2000 ஆம் வருடம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மீது நடந்த வழக்குகளில் பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் அவரை குற்றவாளி என தீர்ப்பளித்தது நீதிமன்றம். நீதிமன்றத்தின் தீர்ப்பு எப்படி இருந்தாலும் அதை எதிர்கொள்ள அந்தக் கட்சியின் தொண்டர்கள் பெயரில் இருந்த குண்டர்கள் தயாரானார்கள். கடைகளை சூறையாடுதல், பேரூந்துகளை சேதப்படுத்துதல் என அவர்கள் ஏற்கனவே திட்டம் வகுத்து தான் இருந்தார்கள். அவர்கள் எதிர்பார்த்தது போலவே தீர்ப்பு எதிர்ப்பாக வெளியானவுடன் தங்களது வேட்டைகளை துவக்கினார்கள். அவர்களில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குழு இலக்கியம்பட்டி என்ற ஊரில் நின்று கொண்டு அந்த வழியே வந்த வாகனங்கள் மீது கல்வீசித் தாக்கிக் கொண்டு இருந்தார்கள். அந்த நேரத்தில் தான் அந்த வழியே வந்து சேர்ந்தது கோவை தமிழ்நாடு வேளாண்மைக் கல்லுரியைச் சேர்ந்த பேரூந்து.
அந்த பேரூந்திலே வந்தவர்கள் எந்தக் கட்சியைச் சார்ந்தவர்களும் இல்லை. எந்த அமைப்பைச் சார்ந்தவர்களும் இல்லை. ஆனால் பசியோடு இருந்த வெறிபிடித்த மிருகங்கள் கண்ணில் படும் எதையுமே கடித்துக் குதறுவது போல அந்த பேரூந்தினை வழிமறித்தது அந்த நாசகாரக் கூட்டம். தங்கள் தலைவிக்கு இப்படி ஒரு தீர்ப்பினை வழங்கிவிட்டு நீங்கள் மட்டும் நிம்மதியாக சுற்றுலா செல்கிறீர்களா என சத்தம் பீறிட தங்கள் கைகளில் தயாராய் இருந்த பெட்ரோல் கேன்களை தூக்கி அந்த பேரூந்தை அபிஷேகிக்க ஆரம்பித்தார்கள் அந்த இரக்கமற்றவர்கள்.
பெட்ரோல் வாசனை புகையாய் மாறும் போது அந்த பேரூந்துக்குள்ளே இருந்த அப்பாவி மாணவிகளுக்கு நடக்கும் விபரீதத்தை புரிந்து கொள்வதற்குள் அந்த கொடூர கூட்டம் பேருந்தின் இரண்டு வாசல்களையும் பூட்டிவைத்தது. அப்பாவி மாணவிகள் செய்வதறியாது அங்குமிங்கும் ஓடியபடி தப்பிக்க முயற்சி செய்ய நடந்த களேபரத்தை உணர அந்த பேரூந்திலே நாம் பயணம் செய்திருந்தால் தான் தெரிந்திருக்கும். பிள்ளைகளை வேளியேற்ற எவ்வளவோ கெஞ்சியும் கூட எதைப்பற்றியும் கவலைப்படாத அந்த கும்பல் அந்த பேரூந்துக்கு தீவைத்தது. பாவம் எவ்வளவோ முயன்றும் வாசல்படி வரை அடைந்த அந்த மூன்று மாணவிகளும் அதற்கு மேல் தங்களின் முயற்சி பலனளிக்காது என முடிவு செய்து அந்த கொடூர தீயின் நாக்குகளுக்கு தங்கள் பூமேனியை தீனியாக்கினார்கள்.
கண்ணுக்கு கண்ணாய் பொத்தி வளர்த்த அருமைப் பிள்ளைகளை எரிந்து போன கரிக்கட்டைகள் போன்ற கோலத்தில் பார்த்த பெற்றோர்களின் நிலை எவ்வாறு இருந்திருக்கும்??? தீயின் தாக்கம் பட வேண்டாம் தங்கள் பிள்ளைகளுக்கு என கருதி அடுப்படியில் இருந்து விடுத்து படிக்க அனுப்பிய பிள்ளைகள் அந்த அடுப்பின் விறகாய் மாறியிருந்தால் அதைப் பார்த்த பெற்றவர்களுகு எப்படி இருந்திருக்கும். சிலவற்றை விளக்கிட முடியாது. அதை அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும் அதன் உயிர்வலி

தங்களின் வீட்டில் இருக்கும் மனைவி, பிள்ளைகளை நடுரோட்டில் வைத்து தீவைத்து தங்களின் எஜமான விசுவாசத்தை வெளிப்படுத்தி இருக்கலாமே? அல்லது உண்மைத் தொண்டர்கள் தங்களின் மீது பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து ஒரு புரட்சியை செய்திருக்கலாமே? தீயின் அகோரத் தாண்டவத்தில் அந்த இளம் நிராயுதபாணிகள் எத்தனை சிரமம் அனுபவித்து இருப்பார்கள். தீக்குச்சியின் தாக்கம் கூட தாங்காத மாணவிகள் முழுமையாய் சூழ்ந்து எரியும் தீ நாக்குகளுக்கும் தங்கள் தோழிகளை ஒருவரை ஒருவர் காப்பாற்ற முயன்று கடைசியாய் தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்ட அந்த கடைசி நிமிடங்களின் ரணவலிகள் இந்தக் குற்றவாளிகளுக்கு உணர்த்தப் படவேண்டும்.
ஓட்டுப் பெட்டியின் வாசத்தை ஒருமுறை கூட நுகர்ந்திராத மலர்களைக் கொழுத்தி தங்களின் தலைவிக்கு தீபாவளி கொண்டாடிய இந்த அயோக்கியர்களை மீண்டும் மீண்டும் உயிர் கொடுத்து எத்தனை முறை தூக்கிலிட்டாலும் தகும்.
already seen this




துயரத்தை மறந்திருக்கும் அக்குடும்பம் இவ்வினைக் காணும் பட்சத்தில் மேலும் துன்பம் அடைவர்.
ஆகையால் குற்றவாளிகள் என்று நிருபிக்கப் பட்டக் கயவர்களுக்கு குறைந்த பட்ச்சத் தண்டனையாக தூக்குத் தண்டனை வழங்கும் படி நான் மக்கள் மன்றத்தில் வேண்டிக் கொள்கிறேன்