கொலை செய்பவனை கூலிப்படை என்கின்றோம். அவனுக்கு அது தான் தொழில். நான் பத்தாயிரம் கொடுத்தால் உன்னைக் கொல்லுவான், நீ பத்தாயிரத்து ஐநூறு கொடுத்தால் என்னைக் கொல்லுவான். இந்த கூலிப்படையினர் ஒரு சக மனிதனை துடிக்கத்துடிக்க சாகடிக்கிறோமே என்று என்றைக்குமே நினைத்துப் பார்ப்பதேயில்லை. அவர்களுக்குத் தேவை பணம் மட்டும் தான். சாதாரணமாக பழிக்குப் பழிவாங்கும் கொலையில் ஒரு வெறி இருக்கும். ஆனால் இந்தக் கூலிக்கொலையில் அந்த வெறி இருக்காது. வாங்கிய காசுக்காக முன்பின் தெரியாத யாரோ ஒரு நபரை கதறக் கதற அரிவாளால் வெட்டி, கத்தியால் குத்தி, கழுத்தை அறுத்து அவரின் உயிர் பிரியும் வரை அருகிலேயே இருந்துவிட்டு எதுவுமே நடக்காதது போல போலீஸில் சரணடைவார்கள் அல்லது தலைமறைவாகி விடுவார்கள். இவர்கள் தெருவில் நடமாடினால் இவர்கள் கொலைகாரர்கள் என பலருக்கும் அடையாளம் தெரியும்.
ஆனால்....,

ஒரு இதைவிடக் கொடூரமான கூலிப்படை மக்களோடு மக்களாகக் கலந்து இருந்து நல்லவர்களாக வாழ்ந்து காலாவதியான மருந்துகளை மறுவிற்பனை செய்து தற்போது மாட்டிக்கொண்டிருக்கிறது. மேலே சொன்ன கூலிப்படையினருக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாயம்? இந்த மருந்து வியாபாரிகளை ஒப்பிடும் போது கூலிப்படையினர் எவ்வளவோ மேல். காரணம் அவர்கள், அவர்களுடைய இலக்கினை மட்டுமே தாக்குவார்கள். சுற்றி நிற்கும் மற்றவர்களுக்கு அதிகபட்சம் தீங்கிழைக்க மாட்டார்கள். ஆனால் இந்த போலி மருந்து வியாபாரிகள் மக்களின் தொண்டைக்குள் கையைவிட்டு நுரையீரலைப் பிடுங்குபவர்கள்.

சென்னை நூறடி சாலையில் இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு பிரபல மருந்து நிறுவனம் தன்னிடம் இருக்கும் காலாவதியான மருந்துகளை கொடுங்கையூரில் இருக்கும் ஒரு குப்பைகிடங்கில் கொட்டுவது வழக்கம். இந்த நிலையில் குப்பையில் கொட்ட வருபவர்களிடம் அந்த மருந்துகளை கொடுங்கையூர் முத்தமிழ் நகரைச் சார்ந்த ரவி என்பவன் குறைந்த விலைக்கு வாங்கி அதை கோயம்பேட் சின்மயா நகரில் இயங்கிவரும் மீனா ஹெல்த் கேர் என்ற போலி மருந்து கம்பெனியிடம் விற்றுள்ளான். அந்த மீனா ஹெல்த் கேரின் உரிமையாளர் மீனாட்சிசுந்தரம் என்பவன் அந்த மருந்துகளைப் பிரித்து , அதே பெயரில் அச்சடிக்கப்பட்ட புதிய போலி அட்டைகளில் அதை பேக்கிங் செய்து புதிய தேதியைப் போட்டு மறுசுழற்சி விற்பனைக்கு அனுப்பியுள்ளான். இது போலி மருந்து என்றே தெரிந்தும் அதிக லாபம் கருதி மருந்துக் கடை உரிமையாளர்கள் அதை வாங்கி விற்றும் உள்ளனர்.
இந்தத் தொழிலை அவர்கள் பல ஆண்டுகளாகச் செய்துள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்த மீனா நிறுவனத்தின் மீது புகார்கள் கசிய ஆரம்பித்த நிலையில் முக்கியமான சில அதிகாரிகளுக்கு வாய்க்கரிசி போட்டு அவர்களின் வாயை அடைத்திருக்கிறான் இந்த மீனாட்சி. ஒரு குறிப்பிட்ட மருந்துக் கம்பெனி, தங்களின் மருந்துகள் தாங்கள் நிர்ணயித்த விலையை விட குறைந்த விலையில் பேக் செய்யப்பட்டிருப்பதை கண்டறிந்து காவல்துறைக்கு புகார் கொடுக்கவே, காவலின் துரித நடவடிக்கையில் முத்தமிழ் நகர் ரவியின் மனைவி கைது செய்யப்பட்டு அவளின் வாக்குமூலத்தின் பெயரில் இப்போது மீனா ஹெல்த் கேருக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அத்தோடு பிரகாஷ்,மீனாட்சி சுந்தரம்,ரவி மற்றும் மணி என போலிகள் வியாபாரிகள் வரிசையாக கைது செய்யப்பட்டுள்ளார்கள்.இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மருந்துகளில் பெரும்பாலானவை இதயநோய் சம்பந்தப்பட்ட மருந்துகளும், கர்பிணிகள் பயன்படுத்தக் கூடிய மருந்துகளுமே ஆகும்.
இதைவிடக் கொடுமை இந்த போலி மருந்துகள் விவகாரம் வெளியானது முதல் இன்றுவரை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தினமும் லட்சக்கணக்கான போலி மருந்துகள் குப்பைகளில் கொட்டப்படுகின்றன. பல இடங்களில் அதிகாலைப் பொழுதில் இந்த மருந்துக் குவியல்கள் தீவைத்து எரிக்கப்படுகின்றன. இந்த சம்பவங்களுக்கும் இந்த போலி மருந்து கும்பல்களுக்கும் சம்பந்தம் இல்லாமல் கூட இருக்கலாம். ஆனால் இவர்கள் சிக்கிய மறு நிமிடம் முதல் இப்பொழுது வரை தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொரு மருந்து கடைகளும் தங்களின் காலாவதி மருந்துகளை அழிப்பதில் முனைப்பு காட்டிவருகின்றன. இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது யாதெனில் இப்போது மாட்டிக்கொண்டவர்கள் மட்டுமின்றி தமிழகத்தில் இருக்கும் அதிகபட்ச மருந்துக் கடைகளிலும் இது போன்ற போலிமருந்துகள் இத்தனை நாட்களும் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகின்றது. வழக்கம் போல எல்லாம் முடிந்து கடைசியாய் வரும் துருப்பிடித்த அரச எந்திரம், அனைத்தையும் அழித்துவிட்ட பிறகு மிச்சமிருக்கும் மருந்துகளைச் சோதனை செய்து நற்சான்றிதழ் கொடுத்து வருகிறது. இவர்களுக்கு இனி இதுபோல் புகார் வந்தால் நடவடிக்கை எடுப்பார்களாம். ஆக இவர்களாக கண்டுபிடிக்க மாட்டார்கள்.

கல்வியும் மருத்துவமும் என்றைக்கு வியாபாரம் ஆக்கப்பட்டதோ அன்று முதலே அதன் விளைவுகள் இந்த மாதிரி வடிவத்தில் பிரதிபலிக்க ஆரம்பித்து விட்டன. மருந்துக் கடை உரிமையாளர்கள் இது போன்ற போலி மருந்துகளை மட்டும் விற்பனை செய்வது இல்லை. இன்னொரு வேலையும் செய்கிறார்கள். அதாவது இவர்களின் பிரிஸ்கிரிப்சன் செல்லும் மருத்துவர்களிடம் அதிகப்படியான மருந்துகளை எழுதச்சொல்லி அவருக்கும் சில சதவிகிதம் கமிசனைக் கொடுக்கிறார்கள். உதாரணமாக ஒரு வியாதிக்கு 3 வேளை மருந்து போதுமான நிலையில் அந்த கமிசன் மருத்துவர்கள் 10 நாளைக்கு மருந்து எழுதிக்கொடுக்கின்றனர். ஆக வியாதிகளும் இப்போது உண்டாவது இல்லை , அது உண்டாக்கப்படுகிறது. ஸ்வீட் கடை, டாஸ்மாக் கடைகளுக்கு இணையான கூட்டம் இப்போது மருந்துக்கடைகளில் அலைமோதுகிறது.
அசைவ உணவு உட்கொள்ளாதவர்கள் மருந்து என்று வந்துவிட்டால் மீன் எண்ணெய்களில் இருந்து தயாரிக்கப்படும் மாத்திரைகள், மாட்டின் எலும்பு மஜ்ஜையில் இருந்து தயாரிக்கப்படும் நாய்கடி மருந்துகள் என அத்யாவசிய மருந்துப் பொருட்களை பயன்படுத்துகின்றனர். ஆக மருந்து என்பது நம்பிக்கையின் அடிப்படையில் உயிர்காக்கக்கூடியது.
அப்படி உயிர்காக்கும் ஒரு பொருளை உயிரை மாய்க்கும் ஒரு பொருளாக மாற்றி விட்ட இந்த கொடியவர்களின் செயல் எல்லா பாவங்களுக்குமே முன்னோடியானதாகும். வியாதி குணமாக மருந்து கேட்பவர்களுக்கு இப்படி போலி மருந்துகளைக் கொடுப்பது என்பது கடும் தாகமாய் தண்ணீர் கேட்டவனுக்கு விசத்தைக் கொடுத்த பாவத்திற்கு சமமாகாதா?
மருந்துப் பொருட்களின் அவசியம் நமக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அது ஒரு இனத்திற்கு நன்கு தெரியும். அன்றைக்கு மட்டும் அந்த மருந்துகள் கிடைத்திருந்தால் எத்தனையோ உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம். எதிரிகளின் செல்லடிகளில் சிதைந்த உடலில் ரத்தம் கொட்டக்கொட்ட அட்லீஸ்ட் ஒரு வலி நிவாரணியாவது கிடைக்காதா என ஏக்கத்தோடு அழுதவர்களை நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? என் உடல் ஏன் வலிக்கிறது? ஏன் இரத்தம் கொட்டுகிறது? நான் இவ்வளவு அழுதும் என் அம்மா ஏன் எதுவும் செய்யாமல் அவளும் சேர்ந்து என்னோடு அழுகிறாள்? எறும்பு கடித்தாலே அந்த அழுகை கேட்டு அந்த இடத்தில் மருந்து தடவும் என் தாய் இன்றைக்கு என் விரல்கள், கைகள்,கால்கள் துண்டாடப்பட்டுள்ள போதும் ஊமையாக அழுதுகொண்டிருக்கிறாளே! ஏன் என்று பதில் தெரியாத பல கேள்விகளை தங்களுக்குள்ளே கேட்டுக்கொண்ட அந்தப் பிஞ்சுகளுக்குத் தெரியும் மருந்துகளின் தேவை.
தாய்க்கும்,தாரத்திற்கும்,தமக்கைக்கும் வித்தியாசம் தெரியாமல் காசுக்காக வேண்டி யாரை வேண்டுமானாலும் விபசாரத்தில் தள்ளுபவர்களுக்கும், போலி மருந்து விற்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்? தன் சொந்த மக்களையே திட்டமிட்டு வேட்டையாடி துடிக்கத்துடிக்க வெட்டிக்கொன்ற நரேந்திர மோடி,ராஜபக்சே வகையராக்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்? போலி மருந்துகளை தயாரிப்பவர்கள், வினியோகிப்பவர்கள், விற்பவர்கள், அதற்கு வேலை செய்பவர்கள், காசை வாங்கிக்கொண்டு அதை கண்டு கொள்ளாமல் விடுபவர்கள் என அனைவரும் குற்றவாளிகளே! இவர்களுக்கு குறைந்தபட்ச தண்டனையே மரணம் தான். இவர்களின் மரணம் இரகசியமாக ஆகக்கூடாது. நடு ரோட்டில் நிற்க வைத்து கல்லால் அடித்து துடிக்கத்துடிக்க கொல்ல வேண்டும். இவர்களிடம் இரக்கம் காட்டினால் இவர்கள் மீண்டு(ம்) வந்து இந்த உயிர்குடிக்கும் தொழிலைத் தான் செய்வார்கள். அரச இயந்திரம் இனியாவது கவனிக்குமா?


//கல்வியும் மருத்துவமும் என்றைக்கு வியாபாரம் ஆக்கப்பட்டதோ அன்று முதலே அதன் விளைவுகள் இந்த மாதிரி வடிவத்தில் பிரதிபலிக்க ஆரம்பித்து விட்டன.//
இந்த வார்த்தைகள் நிதர்சனமான உண்மைகள்.
//Jafar Safamarva said...
//கல்வியும் மருத்துவமும் என்றைக்கு வியாபாரம் ஆக்கப்பட்டதோ அன்று முதலே அதன் விளைவுகள் இந்த மாதிரி வடிவத்தில் பிரதிபலிக்க ஆரம்பித்து விட்டன.//
இந்த வார்த்தைகள் நிதர்சனமான உண்மைகள்.//
நன்றி ஜாபர்,.தொடர்ந்து இணைந்திருங்கள்