியோ எந்த நாட்டிற்கு போர் செலவு இல்லையோ அந்த நாட்டின் முன்னேற்றம் பிரமாதமாக இருக்கும் என அறிந்தவர்கள் சொல்வார்கள்.உதாரணம் சிங்கப்பூர்,மலேசியா போன்றவை. நாமும் போரில்லாத ஒரு தேசத்தை உருவாக்க முயற்சிப்போம். முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்.


No Response to "இம்சை இலங்கையும் சீறும் சீனாவும்"
Post a Comment