அங்காடித் தெரு குறித்து நூறு அல்லது நூற்றைம்பதற்கும் மேற்பட்ட விமர்சனங்கள், அலசல்கள் வந்திருக்கலாம் என நினைக்கிறேன். இதற்கு மேல் நானும் எழுதினால் அது எடுபட வாய்ப்பு இருக்காது என நினைத்து கிட்டத்தட்ட 4 நாட்களாக எழுதுவதா வேண்டாமா என ஒரு பெரிய குழப்பத்திற்குள்ளாகி எழுதியே ஆவது என்ற முடிவெடுத்து தான் இந்தப் பதிவு. இவ்வளவு பதிவர்கள் தங்களின் கருத்துக்களைத் மழையாய்த் தூவி விட்டதால் எனது கருத்துக்களுக்கு இடமிருக்குமா என்பது தெரியவில்லை. இசை பிரமாதம், பாடல்வரிகள் அமர்களம், திரைக்கதை பின்னிட்டார் என நானும் அதே மாவை அரைத்தால் அது நான் படிப்பதற்கே பிடிக்காது. ஆனாலும் அங்காடித்தெரு சொல்லும் விசயம் நாமும் அன்றாடம் கானும் சாதாரண வாழ்க்கையின் ஒரு சிறுகீற்று என்பதை உணர்ந்தே ஆகவேண்டும்.

வாரம் 6 நாட்கள் வேலை செய்து ஒரு நாளில் மதியம் 12 மணிக்கு எழுந்து குளிப்பதற்கு அலுப்புபட்டு நேராக டிவியின் முன் அமர்ந்து விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்து மதியம் உணவருந்தி மீண்டும் மாலை வரை ஒரு தூக்கம் போட்டுவிட்டு மீண்டும் எழுந்து நண்பர்களுடனோ அல்லது குடும்பத்தினருடனோ பீச்,பூங்கா,சினிமா,சாப்பிங் என இனிமையாக கழிப்பது ஒரு ரகம்.
ஆனால் ஞாயிற்றுக்கிழமைக்கும் கூட அதே 6 மணிக்கு எழுந்து வழக்கமான தன் வேலைகளைச் செய்து சாதரண நாட்களை விட அதிகமாக அன்றைக்கு வேலை செய்பவர்கள் ஒரு ரகம். இந்த இரண்டாவது ரகத்தினர் தான் நாம் வாழும் இந்தியாவில் அதிகம். இந்தியாவை விட நமக்குத் தெரிந்த தமிழகத்தில் வாழும் மக்களில் 70% பேர் சுயதொழில் புரிபவராக அல்லது அன்றாடக் கூலியாகத்தான் இருக்கிறார்கள்.

நானும் ஒரு காலத்தில் அன்றாடக்கூலி தான். படித்து முடித்து எந்த விதமான வழிகாட்டுதலும் இன்றி மலேசியா நோக்கி வேலை தேடிச்சென்றதில் நான் கண்ட தோல்வியை வெற்றிப்படிக்கட்டாக மாற்றுவதற்கு ஒரு ஓட்டலில் வேலைக்கு சேரவேண்டிய நிர்பந்தம். அல்லது உடணடியாக ஊர் திரும்ப வேண்டிய நிலை. என் நண்பர்களில் ஒருவர் விடாமல், என் குடும்பத்தில் ஒரு நபர் விடாமல் எல்லோரிடமும் வெளிநாட்டுக்கு பயணம் செல்கிறேன் என சொல்லிவிட்டு ஒரே நாளில் திரும்பினால் எப்படி இருக்கும்.
அந்த அவமானத்திற்கு பயந்தே கிடப்பது கிடக்கட்டும் என ஒரு ஓட்டலில் சப்ளையாராக வேலைக்குச் சேர்ந்தேன். ஒரு நாளைக்கு 25 ரிங்கிட் சம்பளம். காலை 7 மணி முதல் இரவு 7 வரை வேலை. மலேசியாவைப் பொருத்தவரை பிரதானத்தொழில் சாப்பாட்டுக் கடை என்பதால் அங்கே 24 மணி நேரமும் பிசியாக தான் இருக்கும். இந்த 12 மணி நேரமும் பம்பரமாய் சுழன்று வரவேண்டும். கொஞ்ச நேரம் கூட உட்கார முடியாது. வாடிக்கையாளர்கள் வந்துகொண்டே இருப்பார்கள். மாலை 4 மணி முதல் 5 மணி வரை கொஞ்சம் ஓய்வு இருக்கும். ஆனால் அந்த நேரத்தில் தான் பெருக்கித் துடைக்க வேண்டும். வேலைக்குச் சேர்ந்த புதிதில் என் கால்கள் வீங்கிவிட்டன. கரும்பு மிசினில் பிழியப்பட்ட சக்கையாய் தங்குமிடத்திற்குத் திரும்புவோம். வந்த களைப்பில் கொஞ்ச நேரம் தூங்கி பின்னர் எழுவோம் என லேசாக சாய்ந்து எழுந்தால் மணி காலை 6 ஆகிவிடும். இரவு கொண்டு வந்த உணவு அப்படியே இருக்கும். எப்போது தூங்கினோம், எப்படி தூங்கினோம் என எந்த விதமான அறிகுறியுமே இருக்காது. அந்த அளவிற்கு உடல் களைப்பு இருக்கும். ஒருவருடம் தொடர்ந்து இந்த வேலையைப் பார்த்தேன். அந்த ஒரு வருடத்தில் 365 நாட்களும் விடுமுறை கிடையாது. முஸ்லீம்களின் முக்கிய இரண்டு பண்டிகைகளான ரம்ஜானுக்கும், பக்ரீத்துக்கும் கூட விடுமுறை கிடையாது. அந்த 365 நாட்களும் நான் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் வேலை செய்தேன். அதை விட அந்த ஒரு வருடமும் ஒரு நாள் இரவு கூட என்ன கணவு கண்டோம் என நினைவிருக்காது. அந்த அளவிற்கு அசதியாக, உடல் வலியாக இருக்கும்.

ஏதேனும் காய்ச்சல் தலைவலி வந்து மிகக்கடுமையாக உடல் பாதிக்கப்பட்டாலும் கூட அங்கே விடுமுறைக்கு அனுமதி கிடையாது. மீறி விடுமுறை எடுத்தால் அடிஉதை தான். நான் ஒருவருடம் முடிந்து திரும்பும் போது என் கடை முதலாளி என்னை அழைத்து நீ தொடர்ந்து இங்கேயே வேலை செய் என்றார். நான் அவரிடம் என் படிப்பு குறித்து சொன்னேன். ஆச்சரியப்பட்டார். ஏன் இத்தனை நாளும் இதை மறைத்தாய் என்று கேட்டார்? இல்லை நான் பட்டதாரி என்று சொல்லிக்கொண்டால் அந்த பெருமை என்னை வேலை பார்க்க விடாது. அதனால் தான் யாரிடமும் சொல்லவில்லை என்றேன். அவர் ஒன்றும் சொல்லவில்லை. நானும் இந்தியா திரும்பி விட்டேன். அதிலிருந்து நான் எங்கு சாப்பிடச் சென்றாலும் அந்த கடையிலே வேலை செய்யும் சர்வர்களை கடிந்து கொண்டதே கிடையாது.
ஒருமுறை தெரியாத்தனமாக ஒரு சர்வர் என் மீது சாம்பாரைக் கொட்டிவிட்டார். என் சட்டை முழுவதும் சாம்பாராகி விட்டது. ஆறிப்போய் இருந்ததால் அதை நான் கையால் துடைத்தவாறு அவரைப் பார்த்தேன். அவர் மிகவும் பயந்துவிட்டார். பலமுறை மன்னிப்புக் கேட்டார். நான் ஒரே முறை சொன்னேன். பரவாயில்லை அய்யா! நானும் ஒரு சர்வர் தான் என்று. அவர் நெகிழ்ந்து விட்டார். என் கையைப் பிடித்து மீண்டும் மன்னிப்புக் கேட்டார். நான் பரவாயில்லை என்று சொன்னேன். நான் கைகழுவி விட்டு பில் கொடுக்கப் போகும் முன்பாக எனக்காக அவர் பணத்தை கட்டிவிட்டார். வேண்டாம் என்று நான் எவ்வளவோ சொல்லியும் அவர் பிடிவாதாமாக மறுத்துவிட்டார்.
நாம் நமது நண்பர்கள் இன்றைக்கு அங்காடித் தெரு படத்தைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதிவிட்டோம். ஆனால் அங்கேயிருக்கும் கொடுமைகளைப் பட்டியலிடும் நாம் நம்மில் எத்தனை பேர் அந்தத் தொழிலாளர்களிடம் கடிந்து கொள்ளாமல், அவர்களை அலட்சியம் செய்யாமல், அவர்களை கிண்டல் செய்யாமல் இருந்திருக்கிறோம். சிலர் பொழுதுபோக்கிற்காகச் சென்று அவர்களிடம் வேலை சொல்லி பழிவாங்கும் சம்பவங்கள் கூட நம்கண் கூடு தான். மூன்று பத்து ரூபாய் என ஏதாவது ஒரு பொருளை நம்மிடம் யாராவது காட்டினால் நாம் எத்தனை பேர் அன்பாக வேண்டாம் என்று மறுக்கிறோம்? வேணாம் போய்யா என அவர்களை முகத்தில் அறைந்தாற் போல் விரட்டி விடுகிறோம்.
எத்தனையோ சேல்ஸ் ரெப்கள் ஏதாவது ஒரு பொருளை நம்மிடம் நீட்டும் போது நமக்கு ஆத்திரம் தான் வருகிறது. என்னையும் சேர்த்து தான். இந்த சினிமாவில் காட்டப்படும் கொடுமைகளும், உழைப்புச் சுரண்டல்களும், தீபாவளிக்கு நள்ளிரவு வரை வேலை செய்யும் வேலையாட்களும், அவர்களின் சுதந்திர பறித்தலும் இன்று நேற்றா நடக்கிறது? இந்தப் படம் அதைச் சொன்னதால் நாம் இன்றைக்கு அவர்களைப் பற்றி பேசுகிறோம். இத்தனை நாள் நமக்குத் தெரியவில்லை அல்லது கண்டும் காணாமலும் விட்டுவிட்டோம். இப்போது அங்காடித் தெரு படம் வெளியான பிறகு அண்ணாச்சிகளின் அநியாயங்களை வரிக்கு வரி பட்டியலிடும் நாம், நாமும் அந்த உழைப்பாளர்களுக்கு மனதளவிலாவது தீங்கிழைத்திருக்கிறோம் என்பது லேசாக நமக்கு புரிய ஆரம்பிக்கும் போது, தெரிந்த இந்த ஒரு அங்காடித் தெரு கொடுமைகளும் இன்னமும் தெரியாத பல அங்காடித் தெருக்களில் வேலை செய்யும் அடிமைத் தொழிலாளர்கள் முதலாளியிடமும் அடிவாங்கி கஸ்டமர்களிடமும் கடிவாங்கும் நிலை மாறும்


good one !!
உங்கள் எழுத்தை வாசித்து எனக்குக் கண் கலங்கியது. உங்கள் காலம் தாழ்ந்த பதிவுக்குப் போதுமான பின்னூட்டம் வரவில்லையானாலும் கவலைப் படாதீர்கள். ராஜசுந்தரராஜன் என்றொரு கவிஞன் பாராட்டினான் என்று பெருமை பெறுங்கள். வாழ்க!
நன்றாக எழுதியிருக்கிறீர்கள்...
//இதற்கு மேல் நானும் எழுதினால் அது எடுபட வாய்ப்பு இருக்காது என நினைத்து கிட்டத்தட்ட 4 நாட்களாக எழுதுவதா வேண்டாமா என ஒரு பெரிய குழப்பத்திற்குள்ளாகி //
அப்படியெல்லாம் எப்பவும் யோசிக்காதீர்கள். இப்ப பாருங்க... உங்கள மாதிரி யாராச்சும் எழுதியிருக்காங்களா?
//நான் பட்டதாரி என்று சொல்லிக்கொண்டால் அந்த பெருமை என்னை வேலை பார்க்க விடாது. அதனால் தான் யாரிடமும் சொல்லவில்லை என்றேன். அவர் ஒன்றும் சொல்லவில்லை. நானும் இந்தியா திரும்பி விட்டேன். அதிலிருந்து நான் எங்கு சாப்பிடச் சென்றாலும் அந்த கடையிலே வேலை செய்யும் சர்வர்களை கடிந்து கொண்டதே கிடையாது. //
என்ன, தலைப்பிற்கு சம்பந்தமில்லாமல் சொந்தக் கதையாக
இருக்கிறதே என்று பார்த்தேன்.
ஆனால், இது நீங்கள் மனம் நொந்தக் கதை; அடுப்பிலும்
அனலிலும் வெந்தக் கதை என்று பிறகு தெரிந்தது.
எனது மனம் நெகிழ்ந்தது. நமக்கு சர்வீஸ் செய்யும்
சர்வர்களை, பிரதிநிதிகளை நாமும் மதிக்க்வேண்டும்
என்பதை உங்கள் அனுபவம் வாயிலாக அறிந்து கொண்டோம்.
சரியாகச் சொன்னீர்கள். இந்த மாதிரி தீங்கிற்கு நாம் அந்த கடைகளில் வாங்காமல் இருப்பதே, இந்த மாதிரி முதலாளிக்கு நாம் கொடுக்கும் சவுக்கடி.
This is what blogging is all about. Just tell what you want to.
இன்னோரு நிஜாம் முத்திரை. சபாஷ்
//மின்னுது மின்னல் said...
good one !!
//
நன்றி மின்னல்! தொடர்ந்து வாங்க
//rajasundararajan said...
உங்கள் எழுத்தை வாசித்து எனக்குக் கண் கலங்கியது. உங்கள் காலம் தாழ்ந்த பதிவுக்குப் போதுமான பின்னூட்டம் வரவில்லையானாலும் கவலைப் படாதீர்கள். ராஜசுந்தரராஜன் என்றொரு கவிஞன் பாராட்டினான் என்று பெருமை பெறுங்கள். வாழ்க!//
அன்புக்கு மிக்க நன்றி கவிஞரே! உங்கள் ஆதரவு தொடர்ந்து வேண்டும்.
//சரவணகுமரன் said...
நன்றாக எழுதியிருக்கிறீர்கள்...
//இதற்கு மேல் நானும் எழுதினால் அது எடுபட வாய்ப்பு இருக்காது என நினைத்து கிட்டத்தட்ட 4 நாட்களாக எழுதுவதா வேண்டாமா என ஒரு பெரிய குழப்பத்திற்குள்ளாகி //
அப்படியெல்லாம் எப்பவும் யோசிக்காதீர்கள். இப்ப பாருங்க... உங்கள மாதிரி யாராச்சும் எழுதியிருக்காங்களா?//
ஊக்கம் தரும் அருமையான பின்னூட்டம். நன்றி சரவணகுமரன். தொடர்ந்து வாங்க!
//NIZAMUDEEN said...
என்ன, தலைப்பிற்கு சம்பந்தமில்லாமல் சொந்தக் கதையாக
இருக்கிறதே என்று பார்த்தேன்.
ஆனால், இது நீங்கள் மனம் நொந்தக் கதை; அடுப்பிலும்
அனலிலும் வெந்தக் கதை என்று பிறகு தெரிந்தது.
எனது மனம் நெகிழ்ந்தது. நமக்கு சர்வீஸ் செய்யும்
சர்வர்களை, பிரதிநிதிகளை நாமும் மதிக்க்வேண்டும்
என்பதை உங்கள் அனுபவம் வாயிலாக அறிந்து கொண்டோம்.//
நன்றி நிஜாம்! தொடர்ந்து வாங்க
// இராகவன் நைஜிரியா said...
சரியாகச் சொன்னீர்கள். இந்த மாதிரி தீங்கிற்கு நாம் அந்த கடைகளில் வாங்காமல் இருப்பதே, இந்த மாதிரி முதலாளிக்கு நாம் கொடுக்கும் சவுக்கடி.//
நிச்சயமா அண்ணே! அது புரியற காலம் வரும்ணே!
//Xathish said...
This is what blogging is all about. Just tell what you want to.
//
முழுசா படிங்க சார்!!
//வானம்பாடிகள் said...
இன்னோரு நிஜாம் முத்திரை. சபாஷ்//
நன்றிண்ணே! என்றும் உங்கள் ஆதரவு வேண்டும்.
முதலில் நீங்கள் ஒரு மனிதன் என்று உணருங்கள் ,அதே உணர்வோடு
மட்ரவரை பாருங்கள் ,எந்த காலத்திலும் மட்ரவரை தாழ்த்தி எடைபோடதிர்கள்
இந்த படம் எவளவு நாளைக்கு உங்கள் மனதில் நிற்கும் ?அனால் மேலே
சொல்லியதை கொள்கையாக கொண்டால் எந்த காலத்திலும் யாரும் இந்த
கொடுமைகளை அனுபவிக்க மாட்டார் .வாழ்துக்கள் அய்யா.